அறிவியல் அதிசயம் - MJM Iqbal

28-10-2006

Refer to Your Friends

நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.


ஆபரண நகைக்கடைகளிலும், பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களிலும் கேமிராக்களை வைத்து வாடிக்கையாளர்களை கண்காணிக்கின்றனர். இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையில் வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும். சந்தேகத்திற்கிடமான முறையில் யாராவது நடந்து கொண்டாலோ, பெண்களிடம் 'சில்மிஷம்", திருடுதலில் ஈடுபட்டால் கண்டுபிடித்துவிட முடியும். இந்த கேமிராக்களின் துணை கொண்டு அவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்து விடுவார்கள். இந்த வகை கேமிராக்கள் சி.சி.டி.வி. (CCTV & Closed Circuit TV) என்று அழைக்கப்படுகின்றன.

இப்பொழுது பிரிட்டனில் பேசுகின்ற சி.சி.டி.வி.க்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள பெரிய நகரங்களில் கடைவீதிகளில் இவ்வகை கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தால் உடனடியாக கண்காணிப்பு அறையிலிருந்து ஒலிபெருக்கி கருவியின் மூலமாக, சிறுநீர் கழிக்காதீர்கள், அசுத்தம் செய்யாதீர்கள் என அறிவிக்கப்படும். பொது இடங்களில் சப்தமாக இவ்வாறு அறிவிப்பு வரும்பொழுது, எல்லோரும் திரும்பி பார்ப்போம் அல்லவா? தப்பு செய்கின்ற ஆள் மாட்டிக்கொள்வார். மேலும் வெட்கப்பட்டு தலைகுனியும் அளவிற்கு ஆளாகிவிடுவார்கள்.

முதலில் அன்புடன் துவங்கும் அறிவிப்பு பின்னர் அதிகாரத்துடன் அறிவிக்கும். உடனே நாம் தவிர்த்துக்கொண்டால், நமக்கு நன்றியும் சொல்ல மறக்காது. இங்கிலாந்தில் மிடில் பரோ என்கிற இடத்தில் 158 பேசும் சி.சி.டி.வி. (CCTV) கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் இப்பொழுது 7 சோதனை கட்டத்தில் உள்ளது. இது பொது விதி முறைகளை மீறுபவர்களையும், தவறு செய்பவர்களையும் தடுக்கிறது. சப்தமாக ஒலிப்பெருக்கியின் வாயிலாக அறிவிப்பினை கேட்கும்பொழுது, தவறு செய்பவர்கள் தவிர்த்துக்கொள்கின்றனர் என்கிறார் ஜாக் பானர். இவர் இந்த கேமிரா கண்காணிப்பு முறையினை செயல்படுத்தியவர்.

சமூகத்திற்கு நல்லதாக உள்ளது என்கிறார் இவர்., ஒரு இரவு விடுதியியின் வெளியே இரு நபர்கள் சண்டையிட்டு கொண்டிருந்தனராம். இதனை கேமரா மூலம் கவனித்த கண்கானிப்பாளர்கள், சண்டையினை நிறுத்தச்சொல்லி அறிவுறுத்த, அந்த அறிவிப்பை கேட்ட அந்த இரண்டு நபர்களும் உடனடியாக சண்டையை நிறுத்திவிட்டு இருவேறு திசைகளில் சென்றனராம்.

பொது இடங்களில் தவறுசெய்பவர்களை பிடிப்பதற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தவும், பொதுமக்கள் இரவு நேரங்களில் பயமின்றி செல்லவும், இந்தமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொது விதிகளை மீறுபவர்கள், பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறான செயல்களில் ஈடுபடுபவர்கள், மனித நேய விதிகளை மதிக்காதவர்கள் ஆகியோருக்கு இது ஒரு நல்ல முறை என்று வரவேற்கின்றனர் பிரிட்டன் பொதுமக்கள்! இந்த முறை இந்தியாவிற்கு எப்ப வரும்னு கேட்கத்தோன்றுகிறதா? விரைவில் வந்தால் நல்லதுதான்.

