அறிவியல் அதிசயம் - MJM Iqbal

3-4-2004

Refer to Your Friends

ரோபட்டு'கள் வளர்ந்த பாதை...

'ரோபட்டு'கள் எனப்படும் எந்திர மனிதன் திடீரென்று வானத்தில் இருந்து குதித்து விடவில்லை. கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பதற்கு முன்பே 'ரோபட்டு'களின் சரித்திரம் தொடங்கி விட்டது என்று சரித்திர சான்றுகள் கூறுகின்றன. பல நூற்றாண்டுகளாக பல வடிவங்களில் 'ரோபட்டு'கள் உருவாகி வளர்ந்துள்ளன. ரோபட்டுகள் வளர்ந்த கதையை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.

கி.மு. 400_ம் ஆண்டில் கிரீஸ் நாட்டில் உள்ள டாரண்டம் என்ற இடத்தில் வசித்தவர் ஆர்கிடஸ். இவர் புகழ் பெற்ற கணித மேதை, தத்துவ நிபுணரும் கூட. இவர் மரத்தில் தயாரித்த புறா பொம்மை சிறகை படபட என்று அடித்தபடி பறந்து சென்றது. மரப்பொம்மை புறாவில் பறக்கச் செய்யும் எந்திர தொழில் நுட்பத்தை அவர் பயன்படுத்தி இருந்தார். அப்போது அந்த பொம்மை புறா சுமார் 200 மீட்டர் தூரம் தான் பறந்தது. தற்போது ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தின் முன்னோடியாக இவர் விளங்கினார்.

மேலும் அவரது பறக்கும் பொம்மை புறா தான் முதலாவது 'ரோபட்' என்றும் சரித்திர ஆய்வாளர்கள் கூறுவதுண்டு.

* 16_ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹன்ஸ் புல்மான் என்ப வர் ஒரு எந்திர மனிதனை உருவாக்கினார். காசு கொடுத்தால் இசைக் கருவியை சிறிது நேரம் வாசிக்கும் வகையில் அந்த எந்திர பொம்மை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

* 1533_ம் ஆண்டு ஜோகன் முல்லர் என்பவர் இரும்பினால் ஒரு பறக்கும் 'ஈ'யை உருவாக்கினார். இதே போல கழுகு ஒன்றையும் அவர் இரும்பில் வடிவமைத்து இருந்தார். இவை இரண்டும் தரையில் இருந்து கிளம்பி குறைந்த உயரத்தில் பறக்கும் வகையில் தயாரிக்கப்பட்டன.

* 1543_ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் டி என்பவர் பறக்கும் மரப்பறவை ஒன்றை உருவாக்கினார்.

* 1725_ம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் ஹீல்பர்ன் சாடேயூ என்ற இடத்தில் ஒரு வித்தியாசமான நாடகம் நடந்தது. இதில் நடித்த நடிகர்கள் அனைவருமே எந்திரங்கள் தான்.

* 1737_ம் ஆண்டு ஜாகுயஸ் வாகன்சன் என்பவர் ஒரு எந்திர இசைக் கருவியை உருவாக்கினார். 11 வகையான இசைக் கோவைகளை இசைக்கும் திறன் கொண்டதாக இது இருந்தது. அவர் ஒரு எந்திர வாத்து ஒன்றையும் உரு வாக்கினார். இந்த எந்திர வாத்து நிஜ வாத்து போல தண்ணீரில் நீந்தும், சாப்பிடும், எச்சம் போடும். அதற்கு ஏற்ப அதன் வயிற்றுக்குள் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன.

* 1801_ம் ஆண்டு ஜோசப் மரிய ஜாக்கர்டு எந்திர தறி எந்திரங்களை உருவாக்கினார். துளையிடப்பட்ட அட்டைகள் மூலம் இந்த துணி நெய்யும் தறி எந்திரங்கள் இயங்கின.

* 1853 சார்லஸ் பாப்பேஜ் கணக்கு போடும் எந்திரம் ஒன்றை உருவாக்கினார். இதுதான் முதலாவது கம்ப்யூட்டர் எந்திரமாகும்.

