|
Refer this Page to your friends
சிந்திக்க... திட்டமிட...
செயல்பட!
அதிர்ந்த பூமி ! ஆர்ப்பரித்த கடல்! பொழிந்து தள்ளிய வானம்!
சென்ற ஆண்டு இந்த நேரத்தில்தான் , இதுவரை தமிழகம் பார்த்திராத சுனாமிப் பேரலை
பல்லாயிரம் மக்களை வாரிக்கொண்டு போனது! அவர்களின்
வாழ்வாதாரங்களை முற்றிலுமாகப் பறித்துக் கொண்டு வீதியில் வீசிவிட்டுச் சென்றது!
அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்களில் பலர் இன்னும் மீண்டபாடில்லை.
மனநோயாளிகாக பலர் இன்னும் புலம்பிக்கொன்டு திரிகிறார்கள். அரசும் பல்வேறு
சேவை அமைப்புக்களும் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். ஆனால் அவர்களைப் பழைய
நிலைக்குக் கொண்டுவர இன்னும் முடியவில்லை! அதற்குப் பலகாலம் ஆகலாம் என்கின்றனர்
ஆய்வாளர்கள்! நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டங்கள்; சாலை மறியல்கள் ஓய்ந்தபாடில்லை!
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டத்து கடலோர
மக்கள்தான் இந்த சுனாமியின் சுழற்சியில் அதிகம் சின்னாபின்னமானார்கள். அவர்களையே
குறிவைத்துத் தாக்கியிருக்கிறது டிசம்பருக்குக் கட்டியம் கூறிவந்த மழையும்
வெள்ளமும்! அவர்கள் தற்காலிகமாகக் குடியமர்த்தப்
பட்டிருந்த குடிசைகள், கொஞ்ச நஞ்ச சேமிப்புகள் வெள்ளத்தில் கடலுக்குப் போய்விட்டன.
ஒரே ஆண்டில் இரண்டு பேரிடர்கள்! அவர்களது கண்ணீர் பேட்டிகள் நம்மைக் கலங்க
வைக்கின்றன.
சுனாமியின் கோரத்தாண்டவப் பிடியிலிருந்து தப்பித்துவிட்ட உட்பகுதி நகர்ப்புர மக்கள்
- நடுத்தர - பணக்காரர்களையும் சேர்த்துப் பதம் பார்த்துவிட்டது மழை வெள்ளம்.
தரைவீடு முழுதும் தண்ணீருக்குள்! மாடியில் வாசம்! குடிக்கத் தண்ணீரில்லை; எரிக்க
எரிபொருள் இல்லை; பாலில்லை; உணவுப் பொருட்களை வெளியில் சென்று வாங்கிவர
முடியவில்லை. பளபளக்கும் பகட்டான கார்கள் இருந்தும் உபயோகிக்க முடியவில்லை.
பணமிருந்தும் பரிதாபம்!
வெளியூர்களுக்குச் சென்றவர்கள் அங்கேயே மாட்டிக்கொண்டார்கள்!
அவசர மருத்துவ உதவிக்குக் கூட வெளியில் செல்ல முடியாமல் முடங்கிப் போனார்கள்
மக்கள்! அவசரப் பட்டுப் பயணித்தவர்களை பஸ்களுடனேயே அடித்துச் சென்றுவிட்டது
காட்டாற்று வெள்ளம். நோயில் அவதிப் பட்ட அக்கா மகள் வீட்டு மழலையை சிகிச்சைக்காகக்
கூட்டிசென்ற நம் சகோதரி ஒருவர் அந்த விபத்தில் அக்கா மகளுடனும் குழந்தையுடனும்
மறைந்தார்! நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்த கணவர் ஓடோடி வந்து அவரது உடலைப்
பார்த்துக் கதறிய கதறலை நாம் இங்கிருந்தே கேட்க முடிகிறது! பயந்த ஓட்டுநரை "ஒட்டு
ஒட்டு..." என அதிகாரம் செய்த அரசியல்வாதியின் உயிரும் கூட அந்தக் கணமே அடங்கிப்
போனது!
.......... இப்படி இந்த ஓராண்டில்தான் எத்தனை இடர்பாடுகள்!
.......... இயற்கையின் சீற்றங்கள்!
