அறிவியல் அதிசயம் - MJM Iqbal

30-12-2006

Refer to Your Friends

சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்
 


திருமணமான புதுமணத் தம்பதிகளிடம் 'எங்கேப்பா ஹனிமூன்?-என்றபடி தோழர்களும், தோழியர்களும் கிண்டலாக கேட்பது வழக்கம். 'ஹனிமுன்' என்றால் தேனிலவு என்பது ஊரறிந்த ரகசியம். "ஹனிமூன்" போவது என்றால் நிலவுக்கு சென்று வருவது என்று அர்த்தம் அல்ல. ஆனால்.. 'நீங்கள்உண்மையிலேயே தேனிலவு கொண்டாட நிலவுக்கு சென்றுவர விருப்பமா? நாங்கள் அழைத்துச் செல்கிறோம் , வாருங்கள்" என்றபடி இருகரம் கூப்பி வரவேற்கிறது, நாசா.
நிலவுக்கு இதுவரை அப்பல்லோ, லூனா போன்ற விண்கலங்கள்தான் சென்று வந்து இருக்கின்றன. ஆனால் நிலாவில் எவரும் தங்கியதில்லை. நிலவுக்கு சென்று தங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் நாசா இப்போது ஈடுபட ஆரம்பித்து விட்டது.

சந்திரனின் ஏதாவது ஒரு துருவத்தில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மாதிரி புதிதாக சகல வசதிகளுடன் கூடிய ஆராய்ச்சி நிலையமொன்றை நிறுவி சாதனை படைக்க நாசா எண்ணியுள்ளது.

'சந்திரனில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தை எப்பொழுதும் நிரந்தரமாக ஒரு ஆராய்ச்சிக் குழு வலம் வந்து கொண்டேயிருக்கும்' என்கிறார் நாசாவின் விஞ்ஞானியும், நிர்வாகிகளில் ஒருவருமான ஸ்காட் ஹோரோவிட்ச். "சந்திரனில் நிரந்தரமாக ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் . அங்கிருந்து கொண்டு மக்கள் சந்திரனில், எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். சந்திரனில் இருந்து செவ்வாய்க்கும் செல்ல வழி செய்யப்படும்'' என்று அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கடந்த 2004-லேயே அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.

'சந்திரனின் வட துருவத்தின் ஒன்றிரண்டு பகுதிகளில் எப்பொழுதும் சூரிய ஒளி கிடைக்கவாய்ப்பு இருக்கிறது. இது அங்கு வருங்காலத்தில் மனிதன் வசிப்பிடம் அமைப்பதற்கு நிச்சயமாக வழிவகுக்கும்.

சந்திரனில் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான திட்டப்பணிகளை நாசா மற்றும் 13 பிற விண்வெளி ஆராய்ச்சி கழகங்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சந்திரனில் ஆராய்ச்சி மையத்தை நிறுவ என்னென்ன உத்திகளை கையாளுவது, புதிய ஆராய்ச்சி நிலையத்தின் பணிகள் என்னென்ன என்பது பற்றிய கருத்துருக்களையும், நோக்கங்களையும் தயாரித்து வருகின்றன.நாங்கள் ஒன்றும் இதில் தனியாக ஈடுபடப் போவதில்லை. பல்வேறு வர்த்தக மற்றும் சர்வதேச நாடுகளின் பங்களிப்பும் இதில் இருக்கும்'', என்கிறார். நாசாவின் மூத்த விஞ்ஞானியும் துணை நிர்வாகியுமான ஷானா டேல்.

சந்திரனில் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான தகவல், தொழில்நுட்பம் மற்றும் இன்னபிற வசதிகள் அனைத்தையும் நாசா வழங்குமென்று தெரிவித்த டேல், "சந்திரன்-பூமி போக்குவரத்திற்கான விண்கல வசதிகளை நாசா ஏற்கனவே தொடங்கி விட்டது'' என்கிறார். சந்திரனில் வசிப்பதற்கான அடிப்படை வசதிகளான மின்சாரம், தகவல், ரோபோட் போன்ற மாதிரி தொழில்நுட்ப அம்சங்களைப் பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்திரனில் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவ, ரோபோட்டின் பங்கு மிகவும் அவசியம் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். சந்திரனில் ஆராய்ச்சி நிலையத்தின் முழு அளவிலான சோதனை 2009-ல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ராக்கெட் மற்றும் விண்கலங்கள் தயாராகி வருகின்றன.

இரண்டாம் கட்ட சோதனை ஒத்திகை, வருகிற 2012-ல் நடத்தப்பட உள்ளது. 2008ல் முதன் முதலாக ரோபோட், சந்திரனின் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தப்படும். இதற்காக ரோபோட் அடங்கிய விண்கலம்,2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பி வைக்கப்படும். சந்திரனில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் இந்த ரோபோட் ஈடுபடும்.