* 1847_ல் ஜார்ஜ் போளீ என்பவர் குறியீட்டு கணித முறையை உருவாக்கினார். பின்னாளில் இது கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

* 1890 நிகோலாய் டெஸ்லா முதன் முதலில் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் வாகனத்தை உருவாக்கினார்.

* 1921 செக் நாட்டு நாடக ஆசிரியர் கால் காபெக் எழுதிய 'எந்திர மனிதன்' கதாபாத்திரம் கொண்ட நாடகம் பரபரப்பாக பேசப்பட்டது.

* 1936 ஆலன் டூரிங் என்பவர் கம்ப்யூட்டர் செயல்பாடு பற்றிய கண்டுபிடிப்புகளை வடிவமைத்தார். இதுவே நவீன கம்ப்யூட்டர்கள் உருவாக அடிப்படையாகும்.

* 1942 ஐசக் அசிமோவ் 'ரோபட்டு'களுக்கான 3 முக்கிய விதிகளை உருவாக்கினார்.

* 1943 உலகின் முதலாவது எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் 'கொலாஸ்கஸ்' உருவாக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணித நிபுணர்கள், எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்கள் மற்றும் உளவுப்படை அதிகாரிகள் இணைந்து இந்த கம்ப் யூட்டரை உருவாக்கினார்கள்.

நாஜிப்படைகளின் சங்கேத குறியீடுகளை மொழி பெயர்க்க இந்த எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

* 1945 'இனியாக்' என்ற கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது.

* 1948_49 வில்லியம் கிரே வால்டர் என்ற இங்கிலாந்து கம்ப்யூட்டர் விஞ்ஞானி 'எல்மர்' மற்றும் 'எல்சி' என்ற இரு தானியங்கி எந்திரங்களை உரு வாக்கினார். இந்த இரண்டும் மனித உயிரினம் போல செயல்படும் தன்மை கொண்டதாக இருந்தது. இந்த இரு கருவிகளுக்கான 'சர்க் கியூட்' அமைப்புகளும் சிக்கல் இல்லாத வகையில் இருந்தது.

* 1950 மனிதனைப் போல புத்தி சாலித்தனம் கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்குவது குறித்து விஞ்ஞானி ஆலன் டூரிங் ஆய்வுகள் நடத்தினார்.

* 1954 ஜார்ஜ் டிவோல் மற்றும் ஜோ ஏஞ்சல்பெர்ஜர் இருவரும் இணைந்து உலகின் முதலாவது 'தொழிற்சாலை ரோபட்'டை உருவாக்கினார்கள்.

* 1956 அமெரிக்காவில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் 'செயற்கை புத்திசாலித்தனம்' பற்றி விவாதம் முக்கியமாக இருந்தது.

* 1966 ஸ்டாண் போர்டு ஆராய்ச்சி நிறுவனம் 'ஷாகீ' என்ற முதலாவது நகரும் ரோபட்டை உருவாக்கியது.

* 1973 இங்கிலாந்தில் எடின்பர்க் நகரில் செயல்பட்ட 'சொற்கை புத்தி சாலித்தனம்' துறையின் மூலமாக 'பிரெட்டி2' என்ற எந்திர மனிதன் உருவாக்கப்பட்டது.

பல்வேறு உதிரிப்பாகங்களை ஒன்றாக சேர்த்து ஒரு பொருளை உருவாக்கும் பணியை இந்த எந்திரம் செய்தது.

* 1979 ஹன்ஸ் மாரவிக் என்பவர் தானியங்கி வாகனம் ஒன்றை உருவாக்கினார். இது தடைகளை தாண்டி செல்லும் திறன் கொண்டதாக இருந்தது.

* 1989 சிறிய அளவில் ரோபட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமானது 'ஜெல்கிஷ்' என்ற பெயரில் முதலாவது நடக்கும் 'ரோபட்' உருவாக்கப்பட்டது.

* 1994 அமெரிக்க விஞ்ஞானிகள் 'டான்டி2' என்ற பெயரில் நடக்கும் 'ரோபட்' ஒன்றை உருவாக்கினார்கள். இது அலாஸ் காவில் உள்ள ஸ்பர் எரிமலை பகுதிக்கு அனுப்பப்பட்டது. இது எரிமலை பகுதியில் நடந்து சென்று சாம்பல் மற்றும் வாயுக்களை சேகரித்து வந்தது.

