தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends


முச்சந்தியில் முஷாரப்!.


அமெரிக்காவின் தூண்டுதலில் பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் முஷாரபுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு தன் தாய்நாட்டுக்குத் திரும்பிய திருமதி பெனாஸிர் புட்டோ படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.

• தாயகம் திரும்பிய அவர் தனது முஷாரப் ஆதரவு நிலையில் சில மாற்றங்களை பகிரங்கமாக அறிவித்ததையும், தனக்குப் போதிய பாதுகாப்பை அவர் தரவில்லை என்றும், தனக்கு எதேனும் நிகழ்ந்தால் அதற்கு முஷாரபே பொறுப்பு என்றும் அவர் தான் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு அனுப்பிய ஈமெயிலில் குறிப்பிட்டிருப்பதும் முஷாரபைக் குற்றவாளியாகக் காட்டுகின்றன!

• முஷாரப் பதவியிலிருந்து விலக சாமான்யமாக ஒப்புக் கொள்ளவில்லை. அதிலும் ராணுவத்தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுக்க அவர் சுலபமாக சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பணிந்தாக வேண்டிய கட்டாயம்! தேர்தல் மூலம் ஜனாதிபதியாகிக் கொண்டு பொதுத் தேர்தலை அறிவித்தார். பெனாஸிரின் கொலையைத் தொடர்ந்து இன்னொரு முன்னாள் பிரதமர் ஷாநவாஸ் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பதால் பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் மலர்வதற்கு மேற்கண்ட முயற்சி பெனாஸிரின் கோரக்கொலையால் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக நிற்கிறது! இதற்குக் காரணமாக முஷாரபையே உலகம் குற்றம் சாட்டும்!

• பெனாஸிரின் கொலையால் பாகிஸ்தானில் மூண்டிருக்கிற கலவரங்கள் எற்கனவே பல உயிர்களைக் காவு கொண்டுள்ளன. இதன் தீவிரம் இன்னும் பரவலாகவும் பயங்கரமாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ள பொதுச்சூழலே அங்கு நிலவுவதால், அதற்கான பழியும் முஷாரபின் மீதுதான் விழும்!

ஆக, முஷாரப் இப்போது முச்சந்தியில் நிறுத்தப் பட்டிருக்கிறார்!

இதிலிருந்து அவர் மீண்டு வருவாரா? வந்தால் எப்படி வருவார்? என்பதெல்லாம் இப்போதைக்கு வெறும் யூகங்களாகவே அமையும்!

பெனாஸிரைப் பொறுத்தவரை அவர் 1988 - ல் தனது 35 வது வயதில் முதல் முஸ்லிம் பெண் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரிதாகப் பேசப் படும் தலைவராகவே இருந்தார். அவர் இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமராக இருந்தும் இரண்டு தடவையும் ஊழல் குற்றச்சாட்டில்தான் ராணுவத்தால் வெளியேற்றப் பட்டார்; மக்களால் தோற்கடிக்கப்பட்டல்ல. அந்நாட்டில் ராணுவத்தின் பிடி எவ்வளவு வலுவானது என்பதை நிரூபிக்க இதனையே உதாரணமாகவும் கொள்ள முடியும்.

பெனாஸிரின் தந்தையான ஜுல்பிகார் அலி புட்டோ ஜனநாயகத் தென்றலை பாகிஸ்தானில் அறிமுகம் செய்து, அதனாலேயே ராணுவத்தின் கோபத்துக்கு ஆளாகி தூக்கிலிடப்பட்டு இறந்தார். அப்போதை இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாருடன் அவர் கண்ட சிம்லா ஒப்பந்தம்தான் இன்றும் இரு நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தைகளுக்குச் சாதகமான பாலமாக -சூத்திரமாக அமைந்திருக்கிறது!

எனவே, ஜனநாயகத்தைக் காப்பாற்றும் முயற்சியில் பெனாஸிர் தன் இறுதிமூச்சுவரை உழைத்தார் என்பதை வரலாறு ஒரு போதும் மறக்க முடியாது; மறக்காது!

