தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends


சட்டசபைத் தேர்தல் - ஓர் ஆய்வு

தமிழக வரலாற்றில் ஒரு புதுமையாக மிகவும் பரபரப்புடன் இந்த சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் ஜெயலலிதா வீழ்ந்தார்; கலைஞர் எழுச்சியுடன் நிமிர்ந்தார் என்பதோடு இந்த விசயம் முடிந்துவிட்டதாக நாம் நினைக்கவில்லை. இதில் பெரியதோர் ஆய்வுக்கு இடமிருக்கிறது - இலக்கிருக்கிறது!


ஜெயாவின் வீழ்ச்சி:

ஜெயலலிதா அவர்களை யாரும் வீழ்த்தவில்லை! அவர் உண்மையில் அவராகவே தன்னை வீழ்த்திக் கொண்டார் என்பதே உண்மை. கடந்த 5 ஆண்டுகளின் நிகழ்வுகளைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்கள்!

  • தன் தொண்டர்கள் அடிமைகள் என்று அவர் நினைத்தார். மந்திரிகளைக்கூட மதிக்கத் தவறினார்; அவர்களை பலமுறை மாற்றி மாற்றி அவமதித்தார்.
  • அரசு ஊழியர்களை அடிமைகள் போல நடத்தி அவர்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.
  • சாலைப் பணியாளர்கள் ஒரு பாவப் பட்ட சமுதாயம் - அவர்களைச் சித்திரவதைப் படுத்தி அவர்கள் வாழக்கையைச் சீரழித்தார்.
  • தொழிற்கல்வி நுழைவுத்தேர்வு குழப்படி- கல்விக்கட்டண உயர்வு இப்படி மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி பெற்றோர்களின் கசப்பை உருவாக்கினார்.
  • சமய அனுஷ்டானங்களில் அனாவசியத் தலையீடு செய்து வெறுப்பை ஏற்படுத்தினார்.
  • சட்டசபையை அவர் புகழ்பாடும் பஜனை மடமாக மாற்றினார்.
  • எதிர்கட்சிக்காரர்களை- தலைவர்களை எந்த அளவுக்கு அவமரியாதை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு அவமதித்தார். கலைஞர் கைது - வைகோ மீது பொடா இப்படி பல !
  • மாநில நலன் சார்ந்த விசயங்களில் மத்திய அரசுடனும் அண்டை மாநிலங்களுடனும் சுமுக உறவைப் பேணாமல் கசப்புணர்வை உருவாக்கினார்.
  • சிறுபான்மை மக்களை கட்டாய மதமாற்றுத் தடைச் சட்டம், மோடி ஆதரவுநிலை, இடஒதுக்கீடுபற்றி மறுத்துப் பேசியது, பாபரிமஸ்ஜித் விசயத்தில் ஆணவப்பேச்சு, முஸ்லிம் அமைச்சர் தமிழகத்துக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாடு, அப்பாவிச் சிறைவாசிகள் விசயத்தில் அலட்சியம் ... இப்படி பல சறுக்குதல்கள் மூலம் வெறுப்படையச் செய்தார்!
  • கடைசி நேரத்தில் 'சங்கரா... சங்கரா' எனும் வகையில் அந்தர் பல்டிகள்! ...


மக்கள் அவரது அணுகு முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தோற்றுப் போனதற்கு, எனவே, அவரேதான் காரணம்!

அவரை உருவாக்கிய எம்.ஜி.ஆர். கூட தன்னோடு இருந்த அறிவாளிகளின் ஆலோசனைக்குச் செவிசாய்ப்பவராய் இருந்தார். ஆனால் மேடம், தான் மட்டுமே அறிவாளி - தனக்கு நிகர் தான் மட்டுமே என்று அடாவடியாய் நின்றதுடன் , சசிகலாவைத் தவிர வேறு யாரும் நம்பத் தகாதவர்கள் என்று நினைத்தார். சமுதாயங்களைப் பிரித்தாளும் சுயநலமிகளை தேர்தல் காலத்தில் உள்ளிழுத்து ஊக்கப் படுத்தினார். மக்கள் அவர்களை ஓரம் கட்டினர்.

கலைஞரின் தொகுதிப் பங்கீடும் தேர்தல் அறிக்கைச் சாணக்கியமும்

கலைஞரின் அணுகுமுறை இந்த முறை யதார்த்த அரசியல் நிலைமையை முழுக்க முழுக்க உணர்ந்த நிலையில் இருந்தது.

