|
Refer
this Page to your friends
இருளும் ஒளியும்
உலக நாடுகளின் பார்வையில், நம் நாடு ஒரு காலத்தில்
ஏழைநாடாகவும், பின்தங்கிய நாடாகவும் இளக்காரத்துக்குரியதாக
இருந்தது.
இந்தியா என்றாலே கல்கத்தாவின் சேரிப்பகுதியும் ,
பிச்சைக்காரர்கள் தொந்தரவும்தான் என்று படமெடுத்துப்
போட்டு பல நாடுகள் கேலிபேசின. அந்தப் படங்களை எடுத்தவர்கள்
பரிசுகள் பெற்றுக் களித்தனர்; அதனை எடுத்துக்
கொடுத்தவர்களும் இந்தியர்களாகவே இருந்தது இன்னொரு
துரதிருஷ்டம்!
அந்நிய ஆட்சி கசக்கிப் போட்டுவிட்டுப் போன சுதந்திர
இந்தியாவுக்கு அநேக சவால்கள் இருந்தன. கல்வி, சுகாதாரம்,
சாலைவசதி, மின்சாரம், போக்குவரத்து என்று மலைக்க வைக்கும்
பணிகள்.
நாட்டைவிட்டு வெளியேறிய ஆங்கிலேயர்கள் நாட்டைப் பிரித்தது
மட்டுமின்றி, பிரதானமான இரண்டு மதங்களுக்குள்ளும்
குரோதங்களை உசுப்பிவிட்டுச் சென்றனர். மதக்கலவரங்கள்
அடிக்கடி! மக்கள் தொகைப் பெருக்கம் அச்சுறுத்தும்
அளவுக்கு. ஆக அடிப்படைப் பணிகளில் என்னதான் முன்னேற்றம்
இருந்தாலும் அவையெல்லாம் கடலில் பெருங்காயம் கரைத்த கதையாக
வெளியில் தெரியாமல் இருந்தன.
இந்தியா பெருமைப் பட்டுக் கொள்ளும் வகையில் சம்பாதித்து
வைத்திருந்தது அதன் உன்னதமான தலைவர்கள் சர்வதேச அளவில்
தேடி வைத்திருந்த நல்ல பெயரும்; மதச்சார்பின்மையை
வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்டமும், கலாசார /பண்பாட்டு
விழுமியங்களும்தான்!
காங்கிரஸ் தனித்து ஆண்ட காலம் மாறி பல தேசிய அரசியல்
கட்சிகள், மாநிலக் கட்சிகள் தோன்றியபோதும் இந்தியாவில்
ஜனநாயகம் தழைத்துக் கிளைத்தது. நம்மோடு சுதந்திரம் பெற்ற
நாடுகள் ராணுவ ஆட்சியில் நைந்தபோது நாம் உலகம் பார்த்து
வியக்கும் ஜனநாயகமாக தலைநிமிர்ந்து நின்றோம்.
வறுமை, லஞ்ச லாவண்யம், ஜாதிக்கலவரங்கள், அரசியல்
மாச்சரியங்கள், கீழறுப்பு சக்திகளின் சாகசங்கள் இப்படி
நம்மை முடக்கிப் போட்ட அத்தனை பின்னடைவுகளையும்
பின்னுக்குத் தள்ளிவிட்டு நம்மை இப்போது உலக அரங்கில்
முன்னுக்குக் கொண்டுவந்திருப்பது இந்த ஜனநாயகம்தான்!
இன்று உலகம் நம்மை கண்ணியத்துடனும் அதீத கவனத்துடனும்
பார்க்கிறது.செயற்கைக்கோள் , செலுத்துவாகனம் , தொலைஉணர்வு
, ஏவுகணை, ராணுவம் போன்ற தொழில்நுட்பங்களில் நமக்கு இன்று
உலகில் 4-வது இடம்!
சென்னை, கல்கத்தா, டில்லி என எங்குபார்த்தாலும் சேரிகளில்
மூக்குவழிய நின்ற சிறுவர்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம்
முன்னேறிய நாடுகள் என பீற்றிக் கொண்டிருந்த நாடுகளின்
வளர்ச்சித் திட்டங்களுக்கு வரை படம் போட்டுக் கொடுக்கவும்
வழிநடத்திச் செல்லவும் தகுதி வாய்ந்த நிபுணர்களாக
வரமுடிந்தது என்பதைப் பார்த்து வியந்து நிற்கிறது உலகம்!