* 1996 எந்திர மீன்களை விஞ்ஞானி மிசேல் உருவாக்கினார். இதே ஆண்டில் ஹோண்டா நிறுவனம் நடக்க கூடிய, படிகளில் ஏறி இறங்ககூடிய, பொருட்களை சுமந்து செல்லக்கூடிய 'ரோபட்' ஒன்றை உருவாக்கியது.

* 1997 செவ்வாய் கிரகத்துக்கு 'பாத் பைண்டர்' விண் கலத்தை 'நாசா' அனுப்பியது. இந்த கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்க 'சோஜர்னர்' என்ற எந்திர மனிதனை அனுப்பியது. இந்த 'ரோபட்' செவ்வாய் கிரகத்தில் பயணம் செய்து ஆய்வுகளில் ஈடுபட்டது.

1999 'ஐபோ' எனப்படும் நாய்க்குட்டி ரோபட்டுகளை சோனி நிறுவனம் வெளியிட்டது.

* 2000 உலகம் முழுவதும் 7 லட்சத்து 42 ஆயிரத்து 500 தொழிலக ரோபட்டுகள் இருப்பதாக கணக்கெடுப்பு வெளி யானது. இவற்றில் பெரும்பாலானவை ஜப்பானில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.

2 ஆயிரமாவது ஆண்டுக்கு பிறகு 'ரோபட்டு'கள் அசுர வளர்ச்சி அடைந்தன. குறிப்பாக ஜப்பானின் சோனி, ஹோண்டா நிறுவனங்கள் ரோபட்டுகள் தயாரிப்பில் அதிக தீவிரம் காட்டின. நடனம் ஆடும் ரோபோ, இசைக் கருவிகளை இசைக்கும் ரோபோ, கச்சேரிகளை நடத்தும் ரோபோ... என்று பல வகையான 'ரோபோ'க்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

செயற்கை புத்திசாலித்தனம் நிறைந்த ரோபட்டுகளை உருவாக்குவது பற்றி ஆய்வுகள் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது.



2. 'ரோபட்'டுகளின் அடிப்படை தொழில் நுட்பம்


எந்திர மனிதன் எனப்படும் 'ரோபட்'டுகளின் ஆதிக்கம் ஒவ்வொரு துறைகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 'ரோபட்'டுகளின் ஆரம்ப கால வரலாறு குறித்து கடந்த இதழில் பார்த்தோம். இந்த வாரம் 'ரோபட்'டுகளின் அடிப்படை தொழில் நுட்பம் குறித்த தகவல்களை காணலாம்.


தொழிற்சாலைகள், ஆராய்ச்சிப் பணி மற்றும் பொழுது போக்கு துறைகள் என்று பல்வேறு துறைகளில் 'ரோபட்'டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பல வகையான உருவ அமைப்பை கொண்டிருந்தாலும் 'ரோபட்'டுகளின் பல குணாதிசயங்கள், அடிப்படை தொழில் நுட்பம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

குறிப்பாக அனைத்து 'ரோபட்'டுகளிலும் அவற்றின் நகரும் உடல் பகுதி ஒரு பொதுவான அமைப்பாகவே இருக்கும். இவற்றில் சில 'மோட்டார்' எந்திரங்கள் மூலம் இயக்கப்படும் சக்கரங்கள் மூலம் நகருகின்றன. மற்றவை எல்லாம் ஒரு டஜன் நகரும் உடல் பகுதிகள் மூலம் நகரு(நடக்)கின்றன. நகரும் பகுதிகள் உலோகம் அல்லது 'பிளாஸ் டிக்' பொருட்களால் தயாரிக்கப்பட்டவை யாக இருக்கும்.

மனித உடம்பில் உள்ள எலும்புகள் மூட்டுகளின் மூலம் இணைக்கப்பட்டிருப்பது போல 'ரோபட்'டுகளின் ஒவ்வொரு பகுதிகளும் 'எந்திர மூட்டு'கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ரோபட்டின் சுழலும் சக்கரங்(கால்)களும் சுழலும் மூட்டுப் பகுதியும் ஒரு இயக்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இது தவிர மின் மோட்டார் மற்றும் வரிசுருள் இயக்கிகள், நீரியல் முறை இயக்கிகள், காற்றியக்க இயக்கிகள்  போன்றவை மூலமும் 'ரோபட்'டுகளின் இயக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த இயக்கிகளை இயக்குவதற்கான சக்தி 'பேட்டரி' மூலம் கிடைக்கிறது.

