உலகின் பெரும் பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. கடலுக்குள் ஒரு தனி உலகமே இயங்குகிறது. ஏராளமான மீன் இனங்கள் மற்றும் அரியவகை பாசிகள் கடலில் வசிக்கின்றன. பூமியின் தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் மழை-வெயில் போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கடலுக்கு உண்டு. ஏன் என்றால் கடலில் உள்ள நீரோட்டங்கள் கடலின் தட்பவெப்ப நிலையை முடிவு செய்கின்றன. ஆழ் கடல் ரகசியங்கள் குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகளுக்காக கடலுக்குள் நீண்ட நேரம் மூழ்கி இருந்து வீரர்கள் ஆய்வு நடத்த வேண்டும். இதற்காக கடலுக்குள் செல்லும் வீரர்கள் தங்களுடன் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் முதுகில் சுமந்து செல்வார்கள். இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தி குறிப்பிட்ட நேரம் மட்டுமே சுவாசிக்க முடியும். சிலிண்டரில் உள்ள ஆக்சிஜன் தீர்ந்ததும் அவர்கள் வேறு சிலிண்டர் மாற்றிக்கொள்ள மீண்டும் கடலின் மேல் பரப்புக்கு வர வேண்டும். இதன் காரணமாக ஆழ் கடல் ஆராய்ச்சிகளை நீண்ட நேரம் செய்ய முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நவீன ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். அது பற்றிய விவரங்களை இங்கு காண்போம். நீரிலும், நெருப்பிலும் விளையாடக்கூடாது என்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆனால் மனிதன் அதில் சாதனைகளை குவித்த வண்ணம் இருக்கின்றான். மூச்சை `தம்` கட்டிக்கொண்டு முத்துக் குளிப்பார்கள் என்று சொல்வதுண்டு. முத்துக் குளிப்பவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் தண்ணீரை விட்டு வராவிட்டால் அவரை மறந்துவிட வேண்டியதுதான் என்பார்கள். அது அந்தக்காலம். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் முன்னேற்றங்களுக்குப் பிறகு கடல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டு சென்றனர். இதிலும் சில சிரமங்கள் ஏற்பட்டது. அதாவது சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்த பிறகு வேறு சிலிண்டர் தேடி கடலின் மேற் பரப்புக்கு வர வேண்டிய நிலை காணப்பட்டது. மேலும் ஆக்சிஜன் சிலிண்டரை நீண்ட நேரம் முதுகில் சுமப்பதும் சிரமமாக இருந்தது. தற்பொழுது ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் சிறிய கருவியின் உதவியுடன் நீண்ட நேரம் நீந்தும் வசதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கருவியில் உள்ள பேட்டரி உதவியுடன் நேரடியாக நீரிலிருந்தே ஆக்சிஜனை பெறும் வகையில் அதி நுட்பமாக இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த விஞ்ஞானி ஆலன் போட்னர் என்பவர் இந்த நவீன கருவியை உருவாக்கி இருக்கிறார். மீன்கள் எப்படி கடல் நீரில் இருந்து ஆக்சிஜனை பெறுகின்றனவோ அது போல கடல் நீரில் இருந்து ஆக்சிஜனை பெறும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
 மீன்கள் தங்கள் வாய் வழியாக தண்ணீரை உறிஞ்சி பின்னர் அந்த தண்ணீரை தனது தலைப்பகுதியில் உள்ள `செவுள்' மூலமாக வெளியேற்றும். இந்த செயலின் போது தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் மீனின் உடலுக்கு கிடைக்கிறது. இதே போன்று ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் மீனைப் போல நீந்தும் செயற்கை செவுளை விஞ்ஞானி ஆலன் போட்னர் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் நீச்சல் வீரர்கள் மற்றும் கடலில் மூழ்கி ஆராய்ச்சி செய்பவர்கள் ஆக்சிஜன் தொட்டியை முதுகில் கட்டி சுமக்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. இந்த நவீன கருவி ஒரு மூடப்பட்ட சிறிய கொள்கலனில் மிக அதிக வேகத்தில் இயங்கும் இயந்திரம் மூலம் கடல் தண்ணீரின் அழுத்தத்தைக் குறைத்து தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை நேரடியாக எடுத்துக் கொடுக்கிறது. இவ்வாறு பெறப்பட்ட காற்று வாயு நிலையில் காற்றுப்பைக்கு மாற்றப்படுகிறது. இதன் மூலம் தண்ணீருக்கு அடியில் செல்பவர்கள் சுவாசிக்க முடிகிறது. ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 1.5 சதவிகிதம் காற்று கலந்திருக்கிறது. ஆனால் போட்னர் கண்டுபிடித்துள்ள கருவியின் மூலம் ஒரே நிமிடத்தில் 200 லிட்டர் தண்ணீரில் இருந்து சுவாசிப்பதற்கு உரிய ஆக்சிஜனை பிரித்துக் கொடுக்கிறது. நீச்சல் வீரர் அல்லது கடல் ஆராய்ச்சி வீரர் ஒரு பெரிய ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து கொண்டு செல்வதற்கு பதிலாக ஒரு சிறிய பாட்டரியை மட்டும் தனது இடுப்பு பகுதியில் பொருத்திக் கொண்டால் போதுமானது.