இந்த கண்கானிப்பு மையத்தில் செயல்படும் அதிகாரிகளுக்கு தீவிரமான ஒழுங்கு முறை பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், மிகவும் திட்ட வடிவமான வரையறை முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பாளர்கள் அறிவிப்பை துவங்கும் போது, "நீங்கள் கண்கானிக்கப்பட்டுக்கொண்டுள்ளீர்கள்... ஜாக்கிரதை'' என்று அன்போடும், சற்று அதட்டலோடும் அறிவிக்கப்படுகிறது. இந்த முறை நமது நாட்டில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் செயல்படுத்தப்பட்டால், ஒழுங்கீனங்கள் குறையும், சுத்தம் சுகாதாரமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

பூஜ்ய ஈர்ப்பு விசையில் அறுவை சிகிச்சை

மனிதன் ஒவ்வொரு கணமும் ஒன்றை அடைய வேண்டும் என்ற தீவிர எண்ணத்திலேயே இருக்கின்றான். எண்ணமே வாழ்வு, செயல் என்ற அடிப்படையில் எல்லாம் வெற்றிகளாக அமைகின்றன. ஆரம்பத்தில் சோதனையில் தோல்விகள் வந்தாலும் அவையும் வெற்றிபடிகட்டுகளுக்கு அடித்தளமாக அமைகின்றன.

மண்ணில் உள்ள மனிதன் விண்ணில் தன்னுடைய வாழ்வை துவக்கவும், நிலவில், செவ்வாயில் சில இடங்களை சிலர் பத்திரம் இட்டு வாங்க இருப்பதாககூட பார்த்தோம். செவ்வாய்க்கு மனிதன் சென்றால் செவ்வாய் எல்லையினை அடைய விண்கலத்திற்கு 8 மாதம், பிறகு அதன் இலக்கை அடைய இன்னும் 4 மாதம், பிறகு திரும்பி வர 8 மாதம் இப்படி 20 மாதம் என்கின்றனர் விஞ்ஞானிகள். 8 மாதம் விண்கலத்தில் செல்லும்போது ஒருவருக்கு ஆபரேஷன் செய்யும் அளவிற்கு ஹெர்னியா, அப்பெண்டிக்ஸ் போன்ற உடனே சிகிச்சை பெறக்கூடிய நிலை வந்துவிட்டால் என்ன செய்வது... ... ...!


விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்தனர். பறக்கும் விமானத்தில் பூஜ்ய ஈர்ப்பு விசையில் கடந்த ஆண்டில் ஒரு எலிக்கு வாலில் ஆபரேஷன் செய்து வெற்றி கண்டனர். அது போதுமா?

கடந்த வாரத்தில் A -380ல் மருத்துவ அறுவை சிகிச்சை டாக்டர்களும், மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர்களும் மற்றும் நர்சுகளும் சேர்ந்து ஒருவரை சோதனைக்கு உட்படுத்தினர்.

A -380 விமானத்தில் பூஜ்ய ஈர்ப்பு விசைக்கு (Zero Gravity)  தயார் செய்யப்பட்டது. அந்த அறையில் டாக்டர்கள் ஆபரேஷனுக்கு தேவையான உடை, ஆக்சிஜன் முகமூடி (Oxygen Mask) இவற்றை அணிந்து அந்த அறையின் சுவற்றில் சாய்ந்து இருந்தனர். ஆபரேஷன் கருவிகள் காந்த கருவிகள் மூலம் நிறுத்தப்பட்டு இருந்தன.


விமானத்தை குட்டிக்கரணம் அடிக்கச் செய்து 20 வினாடிகள் அதே அமைப்பில் வைக்க, டாக்டர்கள் சிகிச்சையை ஆரம்பித்தனர். இதுபோல 32 தடவை குட்டிக்கரணம் அடிக்கச் செய்து கிட்டத்தட்ட 11 நிமிடங்களில் அந்த சிகிச்சையினை வெற்றிகரமாக முடித்தனர்.

இந்த ஆபரேஷனை மேற்கொண்ட டாக்டர்கள் இதுமாதிரி 2 மணி நேரம் தொடர்ந்து பூஜ்ய ஈர்ப்பு விசை இருக்குமானால் அப்பெண்டிக்ஸ் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துவிட முடியும் என்று நம்பிக்கையுடன் முழக்கம் செய்து அதனையும் செய்ய வரும் ஆண்டில் ஆயத்தமாக உள்ளனர். அதனை செய்துகொள்வதற்கும் பல ஆர்வலர்கள் (அந்த நோயுள்ளவர்கள்) வரிசையில் காத்திருக்கின்றனர்.

இவையெல்லாம் 2020-ல் செவ்வாய் கிரகத்தில் மனிதன் என்று கூறுகிறோமே அவர்களில் பாதுக்காப்பிற்காகவே! விண்வெளிக்கலம் பூமியினை கடந்து செவ்வாய்க்கு செல்லும் பாதையில் பூஜ்ய ஈர்ப்பு விசையில் பயணிப்பவர்களுக்கு ஏதாவது ஒன்று ஆகும்போது நமது ரோபோ டாக்டர்கள் பூமியிலிருந்து தொலைக்கட்டுப்பாட்டுக் கருவி (Remote Control) மூலம் கட்டளை பிறப்பித்து ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்துவார்கள்!