"சந்திரனின் துருவங்களை பூமியிலிருந்து ஆராய்வது சற்று கடினம் என்பதால் தான், ரோபோட் அடங்கிய விண்கலம் அங்கு அனுப்பபடுகிறது. அதன்பிறகு வருகிற 2010ல், ஆய்வு நிலையம் அமைப்பதற்கான தகுந்த இடத்தில் இந்த விண்கலம் இறங்கும். இதன் மூலம் நமக்கு நிறைய முக்கியத் தகவல்கள் கிடைக்கும்'' என்கிறார் ஹோரோவிட்ச்.

சந்திரனின் துருவங்களில் பனிக்கட்டி மாதிரி காணப்படும் இடங்களில் ஆக்ஸிஜன், எரிபொருள் மற்றும் தண்ணீர் கிடைக்கலாம் என்று இத்திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தின் டொனால்டு கேம்பல் என்பவர் இராட்சத தொலைநோக்கி ஒன்றின் மூலம் சந்திரனை ஆய்வு செய்த போது, சந்திரனில் துருவங்களில் மேகமூட்டம் போன்ற காட்சிகள் தெரிந்தது. இது பனிக்கட்டி மலைகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இம்மாதிரியான பனிக்கட்டிகள், பயன்படத்தக்க ஒரு மூலப்பொருள்' என்று சந்தோஷத்துடன் குறிப்பிடும் விஞ்ஞானிகள் தரப்பு, "சந்திரனில் அமையவிருக்கும் நிரந்தர விண்வெளி நிலையத்திற்கு மட்டுமல்ல.. எதிர்கால சந்ததியினர்ஹதேனிலவு' செல்வதற்கும் இது ஒரு சாத்தியக்கூறு'' என்கிறார்கள்.

சுற்றுலாப் பயணிகள் ஊட்டி, கொடைக்கானல், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா என்று இனிமேல் 'டூர்' செல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு இனி உண்மையிலேயே, நிஜமான 'ஹனிமூன்' அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படும். சுற்றுலாத்துறைக்கும் அதுவொரு பொற்காலமாக அமையும்.



இதுவரை அறிவியல் அதிசயம் கட்டுரையில் 'அ" முதல் 'ஃ" வரை எல்லா தகவல்களையும் பார்த்தோம். விண்வெளி, பிரபஞ்சங்கள், பறக்கும் தட்டுகள், அதிசயத் தீவுகள், கோள்கள், விண்வெளி மின்தூக்கியில் ஆரம்பித்து சொகுசுக் கப்பல்கள், கடல் ஆராய்ச்சி, பறக்கும் கார், அதிநுட்ப புல்லட் ரெயில்கள், விமானங்கள், வானுயர்ந்த கட்டிடங்கள், நவீன பாலங்கள், ராடார், ராக்கெட், விண்கலங்கள், மின் தூக்கிகள், ரோபோட், தொலைகாட்சி, தொலைபேசி, செல்போன், தொலைநோக்கி, தொலை தொடர்பு, தகவல் பரிமாற்றங்கள், புலனாய்வு மற்றும் குற்றவியல் துறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள், நவீன மின்னணுக் கருவிகள், மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சிகள் - இப்படி எண்ணற்ற துறைகளைப் பற்றி ... அதாவது தீப்பெட்டி முதல் விண்கலம் வரை உங்களுக்கு அறிவியல் அதிசயம் கட்டுரையில் எழுதியிருந்தேன். வானமே எல்லை என்று இல்லாமல் அதற்கு மேலும் பல அரிய, புதிரான தகவல்கள் அறியமுடிந்தது. வாசகர்களாகிய உங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

மேலும் இன்று ஒவ்வொரு துறையிலும் அறிவியல் வளர்ச்சிகள், போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து வருகின்றன. சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாயிருந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் அவற்றை அனுபவிக்கும் வசதிமுறைகள் பணக்காரர்கள் மட்டுமே நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த முடியும் என்றறிருந்த நிலைமாறி, இன்று சாதாரண மக்களும் தொழில்நுட்பத்தின் அருமை, பெருமைகளை அனுபவிக்கமுடியும் என்ற அரிய செய்திகளை, இக்கட்டுரைகள் உங்களுக்கு விளக்கியது. பஞ்ச தந்திரக் கதைகளிலும், கற்பனைக் கதைகளிலும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய விஷயங்கள் கூட அறிவியலிலும் நிகழ்ந்திருக்கிறது, நிகழக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. இது விஞ்ஞானத்திற்கு வயதில்லை என்பதையே காட்டுகிறது.

பல பயனுள்ள தகவல்களை தந்த அறிவியல் அதிசயம் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது. மாணவ-மாணவிகள், இளைய தலைமுறையினர் ஆகியோருக்கு அறிவியல் தொடர்பான கல்வி, வேலைவாய்ப்பு, புதிய அறிவியல் தகவல்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்கள்
jmiqbalஎட்gmailடாட்com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

எம்.ஜே.எம்.இக்பால்

குறிப்பு: இக்பால் அவாகளது ஈமெயிலை எட் என்ற இடத்தில் @ ஐயும்  டாட் என்ற இடத்தில் "." (புள்ளியையும்) பயன்படுத்தவும்.

 

அடுத்த வாரத்திலிருந்து அவர்களது பழைய அறிவியல் அதிசியம் தொடர்கள் தொடரும்.