நீரியல் முறை மூலம் இயங்கும் 'ரோபட்'டுகளில் அழுத்தப்பட்ட திரவங்களைப் பெறுவதற்காக ஒரு 'பம்ப்' கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கும். அதே போல அழுத் தப்பட்ட வாயுக்கள் மூலம் இயங்கும் 'ரோபட்'டுகளில் ஒரு காற்று அழுத்த எந்திரம் கூடுதலாக இருக்கும்.

இந்த இயக்கங்கள் அனைத்தும் பல வயர் இணைப்புகள் மூலம் ஒரு மின் சுற்றில்  இணைக்கப்படுகிறது. இந்த சர்க்கியூட்டுகள் நேரடியாக மின் மோட்டார்கள் மற்றும் வரிச் சுருள்களை உயிரூட்டுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் சக்தி மின் வால்வுகளை இயக்குவதற்கு உதவுகின்றன. இந்த வால்வுகள் அழுத்தப்பட்ட திரவங்களின் அளவை தீர்மானிக்கின்றன. இதன் மூலம் ரோபட்டுகளின் கால்கள் அடியெடுத்து வைக்கின்றன.

சுருக்கமாக சொல்வது என்றால் ரோபட்டின் கட்டுப்பாட்டு பிரிவில் இருந்து பெறப்படும் கட்டளைகள் மூலம் வால்வுகள் இயக்கப்படுகின்றன. ரோபட் இயங்கும் போது வால்வுகள் திறந்து பம்பில் இருந்து வரும் அழுத்தப்பட்ட திரவங்கள் ரோபட்டின் காலில் இணைக்கப்பட்ட ஒரு குடுவையின் பிஸ்டனை சென்றடைகிறது. இந்த அழுத்த திரவங்கள் பிஸ்டனை இயக்குவதால் கால்கள் அடியெடுத்து வைக்கின்றன.



இதே போல உடல் பகுதிகளை முன்னும் பின்னும் அசைக்க இரு புறமும் இயங்கும் பிஸ்டன்கள் பயன்படுத்தப் படுகின்றன. ரோபட்டில் உள்ள 'கம்ப்யூட்டர்' இந்த சர்க்கியூட்டின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலான ரோபட்டுகள் மறுசெயல் அமைப்பு வசதியைக் கொண்டது ஆகும். இதன் மூலம் செயல்பாடுகளை நமக்கு ஏற்றவாறு எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அனைத்து ரோபட்டுகளிலும் 'உணரி முறை' இருக்காது. சில ரோபட்டுகள் பார்க்கும், கேட்கும், நகரும் மற்றும் சுவை அறியும் திறன் கொண்டவை. இருப்பினும் தன் இயக்கங்களை தானே அறிந்து கொள்ளும் தன்மை  அனேகமாக அனைத்து ரோபட்டுகளில் இருக்கும் பொதுவான முறையாகும்.

ஒரு நிர்ணய வடிவமைப்பு ரோபட்டுகளின் மூட்டுக்களில் பல இடைவெளிகள் கொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சக்கரத்தின் ஒரு பகுதியில் ஒளி உமிழும் டயோடு  பொருத்தபட்டிருக்கும்.

இந்த டயோடு மூலம் உமிழப்படும் ஒளி சக்கரத்தின் இடைவெளியில் புகுந்து மறுபுறத்தில் உள்ள ஒரு உணரி மூலம் சென்றடைகிறது. ரோபட்டின் மூட்டு நகரும்பொழுது இதனுடன் இணைக்கப்பட்ட சக்கரங்கள் நகரத் தொடங்குகின்றன. அவ்வாறு சுழலும் பொழுது இடைவெளிகளும் தடுப்புகளும் மாறிமாறி வருகின்றன. இடை வெளிகள் வரும்பொழுது ஒளிக்கற்றை கள் உணரியைச் சென்றடைகின்றன.