இளம்வயதிலேயே 5 ஆண்டுக்காலம் தனிமைச் சிறையில் ராணுவத்தால் அவர் அல்லலுற நேர்ந்ததும், நாட்டை விட்டு வெளியிலேயே வாழநேர்ந்ததும், அவரது கணவரும் கடுமையான சிறைவாழ்வைச் சுவைக்க நேரிட்டது என்பதும், குழந்தைகள் வெளிநாடுகளிலேயே வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்பதும் பாகிஸ்தானிய வரலாற்றுப் பக்கங்களில் மறைக்க முடியாத -அழிக்க முடியாத கரும்புள்ளிகளே!

தனது உயிருக்கு பல முனைகளிலிருந்தும் ஆபத்து இருக்கிறது என்று நன்கு தெரிந்தும் அவர் தாயகம் திரும்பியது நிச்சயமாக மிக தைரியமான ஒரு செயலே!

இதொ இப்போது அவர் தனது நாட்டுக்காக தனது உயிரையும் கொடுத்திருக்கிறார்!

இவையெல்லாம் பெனாஸிர் பாகிஸ்தானில் ஜனநாயகத்தைக் காப்பாற்று வதற்காகக் கொடுத்த விலை என்பதும் அது மிக அரிதான ஒன்று என்பதும் வரலாறு பதிவு செய்யப் போகும் நிஜங்கள்!

நர்கிஸின் டிசம்பர் இதழ் தலையங்கத்தில் 'பிரிவினை, ஒரு ஆரோக்கியமான மனிதனின் மீது செய்யப்பட்ட தேவையில்லாத அறுவை சிகிச்சை' என்று குறிப்பிட்டிருந்தோம். அப்படி தேவையற்ற அறுவை சிக்கிச்சைக்கு ஆளான ஒரு மனிதன் எப்படி ஆரோக்கியமாக இருப்பதும் வாழ்வதும் பிரச்சினைக் குரியதோ, அந்த அளவில்தான் பாகிஸ்தானும் பல்வேறு உபாதைகளில் சிக்கிக் கொண்டு இப்போது மூச்சுத் திணறுகிறது!

உலகையே வியக்கவைக்கும் ஜனநாயக வலிமையுடன் அண்டை நாடான சகோதர இந்தியா உலகின் பார்வையைத் தன் பொருளாதார வலிமையாலும் கவர்ந்திழுக்க முடிந்திருப்பதில் பாடம் பெறாமல் - அதனுடன் நல்லுறவைப் பேணாமல் - தங்களை அடிமைப் படுத்திய அதே ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து கொண்டு தன் மக்களை இன்னும் கூட ராணுவப் பிடிக்குள் வைத்து அல்லலுக்கு ஆளாக்கும் பாகிஸ்தானிய ராணுவம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக இன்னும் எவ்வளவு விலை கொடுக்கப் போகிறதோ, தெரியவில்லை.!

பெனாஸிர் என்ற ஒரு ஜனநாயகப் பெண் போராளி தனது அரசியல் வாழ்க்கையில் சில தவறுகளைச் செய்திருக்கலாம். நாமே கூட சில போது அவரை விமரிசித்திருக்கிறோம். என்றாலும் சுதந்திர பாகிஸ்தானின் எந்த ஆணுக்கும் குறைவில்லாத ஆளுமையையும்/ அரசியல் திறத்தையும்/ தன்னம்பிக்கையையும் அவர் பிரதிநித்துவப் படுத்தினார் என்பதை யாரும் மறுக்க முடியாது!மறைக்க முடியாது

இறைவன் அவரது பிழைகளைப் பொறுத்து நல்லாசி வழங்கட்டும்!


(தலைப்பிற்காக நாம் உபயோகப் படுத்தியிருக்கும் பெனாஸிரின் படம் அவரது மரணத்துக்குச் சில விநாடிகளுக்கு முன் எடுத்தது)
நன்றி : நர்கிஸ் பிப்ரவரி -2008 இதழ்


தலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com