கண்கட்டு வித்தைகளுக்கும், மாயா ஜாலக் கதைகளுக்கும்
அறிவியல் பரம எதிரிகள் என்று சொல்லலாம்.
ஆனால் மாயாஜால வித்தைகளையே இப்பொழுது உருவாக்கிக்
கொண்டிருக்கிறது அறிவியல்.
மாயாஜால கதைகளிலும், திரைப்படங்களிலும் தலை மட்டும்
நகர்ந்து வரும். கை மட்டும் துரத்தி வந்து குரல்வளையை
நெரிக்கும். இதெல்லாம் ஒரு மர்மக் கதையாகவே இருக்கும்.
மேலும் இந்த மாதிரியான தோற்றங்கள் அதாவது ஷூ மட்டும்
நடந்து வரும், ஆனால் ஆள் தெரியாது. தொப்பியும் ஷூவும்
மட்டும் நடந்து வரும். இடையில் இருக்கும் ஆள் தெரியாது.
இதெல்லாம் இதுவரை ஓவியர்களின் கற்பனை காவியங்களாகவும்,
சினிமா தயாரிப்பவர்களின் கைவண்ணமாகவே இருந்திருக்கிறது.
ஒரு திரைப்படத்தில், கடவுளின் வரத்தினால் கதாநாயகன் யார்
கண்ணுக்கும் தெரியாமல் இருப்பான். அவன் ஒரு பையை தூக்கி
வரும் போது கூட அந்தப் பை மட்டும் வருவது போல தெரியும்.
இதெல்லாம் நம் கதாசிரியர்களின் தயாரிப்புகள்.
ஆனால் நமது விஞ்ஞானிகளின் தயாரிப்புகளை பாருங்கள்.
நிஜத்திலேயே விஞ்ஞானிகள் ஒரு நூதனமான மாயாஜால சட்டையை
உருவாக்கியுள்ளார்கள். அதை நாம் அணிந்தால் அந்த சட்டையே
தெரியாது. அதாவது நம்மையும் சேர்த்துதான்.
அந்த சட்டையை அணிந்தால் நம்முடைய தலை நம்முடைய இடுப்பிற்கு
மேல் அந்தரத்தில் மிதப்பது போலவே இருக்கும். இந்த சட்டையை
அணிந்துக்கொண்டு ஒருவருடைய அருகில் உட்கார்ந்தால் ஒன்றுமே
தெரியாது. ( இனி அரசியல்வாதிகள் மற்றும் பிற முக்கிய
பிரமுகர்கள் லஞ்சம் வாங்குகிறார்களா? என்பதை கண்காணிக்க
இந்த நூதன தொழில் நுட்பத்தை பயன் படுத்தலாம்.
ஹாரி பாட்டர் கதையில் வருவது போல இந்த நிஜ மாயாஜால சட்டையை
அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்க முடியும்
என்று நிரூபிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
அதைப் பற்றி இந்த வாரம் காண்போம்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல்
வல்லுனர்கள் இம்மாதிரி யான மாயாஜால சட்டையை உருவாக்கும்
தொழில் நுட்பத்தை அறிந்துள்ளனர்.
இதை தயாரிப்பதற்கு பிரத்தியேகமான பொருட்கள்
தேவைப்படுகிறது. மின்காந்த கதிரை உபயோகப்படுத்தி இந்த
சட்டையை உருவாக்க ஆராய்ந்து வருகின்றனர். மின்காந்த கதிர்
இந்தச் சட்டையில் ஏற்படுத்தப்பட்டிருப்பதின் மூலம் இது
கண்ணுக்கு தென்படாமல் செய்யப்படுகிறது. இதனை வடிவமைக்க
பல்வேறு விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இது ஒரு சுவாரசியமான ஆர்வ மிக்க அறிவியல்
ஆராய்ச்சியாகும்', என்கிறார் பென்சில்வேனியாவிலுள்ள
பல்கலைக்கழகத்தின் மின்னியல் துறை பேராசிரியர் நாடிர்
இன்கிதா என்பவர். இவர் சில விந்தையான நூதனமான பொருட்களைக்
கொண்டு இந்த கண்ணிற்கு புலப்படாத சட்டையை தயாரிக்கும்
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் ஜான்
பென்ட்ரி என்பவர் கூறுகையில், இது அறிவியல் கட்டுக்
கதையல்ல, ஹாரி பாட்டர் கதையில் வரும் மாயாஜாலங்களை
நிஜத்திலும் கொண்டுவருவதற்கு அறிவியலில்
சாத்தியமிருக்கிறது. அதைப் பற்றிய அறிவியலில் இருக்கும்
வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்', என்கிறார்.