தடுப்புகள் வரும்பொழுது ஒளிக் கற்றைகள் உணரியைச் சென்றடைவது தடுக்கப்படுகின்றன. இவ்வாறு மாறி மாறி ஏற்படும் மாறுதல்களை கவனித்துக் கொண்டிருக்கும், உணரி இந்த தகவல்களை கணிணிக்கு அனுப்புகிறது. இந்த அளவுகளை வைத்து ரோபட்களின் மூட்டுகளின் இயக்க அளவை கம்ப்யூட்டர் துல்லியமாக கணக்கிட்டு தெரிவிக்கிறது.

இவ்வாறு பல பகுதிகளைக் கொண்டும் பல நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டும் பலவிதமான திறம்பட்ட அசாதாரணமான எந்திர மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். இவற்றில் இன்று தொழிற்சாலையில் புகுந்து உற்பத்தியை கலக்கிக் கொண்டிருக்கிறது எந்திரக் கரம்

'உழைக்கும் கரங்களே உருவாக்கும் கைகளே நாளை புது உலகை உருவாக்கும் கைகளே' என கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் அருமை பெருமைகளைப் பற்றி பாடினார். எந்திர உலகின் பாட்டாளிகளில் முதன்மை வகிக்கும் இந்த எந்திரக் கைகள் இந்தப் பாட்டுக்கு ஏற்றவாறு புது உலகைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இவற்றின் உழைப்பு மூலம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தொழில் உற்பத்தி புரட்சிகள் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றன.

ரோபோட் என்ற பெயர் 'செக்' மொழியில் 'ரோபோடா'  என்ற வார்த்தையிலிருந்து வந்தது ஆகும். ரோபோடா என்றால் 'செக்' மொழியில் அடிமைத் தொழிலாளி என்று அர்த்தம். பெரும் பாலான ரோபோட்டுகள் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்து உற்பத்திப் பிரிவுகளில் பணியாற்றுகின்றன. மிகவும் கனமான பொருட்கள் உற்பத்தி மற்றும் மீள்நிகழ் உற்பத்திகளில் கலக்கிக் கொண்டிருக்கின்றன. மனிதர்களால் முடியாத ஆபத்தான மற்றும் எளிதாக சோர்வுற்றுப் போகும் பணிகளில் இந்த எந்திரத் தொழிலாளிகள் தன் பணிகளை செவ்வனே செய்து முடிக்கின்றன. இவ்வாறு உற்பத்தித் துறைகளில் பணியாற்றும் ரோபோட்டுகளில் பெரும் பான்மையானவை 'எந்திரக்கரங்கள்' வகைகளைச் சார்ந்தது.



இந்த எந்திரக் கரங்கள் ஏழு உலோகப் பகுதிகளைக் கொண்டது. இந்தப் பகுதிகள் ஆறு மூட்டுகளில் இணைக்கப்பட்டிருக்கும் கணினிகள் மூலம் பிறப்பிக்கப்படும் கட்டளைகள் மூட்டுகளை இயக்கப்பயன்படும் 'ஸ்டெப்' மோட்டார்களை சுழலச் செய்து இந்தக் கைகள் இயக்கம் பெறுகின்றன. மிகப் பெரிய எந்திரக்கைகள் நீரியல் மற்றும் காற்றியக்க முறைகள் மூலம் இயக்கப்படுகின்றன. மற்ற மோட்டார்களைப் போல் இல்லாமல் இந்த ஸ்டெப் மோட்டார்களின் துல்லியமான மற்றும் சரியான அளவில் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்தத் திறனால் கணினி இயந்திரக் கரங்களை மிகவும் சாதுர்யமாகவும், எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப அதே நிலைகளில் துல்லியமாகவும் இயக்குகிறது.

இந்த ரோபோட்டுகள் இயக்க உணரிகளை கொண்டிருப்பதால், இவற்றின் மூலம் நகரும் பாகங்களின் அளவு தேவையான அதே சமயம் துல்லியமான அளவாக இருப்பதை உறுதி செய்கிறது. 6 மூட்டுகளைக் கொண்ட தொழிற்சாலை ரோபோட்டுகள் மனித கரங்களின் அடிப்படையை ஒத்ததாக இருக்கும்.