"இந்த முறையில் தண்ணீருக்குள் செல்பவர் தோராயமாக 200 லிட்டர் தண்ணீரை `பம்ப்' செய்யவேண்டும். ஒரு நிமிடத்திற்கு 200 லிட்டர் தண்ணீரை `பம்ப்' செய்வதன் மூலம் ஒரு லிட்டர் ஆக்ஸிஜன் கிடைக்கிறது", என்று போட்னர் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் `ஒரு கிலோ எடையுள்ள பாட்டரி மூலம் ஒரு மணி நேரம் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனை கொடுக்க முடியும்', என்கிறார். தற்பொழுது இந்த திட்டத்திற்கு ஐரோப்பிய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நவீன கருவிக்கு அமெரிக்க அரசும் அங்கீகாரம் அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. தற்பொழுது ஆஸ்திரேலியாவில் ஆழ்கடல் வசிப்பிற்கான திட்டத்திற்கு தேவையான ஆராய்ச்சியை போட்னர் மேற்கொண்டுள்ளார். இவரது இந்த நவீன தொழில் நுட்பத்தைப் பற்றி இங்கிலாந்தில் உள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் மைக் ரௌலி கூறுகையில்.... "போட்னர் உருவாக்கிய நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்தக் கருவியின் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஒரு லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்க முடிகிறது. எப்படியிருந்தாலும் இதை சரியாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நீச்சல் வீரர்கள் மற்றும் தண்ணீரில் மூழ்கி ஆராய்ச்சி செய்யும் வீரர்களின் சுவாசிக்கும் திறன் மாறுபடும். பொதுவாக சராசரி மனிதனின் சுவாசிக்கும் திறன் ஒருவருக்கு ஒருவர் சற்று வித்தியாசப்படும்.
 ஆழ்கடலில் நீந்தும் போது அதிகமான சுழல் மற்றும் அழுத்தம் உள்ள இடங்களில் அதிகமாக ஆக்சிஜன் தேவைப்படும். அதாவது ஒரு நிமிடத்திற்கு 3.5 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவை இருக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் அதிகமான திறன் கொண்ட ஆக்சிஜன் மாற்றி இயந்திரம் தேவைப்படும். மேலும் பாட்டரியின் செலவும் அதிகமாக இருக்கும். தண்ணீரிலும் எல்லா இடத்திலும் ஆக்ஸிஜன் ஒரே மாதிரி கிடைக்காது. சில இடங்களில் ஆக்சிஜனின் அளவு அதிகமாக இருக்கும். சில இடங்களில் மிகக் குறைவாக இருக்கும். உதாரணம் இறந்த கடல் இது தவிர சில நீர் நிலைகளில் மாசுக்கள் அதிகம் கலந்து இருக்கும்". இவ்வாறு அவர் கூறினார். ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் மைக் ரௌலி கூறிய கருத்துக்களை போட்னர் ஒத்துக் கொள்கிறார். என்ன இருந்தாலும் இந்த ஆராய்ச்சி ஏற்கெனவே இருக்கும் "ஆக்சிஜன் சிலிண்டருக்கு" ஒரு புதிய பரிணாமம் தான். ஏனென்றால் இடுப்பில் ஒரு பட்டையிலேயே பாட்டரி மற்றும் கருவிகளுடன் இந்த கருவி வந்து விட்டது. இது ஆக்சிஜன் சிலிண்டிரை முதுகில் சுமக்கும் பிரச்சினையில் இருந்து விடுவிக்கின்றது. மேலும் வருங்காலத்தில் இதன் திறன் மற்றும் தொழில்நுட்பம் அதிகரிக்கும் என்கிறார் போட்னர். தகவல் தொகுப்பு: எம்.ஜே.எம்.இக்பால், துபாய். |