அறிவியல் அதிசயம் - MJM Iqbal

 

உலகிலேயே அதிவேகமான `ரோபட்'ரோபட் எனப்படும் மனித இயந்திரங்கள் உற்பத்தி துறையில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல விளையாட்டு, கேளிக்கை என பலதுறைகளிலும் இந்த ரோபோக்கள் கலக்கி வருகின்றது. ஒரு ரோபோ எந்த வித உணர்ச்சியும் இல்லாத அடிமை போன்றது. அது தனக்கு இடப்பட்ட கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக பொறுமையாக நிறைவேற்றும் தன்மை கொண்டது. இப்பொழுது இதன் அடுத்த பரிணாமமாக இதன் வேகத்தை அதிகப்படுத்த திட்டமிட்டதின் பயனாக `குய்க் பிளேசர்' எனப்படும் அதிவிரைவு ரோபட்டுகள் தயாரிக்கப்பட்டன.

இதன் வேகம் பந்தயக் கார்களை விட அதிகம். அதாவது பார்முலா-1 பந்தயக் காரை விட 5 மடங்கு அதிக திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து அந்த ரோபோவின் வேகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இன்றைய உலகின் வேகத்திற்கேற்ப தன்னை மெருகூட்டிக் கொண்டிருக்கும் இந்த ரோபட்டுக்கள் இயந்திரத் துறையில் பல உற்பத்தி புரட்சிகளை ஏற்படுத்த உள்ளன.

இத்தகைய அதி வேக ரோபட்டுக்களை மெல்ல மெல்ல மற்ற துறைகளிலும் பயன்படுத்தப் போவதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.


`ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி' என்பது போல் நூறு நிமிடத்தில் செய்ய வேண்டிய காரியத்தை ஒரு நிமிடத்தில் செய்து முடிக்கும் சூப்பர் ரோபட்டுகளாக இவை வலம் வர உள்ளன.

`குய்க் பிளேசர்' 4 உந்து சக்திகளைக் கொண்டு இயங்கும் திறன் கொண்டது. செங்குத்து நிலையில் இயங்கும் இது 1200 மி.மீ விட்டம் மற்றும் 250 மி.மீ உயரம் அளவுக் கொண்ட உருளையைக் கொண்டுள்ளது. இது 200 டிகிரியில் சுதந்திரமாக சுழலும் தன்மைக் கொண்டது.

`குய்க் ப்ளேசர்'-ன் முக்கிய அம்சம் என்னவென்றால் இது ஒரு நிமிடத்திற்கு 200 பொருட்களை ஓரிடத்தில் இருந்து எடுத்து வைக்கும் திறன் கொண்டது. தொழிற்சாலைகளில் உற்பத்திப் பிரிவில் இது பயன்படுத்தப்பட்டால் இது அதி வேகமாக பணிபுரியும். மேலும் கன்வேயர் பெல்ட் எனப்படும் நகரும் பட்டைகளில் வரும் பொருட்களை எடுப்பதற்கு மற்றும் வைப்பதற்கு உகந்ததாக இந்த குயிக் பிளேசர் இருக்கும். இது பல்வேறு பிரிவுகளைக் கொண்ட தொழிற்சாலைகளில் பல்வேறு பணிகளை குறைவான நேரத்தில் சாமர்த்தியமாக கையாளும் வகையில் இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, விவசாயம், அழகுசாதனம் தயாரிக்கும் இடம் போன்றவைகளில் இது பல்வேறு நிலைகளில் பணிபுரியும். கீழ்க்கண்ட படிநிலைகளில் இதன் பணி அமைகிறது.

சாக்லேட், அதனை வடிவத்திற்கு கொண்டுவரும் பொருட்டு அதனை பொருத்திவைத்தல், பார் வடிவில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகளை அடுக்குகளாக கட்டுவதற்கு, பிஸ்கட் வகைகளை தரம் பிரித்து அதனை நிர்ணயிக்கப்பட்ட அளவாக பிரித்தல் மற்றும் அடுக்குகளாக கட்டுதல், மற்றும் உணவுப் பொருட்களை தரம் பிரித்தல் அதாவது தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் இதன் பணி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

இவ்வாறு பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த `குய்க் ப்ளேசர்' ரோபோட்டின் மொத்த எடையே 2 கிலோகிராம் தான் ஆகும்.செயற்கை தசைகள் உள்ள ரோபட்டுகள்எந்திர மனிதர்கள் எனப்படும் ரோபட்டுகளை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த எந்திர மனிதர்களை நிஜ மனித தோற்றத்தில் உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதாவது இயல்பான மனித தசைகள் போலவே செயற்கையாக தசைகள் கொண்ட ரோபட் உருவாக்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. செயற்கை தசைகளைக் கொண்ட இந்த ரக ரோபட்டுகள் மெத்தனால் சக்தியில் இயங்கும். பாட்டரியில் இயங்கும் ரோபட்டுகள் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இயங்கும். எதிர்காலத்தில் இதை தவிர்க்கும் பொருட்டு ரோபட்டுகளுக்கு செயற்கை தசைகளை கண்டுபிடித்துள்ளனர், ஆராய்ச்சியாளர்கள்.