இந்த ரோபோட்டுகள் தோள்பட்டை, முழங்கை மற்றும் மணிக்கட்டுகளைக் கொண்டதாக இருக்கும். இதில் தோள்பட்டை நிலையான உடல் கட்டமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த வகை ரோபோட்டுகள் 6 டிகிரி கோணத்தில் சுழன்று இயங்கும் தன்மை கொண்டது. (நமது கரங்கள் 7 டிகிரி கோணம் வரை சுழன்று இயங்கும் தன்மை கொண்டது ஆகும்). நமது கரங்கள், கைகளை ஒரு இடத்தில் இருந்து மறு இடத்திற்கு நகரச் செய்வதற்கு உதவுகின்றன. இதைப் போலவே ரோபோவில் கரங்களும் இதன் கைகளை ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு நகரச் செய்வதற்கு உதவி புரிகின்றன. இந்தக் கைகள் என்ட் எஃபெக்டர் என்றழைக்கப்படுகிறது. என்ட் எஃபெக்டர்கள் நமது கைகளைப் போலவே பல்வேறுவிதமான பொருட்களை இலாவகமாக பிடித்து தூக்குவதற்கு பயன்படுகிறது.

எந்திரக் கரங்கள் அழுத்த உணரிகளை கொண்டிருக்கும். அழுத்த உணரிகள் ரோபோட்டுகளில் கைகளில் எவ்வளவு அழுத்தத்தில் பிடித்திருக்கிறது என்பதை கணினிக்கு தெரியப்படுத்துகின்றன. இதன் மூலம் இது பிடித்திருக்கும் பொருட்கள் நழுவாமலும், உடையாமலும் இருக்க வழிவகை செய்யப்படுகிறது. மற்ற என்ட் எஃபெக்டர்கள் துளையிடும் கருவிகள், தீப்பந்தம் மற்றும் தெளிப்பு பூச்சு எந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த எந்திர கரங்கள் போலவே தொழிற்சாலை ரோபோட்டுகள் வடிவமைக்கப்படுகின்றன. தொழிற்சாலை உற்பத்தியில் ஒரு கண்ணாடி ஜாடியின் மூடியைப் பொருத்தும் பொழுது எவ்வளவு திறமையாக செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

முதலில் இந்த மூடியை ஜாடியில் சரியாகப் பொருத்துவதற்கு ரோபோட்டுகளுக்கு சொல்லித் தரப்படுகிறது. அதாவது ஒரு 'புரோகிராமர்' மூலம் இதன் கரங்களை ஒரு கையடக்குக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் இயக்கத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த அசைவுகளின் வரிசைகளை இந்த ரோபோட்டுகள் பதிவு செய்து கொண்டு இந்தப் பணியை எவ்வளவு முறை வேண்டுமானாலும் மிகவும் சிறப்பாக செய்து முடிக்கின்றன.

தொழிற்சாலை ரோபோட்டுகள் பெரும்பாலானவை வாகன உற்பத்தியில்தான் பணியாற்றுகின்றன. இவைகள் ஒருங்கிணைப்புப் பகுதியில் வாகனங்களின் பாகங்களை ஒன்றிணைக்கப் பயன்படுகிறது. இந்த மாதிரிப் பணிகளில் உள்ள வேலைப்பளுவை கணக்கிலே எடுத்துக் கொள்ளாத இந்த எந்திர மனிதர்கள் திரும்ப திரும்ப அதே பணிகளை திறம்பட செய்து முடிக்கின்றன. பல பணிகளை துல்லியமாக (வியர்வை சிந்தாமல்!) முடிப்பதில் மனிதர்களை மிஞ்சுகின்றன. துளையிடும் பணியின்போது அதே இடத்தில் சரியாக துளையிடுவதும், அதேமாதிரி எத்தனை துளைகள் போட வேண்டுமென்றால் கூட சலிக்காமல் துளையிடுவதும், போல்ட்டுகளை பொருத்தும் பொழுது சரியான விசை அளவில் முறுக்குவதும் இதன் செயல்பாட்டின் சிறப்பம்சங்களாகும். வாகன உற்பத்தியில் மட்டுமல்ல, கணினி உற்பத்தித் துறையில் இதன் பணிகள் மகத்தானவை. மிகவும் சிறியதான நுட்பமான நுண்தொடு துண்டுகளை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுகின்றன.