உடனடி நிவாரணத்துக்கு மக்கள் மாநில - மத்திய அரசுகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
மத்திய அரசு உடனடியாக 500 கோடி வழங்கியுள்ளது. மதிப்பீடு செய்த மத்தியக்குழுவின்
ஆலோசனைப் படி மேலும் நிதி உதவி கிடைக்கலாம். மாநிலத்தில் பரவலாக வெள்ளம்
ஏற்பட்டுள்ளதால் - இதற்குத் தயார்நிலையில் இல்லாத மாநில அரசின் இயந்திரம்
தள்ளாடிக்கொண்டிருக்கிறது. "மத்திய அரசே முழு உதவியும் தரவேண்டும் என்றால் மாநில
அரசு எதற்காக?" என்று மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர். நான்கரை ஆண்டுகளாக 'அரசின்
கஜானா காலி ' என்று சொல்லி வந்த முதல்வர் கடந்த 4 -5 மாதங்களாக கோடிக்கணக்கில்
சலுகைகளையும், புதிய திட்டத் தொடக்கங்களையும் படு உற்சாகமாக அறிவித்து
தேர்தலுக்குத் தயாராகி வந்தார். அவரது குஷியைக் குறைத்துவிட்டது மழையும் வெள்ளமும்!
மத்திய - மாநில அரசுகளின் கருணையில் சில நிவாரணங்கள் கிடைக்கலாம். போக்கு வரத்துகள்
சீரடையலாம்! டிஸம்பர் முடிவில் வடகிழக்குப் பருவக்காற்று
முடிவடையும் போது மழை குறைந்துவிடும். வெள்ளம் வடிந்துவிடும். சுட்டெரிக்கும்
சூரியன் வெப்பக் கதிர்களால் பழைய தமிழகத்தின் இயல்புநிலையைத் திருப்பிக்
கொண்டுவந்துவிடும். அத்துடன் அனைவரின் கவனமும் தேர்தலின் மீது திரும்பிவிடும்.
இரு சாராரும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கிவிடுவர். மேலே சூரிய
வெப்பம்; இருபுறமும் அரசியல் வெப்பம்! மக்கள் இருபக்கமும் பிரிந்து நின்று
ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதில் மழை வெள்ள பாதிப்புக்களை மறந்துவிடுவார்கள்!
ஒரு அணி ஜெயிக்கும்! ஆர்ப்பாட்டமாக மந்திரிசபை
அமைக்கப்படும். ஆடம்பரமாக வெற்றி விழாக்கள் நடைபெறும்!
அது நாலரை ஆண்டுகளுக்குத் தூங்கும்! பிறகு விழித்துக் கொண்டு அடுத்த தேர்தலுக்கான
முஸ்தீபுகளாக சலுகைகளை அறிவிக்கும்! இடையில் ஆண்டுதோறும் மழைகாலம் வரும் போகும்;
இப்போது சந்தித்த அலங்கள் அப்போதும் நேர்ந்தாலும் மக்கள் தாங்களாகவே
சமாளித்துக்கொள்வார்கள்! அது அவர்கள் தலை விதி !
ஆனால் இந்த எதிர்பாராத அவலங்களில் இருந்து கொஞ்சமேனும் நிரந்தர நிவாரணம்
மக்களுக்குக் கிடைக்க மாநில அரசு நினைத்தால் இப்போது இந்த மழை வெள்ளம் ஏன்
ஏற்பட்டது? எதைச் செய்திருந்தால் நஷ்டத்தின் அளவைக் குறைத்துக்கொண்டிருக்களாம்?
என்பதற்கான விளக்கங்களாக ஆய்வு அறிஞர்கள் சுட்டிக்காட்டிய:
• ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்
• வடிகால் வசதிகளை அதிகப் படுத்துதல்
• ஏரிகளை ஆழப் படுத்துதல்; வரப்புகளை பலப்படுத்துதல்
• வாய்க்கால்களைத் தூர்வாறுதல்
• குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுமதி வழங்குமுன் நிபுணத்துவ ஆலோசனை கேட்டல்
• வயல்கள் வீடுகளாகும் முன்பு எடுக்கப் படவேண்டிய முன்முயற்சிகள்
• சாலை போடுமுன் சரியான ஒப்பந்தக் காரர்களை அடையாளம் காணுதல்
• பாலங்களைக் கட்டுமுன் கமிஷன் கணக்குகளை ஒழித்தல்
• கட்சிக்காரர்களுக்குக் கண்டுதான் மிச்சம் என்ற நச்சுப் பழக்கத்தை குழிதோண்டிப்
புதைத்தல்
• இயற்கை இடர்பாட்டு நிதியின் அளவை அதிகப் படுத்துதல்
• அதற்கென அனைத்து இலாகாக்களும் இணைந்த ஒரு தனி நிர்வாக அமைப்பை உடனடியாக அமைத்தல்
• அதற்குப் போதிய அதிகாரத்தையும்; நிதியையும் இப்போதே உறுதிசெய்தல்
........... இப்படிப் பல உபாயங்கள் உள்ளன.
வரும் சட்டசபைத் தேர்தலை தமிழக மக்கள் ஏன் இதை மையமாக வைத்தே அணுகக் கூடாது?
Refer this Page to your
friends
|