இன்று நாம் உலகில் ஒரு விரைந்து முன்னேறும்
பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு பொருளாதார
வளர்ச்சி 9%. உலகவங்கியும் இதனை ஒப்புக் கொள்கிறது.
1991-ல் நாம் மாற்றியமைத்த நமது பொருளாதாரக் கொள்கைகள்
ஒருவகையில் காரணம் என்றாலும் , இன்று நம்மை இந்த அளவுக்கு
முன்னுக் கொண்டு வந்துள்ளது, எந்த மக்கள் தொகையைப் பற்றி
நாம் கவலைப்பட்டுக் கிடந்தோமோ அந்த மக்கள் வளம்தான் என்பதை
எண்ணிப்பார்க்க வேண்டும்.
"இத்தனை வயிறுகளா? சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம்?" என்று அஞ்சிக் கொண்டிருந்த நாம் "இத்தனை கோடிக் கரங்கள்
உழைக்கக் காத்திருக்கின்றனவே" என்று சிந்திக்கத் தவறியதால்
அந்த வீண் கவலை என்பதைக் காலம் நிரூபித்துக்
காட்டியிருக்கிறது.
உலகின் மிகப் பெரிய நுகர்வோர் சந்தையும், அன்றாடம்
பெருகிவரும் நிபுணத்துவக் கல்வி கற்றோர் எண்ணிக்கையும்
மக்கள் தொகை/ வளம் சார்ந்த விசயங்கள் அல்லவா?
ஒரு மேல்நாடு ஒரு நிபுணரை உருவாக்கும் நேரத்தில் நாம் ஒரு
நூறுபேரைத் தயார் செய்து விட முடிகிறது! அவர்கள் எவெரெஸ்ட்
என்று நினைத்து மலைத்து நிற்பதை நம் இளைஞர்கள்
புளியமரத்தில் ஏறுவதுபோலச் செய்து முடித்து விடுகின்றனர்.
மக்கள் வளத்துக்கு அவ்வளவு வலிமை !
அதற்கு வழியமைக்கும் ஜனநாயகத்துக்கு அவ்வளவு சக்தி !
அத்தனைக்கும் மேல், பாரம்பரம்பரியம் பாரம்பரியமாக நாம்
போற்றிப் பாதுகாத்து வரும் நல்லொழுக்க விழுமியங்கள்!
நமது முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் காரணங்கள் என்று நாம்
அடையாளம் காண்கிறோமோ அவையெல்லாமே இன்று அச்சுறுத்தலுக்கு
ஆளாகிவருவதுதான் இத்தலையங்கத்தின் வழி நாம் சுட்டிக் காட்ட
விரும்பும் விசயம்!
கட்சி அரசியலில் வன்முறையும் பலிவாங்கும் போக்கும், ஜாதிச்
சண்டைகள், அதிகார வர்க்கத்தில் பெருகிவரும் லஞ்ச ஊழல்கள்,
இளைஞர்களுக்கிடையே ஒழுக்கக் கேடுகள் , மக்கள் சட்டத்தைத்
தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் போக்குகள்,
உயிருடைமைக்குப் பாதுகாப்பற்ற சூழல்கள் இவையெல்லாம் நம்
முன்னேற்றத்துக்கான தடைக்கற்கள் மட்டுமல்ல ,
உயரத்திலிருந்து அதல பாதாளத்துக்குக் கீழே தள்ளிவிடும்
கொடூரமான ஆபத்துக்களுமாகும்
துரதிருஷ்ட வசமாக அது பற்றிய அச்சம் பரவலாக இல்லை; இத்தனை
முக்கியமான -ஜீவாதாரமான விசயங்களில் விளையாட்டுக்குக்
கொடுக்கும் முக்கியத்துவகூட இல்லை!
உலகக்கோப்பைப் போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியதைப்
பேசும் அளவுக்குக் கூட , மக்கள், உயர்கல்வி பெறும்
மாணவர்களும் தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர் பணியில்
இருக்கும் மாணவர்களும் குடித்துக் கும்மாளமிட்டு போதையில்
புரண்டது பற்றி விவாதிக்காதது நம்முள் அச்சத்தை
ஏற்படுத்துகிறது!
அதுபற்றிய நம் அக்கறையைப் பதிவு செய்வதுடன், நர்கிஸ் தன்
வாசகர்களை - குறிப்பாக பெற்றோர்களை அது பற்றி
எச்சரிக்கிறது.
நன்றி : நர்கிஸ்
மே -2007 இதழ்
Refer
this Page to your friends
|