அடுத்த இதழில்...

வீட்டு உபயோக ரோபட்டுகள் பற்றிய தகவல் இடம் பெறுகிறது.

சூரியனை ஆராயும் யூலிசஸ் செயற்கை கோள்



விண்வெளியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் சூரியனை மையமாக கொண்டே சுழலுகின்றன. சூரியனில் இருந்து கிளம்பும் வெப்ப கதிர்கள், சூரியனில் நிலவும் காந்த சக்திகள், அங்கு நிலவும் காந்தப் புயல்கள் போன்றவை காரணமாக பூமி முதல் பிற கிரகங்கள் வரை பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பி அதன் மூலம் சூரியனை ஆராயலாம் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த சூரிய ஆராய்ச்சியில் இறங்கின. இதைத்தொடர்ந்து சூரியனை ஆராய 1990-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி யூலிசஸ் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது டிஸ்கவரி விண்வெளி ஓடம் யூலிசஸ் செயற்கைகோளை விண்ணுக்கு சுமந்து சென்றது.

சூரியனில் உள்ள தட்ப வெப்ப நிலை,அங்கு நிலவும் காந்த புயல் பற்றிய தகவல்கள் சேகரித்தல், சூரியனில் ஏற்படும் கரும் புள்ளிகள் போன்றவை பற்றி யூலிசஸ் ஆராயும் என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.

டிஸ்கவரி ஓடத்தின் சரக்கு பகுதியில் யூலிசஸ் கோள் ஏற்றப்பட்டு விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு சென்றதும் யூலிசஸ் கோள் விண்ணில் இருந்த படியே சூரியனை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.

சுமார் 95 கோடி கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த யூலிசஸ் கோள் அங்கிருந்தபடியே சூரியனை ஆராயத்தொடங்கியது.

யூலிசஸ் கோளின் எடை-366.7 கிலோ கிராம்.

நீளம்-3.2 மீட்டர். அகலம்-3.3 மீட்டர். உயரம்-2.1 மீட்டர்.

இதில் 9 வகையான ஆய்வுக்கருவிகள் இடம் பெற்று இருந்தன.

சக்தி வாய்ந்த கேமிரா, சூரிய கதிர் வீச்சுகளை ஆராயும் கருவிகள், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை யூலிசஸ் கோளில் பொருத்தப்பட்டு இருக்கிறது. அணுசக்தி மூலம் மின் சக்தியை தயாரிக்கும் வசதிகள் இதில் அமைக் கப்பட்டுள்ளது.

இதன் மூலம் யூலிசஸ் கோள் பயணத்தின் போது தனக்கு தேவையான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்து கொள்ளும்.

யூலிசஸ் கோள் விண்ணில் ஏவப்பட்டபோது அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். ஆனால் யூலிசஸ் கோள் அற்புதமாக செயல் பட்டதால் அதன் ஆயுட்காலம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.

யூலிசஸ் கோள் தனது பயணத்தின் போது முதல் தடவையாக 1992 ம் ஆண்டு ஜுபிடர் கிரகத்தை நெருங்கி ஆராய்ந்தது. காந்தப்புலம் மிக்க குளிர்ச்சியான ஜுபிடர் கிரகத்தை ஆராய்ந்த பிறகு சூரியனை நோக்கி பயணம் செய்தது.சூரியனை அதன் இரு முனைகளில் இருந்தும் ஆய்வு செய்தது. தனது பயணத்தின் அடுத்த கட்டமாக கடந்த நவம்பர் மாதம் மீண்டும் ஜுபிடர் கிரகத்தை நெருங்கி இருக்கிறது.தொடர்ந்து ஜுபிடர் கிரகத்தை ஏப்ரல் மாதம் வரை வலம் வந்து ஆராயும்.

விஞ்ஞானிகளின் தற்போதைய கணிப்புபடி யூலிசஸ் கோள் 2007ம் ஆண்டு வரை விண்வெளியில் சுற்றி வந்து சூரியனை ஆராய்ந்து பூமிக்கு தகவல்களை அனுப்பி வைக்கும்.