செயற்கை தசைகளை உருவாக்கிய விஞ்ஞானி பாப்மேன் கூறுகையில், `ஒருநாள் நீங்கள் `டீ' குடிக்க சாலை ஓர கடையில் காத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் அருகில் மனிதனைப் போலவே ஒரு `ரோபட்' வந்து `எனக்கும் ஒரு டீ ஸ்ட்ராங்கா போடுப்பா, என்று கேட்டு வாங்கி டீ குடித்து விட்டுப் போகும் காலம் வரும்' என்று நகைச்சுவையாக வர்ணிக்கிறார்.

`தற்பொழுதுள்ள அனேக ரோபட்டுக்களும் பாட்டரி மற்றும் மின்சக்தியில் இயங்கக்கூடியது. அதனாலேயே இது மனிதனைப் போல் இலகுவாக இயங்க முடிவதில்லை', என்கிறார்.

ஆனால் செயற்கை தசைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபட்டுக்களால் மனிதனைப் போலவே இலகுவாக கையை, காலை ஆட்டிக் கொண்டு செயல் பட முடியும். இது தவிர மனிதனைப் போன்ற வீர விளையாட்டுக்களில் ஈடுபட முடியும்.

பாப்மேன் மற்றும் அவரது இரண்டு சக ஆராய்ச்சியாளர்களும் இரண்டு வகை செயற்கை தசைகளை கண்டறிந்துள்ளனர். இது எரிபொருள் மாற்றியாகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை தசையிலுள்ள மெத்தனால் என்ற இரசாயனப் பொருள் ரோபோட்டின் இயக்கத்திற்கு ஆற்றலாக மாற்றிக் கொடுக்கிறது.

இதில் முதல்வகை செயற்கை தசை பிளாட்டினம் பூசப்பட்ட நிக்கல் டைட்டானியம் வயர்களைக் கொண்டது. மெத்தனால் ஆவியாகும்போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் பூசப்பட்ட பிளாட்டினத்தில் பரவி வேதிவினை புரிய ஆரம்பிக்கின்றது. இதன்மூலம் வெப்பம் வெளிப்பட்டு நிக்கல் டைட்டானியம் வயர்கள் நீட்டப்படுகிறது மற்றும் இலகுவாக்கப்படுகிறது. இதனால் தசைகள் இயங்க ஆரம்பிக்கின்றது. வேதிவினை நிறுத்தப்படும்பொழுது வயர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுகிறது. பாப்மேன் மேலும் கூறுகையில், `இம்மாதிரியான செயற்கை தசைகள் சாதாரண இயற்கை தசைகளைவிட 100 மடங்கு அதிக வலுவானது' என்கிறார்.

நானோடயூப்

இரண்டாம் வகை செயற்கை தசை வேதி முலாம் பூசப்பட்ட கார்பன் நானோ வயர்களைக் கொண்ட காகிதத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. `இது நிக்கல் டைட்டானியம் தசைகளைப் போல இல்லாமல் சற்று வலு குறைந்ததுதான். இருந்தாலும் இது எதிர்காலத்தில் இதனை மிஞ்சிவிடும்', என்கிறர் பாப்மேன்.

வேதிப்பொருள் ஆக்சிஜனுடன் வேதிவினை புரியும்போது நானோ வயர் காகிதம் ஆற்றலை வெளியிடுகிறது. இதனால் காகிதம் விரிவடைகிறது. அதாவது வில்லனைப் பார்த்த கதாநாயகனுக்கு தசைகள் புடைப்பதுபோல். இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒரு ஆற்றல் சேமிப்பானாகவும் விளங்குகிறது. அதாவது மின்சக்தியை சேமிக்கிறது. இதனால் தேவைப்படும்போது சக்தியை உபயோகித்துக் கொள்கிறது. இந்த வகை நானோடிïப் செயற்கை தசை அதிகமான வெப்பத்தை வெளியிடுவதில்லை.

`இவ்வாறு ஒரு தசையே ஆற்றல் சேமிப்பானாக செயல்படுவது அதி நுட்பமான ஒரு கண்டுபிடிப்புதான். மேலும் இது மனிதனுக்கு ஒரு சிறந்த மருத்துவ முறையாகவும் இருக்கிறது. ஏனென்றால் மனிதன் அதிகமான வெப்பத்தை தாங்க முடியாது. ஆனால் இதில் குறைந்த அளவு மின்சக்தியிலேயே இயங்கக்கூடியதால் எந்தவித ஆபத்தும் இல்லை', என்றும் கூறுகிறார் ஜெர்மனியிலுள்ள செயற்கை தசை நிபுணர் மற்றும் வல்லுனர் சீக்மர் ரோத்.
 

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=4/1/2006&secid=76