  • வீம்பு பிடித்துக் கொண்டு வெளியேறிய வைகோவுக்கு டாடா சொன்னார்!
  • தாராள மனதுடன் தன்னோடு நின்ற கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதிகளைக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.
  • கூட்டணி மந்திரிசபை அமைப்பதில் ஆட்சேபணை இல்லை என்று அறிவித்து ராஜதந்திரத்தைக் காடினார்.
  • தேர்தல் அறிக்கை தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு விவாதப் பொருளாய் மாறும் அளவுக்கு ஒரு மாஸ்டர் பிளேன் போட்டார்.
  • தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த 83 வயதிலும் ஒரு இளைஞனைப் போல வீர முழக்கமிட்டார்.
  • நாகரிகமான விவாதங்களால் அசிங்கமான சினிமாக் கோமாளிகளின் (செந்தில் -எஸ். எஸ். சந்திரன் போன்ற) அருவருப்பான பிரச்சாரங்களை எதிர்கொண்டார்.
  • தரையிறங்கா சக்கரவர்த்தினியாக ஜெயா வலம் வந்த போது குடும்பப் பெரியவர்போல மக்களின் மனங்களுடன் உறவாடினார்.
  • கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து - இழைந்து பிரச்சாரம் செய்தார்...


அதற்குப் பரிசாக வெற்றிக் கனியை மக்கள் அவர்முன் அர்ப்பணித்தனர்!

கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு

கூட்டணிக்கட்சிகள் - குறிப்பாக காங்கிரஸ், தனது கோஷ்டிப் பூசலை ஒதுக்கி வைத்துவிட்டு இணைந்து செயல் பட்டன. அதிமுக போல குழந்தைத் தனமான விவாதங்களை முன்வைக்காமல் கடந்த அதிமுக ஆட்சி பற்றிய விமரிசனங்களையே முன்வைத்தன. முதல்வரின் கேள்விகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் - குறிப்பாக மத்திய அமைச்சர் சிதம்பரமும், ராமாதாஸ¤ம், வரதராஜன், நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்களும் ஆணித்தரமாக பதில் தந்தனர். விழைவு?

முதல்வரே இறங்கி வந்து இலவச அறிவிப்புகளை அறிவிக்க நேரிட்டது. மக்கள் அவரது இரட்டை நிலையைப் புரிந்து கொண்டனர். வாக்களிப்பில் தங்கள் நிலையைத் தெரியப் படுத்தினர்.

மக்களின் முதிர்ச்சியும் வாக்களிப்பில் காட்டிய ஆர்வமும்

மக்கள் தங்கள் முன் வைக்கப் படும் விவாதங்களை மௌனமாகச் செவி மடுத்தனர். எல்லாத் தலைவர்களின் கூட்டங்களுக்கும் கடலெனத் திரண்டு சென்று கேட்டனர். தங்கள் மனதுக்குள் ஒரு தீர்க்கமான முடிவுடன் தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளுக்குத் தாங்களாகவே சென்று வரலாறு காணாத அளவில் 70-க்கும் அதிகமான சதவீத வாக்குகளால் தங்கள் கருத்தைத் திட்ட வட்டமாகப் பதிவு செய்தனர்.

தேர்தல் கமிஷனின் அற்புதமான ஏற்பாடு

தேர்தல் கமிஷன் கட்சி வேறுபாடுகள் பார்க்காமல் முழுமையான திறமையை வெளிக்காட்டினர். முதல்வர் எதிர்க்கட்சியினர் என்று பார்க்காமல் தாட்சண்யமின்றி எச்சரிக்கை விடுத்தனர். அருமையான பாதுகாப்புக் கொடுத்தனர். முறைகேடுகள் இல்லாத - பாதுகாப்பும் அமைதியும் மிக்க ஒரு தேர்தலாக நடந்து முடிந்த தேர்தல் வரலாற்றில் பதிவுசெய்துகொண்டது. தேர்தல் கமிஷனுக்கு நம் பாராட்டுக்கள்!

மீடியாக்களின் பங்களிப்பு

இந்தத் தேர்தலில் இருபக்கமும் இரு டிவி நிறுவனங்கள் தங்கள் நிலைகளை மக்களிடம் திணிக்க முற்பட்டன. மக்கள் பார்த்தார்கள்; ரசித்தார்கள்; சிரித்தார்கள்! ஆனால் மயங்கிவிடவில்லை.

கடைசி நேரத்தில் சன் டிவி 'அரசியல் ஹீரோ'வான வைகோவையும் , 'பட உலக ஹீரோ'வான சரத்குமாரையும் அவர்கள் (தேர்தலுக்கு சில வாரங்கள் -மாதங்களுக்கு முன் கொடுத்த) ஒப்புதல் வாக்கு மூலங்களை வைத்தே நகைச்சுவை மன்னர்களாக்கியது இந்தத் தேர்தலில் 'நச்'சென்ற முத்திரை!