இவரும் மற்றும் இவரது சக ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து சில
தாது பொருட்களைக் கொண்டு இம்மாதிரியான கண்ணுக்குப்
புலப்படாத சட்டையை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
ஏனென்றால் தாதுக்கள் மின்காந்தக் கதிர் மற்றும் ரேடியோ
அலைகளை எந்த திசைகளுக்கும் வளைக்கக்கூடிய வல்லமை
இருக்கின்றது என்கின்றனர். தாதுக்களைப் பயன்படுத்தி
உருவாக்கப்படும் இந்தச் சட்டையை சுற்றி பரவி இருக்கும்
மின்காந்த கதிர் மற்றும் அலைகள் சட்டையை கண்ணுக்குப்
புலப்படாமல் செய்யும்.
அதாவது சட்டையை அணிந்திருப்பவரை மற்றவர் காணும்போது
கண்ணுக்குப் புலப்படாமல் வெற்றிடமாகவோ அல்லது நிழலாகவோ
தோற்றமளிக்கும். அதே நேரத்தில் இந்த சட்டையில் உள்ள
கதிர்கள் அதை அணிந்திருப்பவரை தாக்காது என்பது
குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே நாம் இதை அணிந்திருப்பதின் மூலம் மற்றவர்களின்
பார்வைக்கு புலப்படாத தோற்றத்தை உருவாக்க முடியும்',
என்கிறார் பட்டாஞ்சலி பாரிமி என்கிற ஒரு ஆராய்ச்சியாளர்.
பெண்ட்ரி கூறுகையில், ஹசீக்கிரமே இந்த சட் டையை உருவாக்க
முடியும்', என்கிறார். அமெரிக்காவின் பெண்டகன் ராணுவ
ஆராய்ச்சி மையம் இந்த கண்ணுக்குப் புலப்படாத சட்டையை
உருவாக்குவதற்கு முழு ஆதரவை அளித்திருக்கின்றது.
ஜப்பானிலுள்ள டோக்கியோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும்
விஞ்ஞானியும் சுசுமோ டாச்சி என்பவர் இதே மாதிரி
கண்ணுக்குப் புலப்படாத சட்டையை உருவாக்கியுள்ளார். இவர்
ஒளியியல் பொருட்களைக் கொண்டு இதனை தயாரித்துள்ளார். இந்த
சட்டையை அணிந்திருப்பவரைப் பார்க்கும்போது
அணிந்திருப்பவருக்கு அப்பால் இருக்கும் பொருட்களையும்,
காட்சிகளையும் பார்க்க முடியும். ஒருவருடைய முகத்துக்கு
எதிரே உள்ள காட்சிகளை வீடியோ கேமிரா மூலம் படம் பிடித்து
பின்னர் அதை புரஜெக்டர் மூலம் மார்பு பகுதியில்
ஒளிபரப்பினால் எப்படி இருக்கும். அவருடை முதுகுப்பகுதியில்
உள்ள காட்சிகள் மார்பு பகுதியில் தெரியும். இந்த காட்சிகளை
ஒருங்கிணைக்கும் போது நமது உடலை ஊடுருவிக் கொண்டு
காட்சிகள் தெரிவது போன்ற தோற்றம் உருவாகும்.
கடல் மண்ணை எண்ண முடியுமா? அதுபோல அறிவியல் சாதனைகள்
எண்ணற்றவைகள். மாயாஜாலங்களையும், கட்டுக் கதைகளையும்
நிஜமாக்கி வருகின்றனர் அறிவியல் வல்லுனர்கள். இன்னும்
கொஞ்ச நாட்களில் மனிதனுடைய அறுவை சிகிச்சையை இம் முறையைப்
பயன்படுத்தி செய்யக்கூட வாய்ப்பிருக்கின்றது என சொல்லலாம்.
எம்ஜேஎம் இக்பால்
(அதிசயம் தொடரும்)
|