ஒரு ரூபாய்க்கு ஒரு நாளிதழ் என்ற புரட்சி மூலம் அதிகமாக பாதிக்கப் பட்ட ஒரு பிரபல நாளிதழ் ஜனநாயகக் கூட்டணியை எதிரிபோலவே பாவித்து நஞ்சை விதைத்துப் பார்த்தது; ஆனால் தோற்றது!

தங்கள் பிழைப்பில் அடிவிழுந்த அவஸ்தையில் விசு போன்ற சில மீடியாக் காரர்கள் சூரர்கள் போல வலம் வந்ததும் மக்களைக் கவரவில்லை. சறுக்கியது.

தேர்தல் கொடுத்த படிப்பினைகள்

இத்தேர்தலில் கிட்டத் தட்ட அனைவருமே படிப்பினை பெற்றுக் கொண்டனர்.

  • முதல்வர் தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்; தன் போக்கே சரி என்ற ஆணவம் இனி மக்களிடம் விலை போவது சிரமம். செய்வதையெல்லாம் செய்துவிட்டு தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு சில பல்டிகளும் சலுகைகளும் அறிவித்து ஜெயித்துவிடலாம் என்ற மனப் பான்மையில் மண் விழுந்துள்ளது.
  • கூட்டணி விசயத்தில் கலைஞர் காட்டிய முதிர்ச்சியினை அனைத்துத் தலைவர்களும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கோஷ்டி மனப் பான்மை தங்களுக்கே குழி பறிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • ஜாதியை மட்டும் மையமாக வைத்து அரசியல் செய்வது இனி தமிழகத்தில் சாத்தியமில்லை; மக்களிடம் அரசியல் முதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது.
  • விஜயகாந்த் எல்லோரும் நினைத்தது போல இன்னொரு வெத்து வேட்டு ரஜினி அல்ல; அவர் ஒரு திறமையான அரசியல் வாதியாக உருவாகிவிட்டார்; அடுத்த தேர்தலில் அவரது மார்க்கெட் மதிப்பே தனி! ஒவ்வொரு தொகுதியிலும் அவரது கட்சி வாங்கியுள்ள வாக்குகள் மலைக்க வைக்கின்றன.
  • பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டு தங்களது பலத்தைக் காட்டப் போவதாக ஒரு வருடமாக அறிவிப்புச் செய்து , இப்போது தமிழகத்தில் தங்களின் உண்மையான பலம் என்ன என்பதை "வரலாறுகாணாத டெபாஸிட் இழப்பு" களால் நன்கு புரிந்து கொண்டுவிட்டது! இதுவரை அடித்த ஜம்பத்துக்கெல்லாம் காரணம் அவர்களுக்குக் குந்திக்கொள்ள திராவிடக் கட்சிகள் கொடுத்த முட்டாள்த்தனமான முதுகுதான் என்பது சடங்குப் பூர்வமாகவே நிறைவேறியிருக்கிறது! அதிமுக - தெலுங்கு தேசம் - அஸ்ஸாம் கன பரிஷத் , விஜயகாந்த் எல்லோரும் 'எங்களை விட்டுவிடுங்கள் ஐயா' என்று ஏன் ஓடிப்போனார்கள் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்து போயிற்று!(பாவம் திருநாவுக்கரசர் ; அவருக்கு நிறையப் பாடம் கிடைத்திருக்கிறது)
  • முஸ்லிம்களுக்கு நன்மை செய்கிறோம் என்ற பெயரில் கடைசி நேர சம்பாத்தியத்துக்காக முதல்வரைச் சந்திக்கிறோம் என்ற பெயரில் சிலர் தயாரித்தளித்த ஓரங்க நாடகங்கள் மக்களிடம் விலை போகவில்லை. இந்த அனுபவங்களை அவர்கள் ஸீடிகளாகவும் சீரியல்களாகவும் போட்டு விற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
  • பாரம்பரியமிக்க முஸ்லிம் லீகையும் அதன் தலைமையையும் மனம்நோகச் செய்த நிகழ்வுகள் சில நடந்தாலும் -அவர்கள் அதைப் பொறுத்துக் கொண்டார்கள் ; அதற்காக லீகுக்கு மக்கள் 100 சதவீத வெற்றிகளை அளித்து கௌரவித்திருக்கிறார்கள்.



    நன்றி : நர்கிஸ் ஜூன் 2006 இதழ்

d வந்தார்- வென்றார்; சென்றார்!

தலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com