بسم الله الرحمن الرحيم

சூபித்துவத் தரீக்காக்கள்... 
அன்றும் இன்றும்

ஏ.சீ முஹம்மது ஜலீல் ( மதனீ )

Refer this Page to your friends

தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)

முறைப்பாடு : 2
தொழுகையின் சிறப்பும். .. தஃலீம் தொகுப்பும். ..

தொழுகையானது இஸ்லாத்தின் இரண்டாவது தூணாகும்.  இதை விட்டவனுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என்பதும் நபிமொழியாகும்.  தப்லீக் தஃலீம் தொகுப்பில் தொழுகைக்காக ஒரு தனிப் பகுதியே ஒதுக்கப் பட்டுள்ளது.  இதில் தொழுகையின் சிறப்புகள், அதனால் கிடைக்கும் நன்மைகள், விடுவதால் ஏற்படும் தண்டணைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.  இதை எவரும் மறுக்க முடியாது.  ஆனால் நபியவர்கள் தொழுகையின் சிறப்புகளைக் கூறியது போல, தொழாதவர்களுக்குரிய தண்டணைகள் பற்றிக் கூறியது போல, எவ்வாறு தொழவேண்டுமெனவும் கூறினார்களா இல்லையா?  அப்படியாயின் நபி வழிப்படி தொழும் முறையோ, தொழுகையின் சட்ட திட்டங்களோ ஏன் தப்லீக்கில் போதிக்கப்படுவதில்லை ?.

உதாரணமாக ஒரு பாடசாலையில் கம்யூட்டர் கல்வியின் சிறப்பு அதன் முக்கியத்துவம் பற்றி மாத்திரம் போதிக்கப்படுகின்றது கம்யூட்டர்க் கல்வி போதிக்கப்படுவதில்லை.  இந்நிலையில் இந்தக் கல்வியால் மாணவர்களுக்குக் கிடைக்கும் பயன் யாது?  பூச்சியம் தான் மிச்சம்.  இதுதான் இன்று தப்லீக்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.  நபி வழிப்படி தொழும் முறை பற்றி அதன் சட்டதிட்டங்கள் பற்றி, தொழுகையில் ஓத வேண்டியவை, வுழூ, தொழுகையின் பர்ழு ஷர்த்து, சுன்னத்துக்கள், தொழுகையை முறிப்பவைகள் பற்றியெல்லாம் ஏராளமான ஹதீஸ்களும் சட்டதிட்டங்களும் உள்ளன.  இவை தஃலீம் தொகுப்பில் மருந்துக்கேனும் உண்டா?.  இல்லை தப்லீக் முக்கியஸ்த்தர்களுக்கேனும் தெரியுமா?

அவர்களாவது 40 நாள் உடல் பொருள், தொழிலைத் தியாகம் செய்து தப்லீக்கில் வெளிக் கிளம்பும் அப்பாவிக்கார்க்கூன்களுக்கு அன்றாட மஸூராவில் ஒரு நேரம் ஒதுக்கிக் கற்றுக் கொடுக்கின்றார்களா? ஓவ்வொரு நாளும் தஃலீம் வாசிக்க 6-7 மணிநேரங்கள் ஒதுக்கப்படுகின்றதே.  நபியவர்கள் சொல்லித்தந்த சட்டதிட்டங்கள் பற்றிக் கற்பிக்க அரைமணி நேரமாவது ஒதுக்கப்படுகின்றதா?  இல்லையே?  அன்பின் கார்க்கூன்களே! நீங்கள் எவ்வளவு தடவைகள் வக்தில் வெளிக்கிளம்பியுள்ளீர்கள்.  மார்க்க சட்ட திட்டங்கள் பற்றி எந்தளவுக்கு நீங்கள் தப்லீக்கில் சென்று கற்றுக் கொண்டீர்கள் என்று உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்லுங்கள். 

இது பற்றி அவர்களிடம் வினவினால் தயாராக ஒரு பதில் வைத்திருக்கின்றார்கள்.  'பழாயில்களைப் பற்றி தஃலீம் புத்தகத்தில் படிப்பது, மஸாயில்களை (சட்டங்களை) ஆலிம் உலமாக்களை அணுகி கால்மடித்து ஹதிய்யாக்களைக் கொடுத்துப் படித்துக் கொள்வது' இதுதான் பதில்.  சரி 40 நாள் 4 மாதம் என்றெல்லாம் நீண்ட காலங்கள் தொழில் துறை, உத்தி யோகம் பொறுப்புக்களைத் துறந்து மக்கள் வெளிக்கிளம்பிச் செல்கின்றார்கள்.  இதிலாவது தொழுகை பற்றிய இன்னும் மார்க்க சம்பத்தப்பட்ட எந்தநிகழ்ச்சியாவது இடம்பெறுகின்றதா?  அங்கும் அதே தஃலீம் அதே அமல்களின் சிறப்பு, சலித்துப் போனால் உசார் படுத்த ஹஜ்ஜின் சிறப்பு ஸதக்காவின் சிறப்பு எனும் பெயரில் இரு நாவல்கள்.  இதிலே துப்பறியும் கதைகளும், மெய்சிலிர்க்க வைக்கும் கதைகளும் தாராளமாக எவ்வித முகவரியுமில்லாது அவிழ்த்து விடப்படுகின்றன. 

இந்தப் பொன்னான நேரத்தை மார்க்க தொழுகை விடயங்களைக் கற்பிப்பதில் செலவிடலாமே என்று சொல்லிப் பாருங்கள்.  அதற்கும் ஒரு ரெடிமேட் பதில் 'ஆறு நம்பருக்கு அப்பால் பேசுவது உஸூலுக்கு மாற்றமானது.  அதைப் பெரியார்கள் அனுமதிப்பதில்லை.  கண்ட கண்ட மௌலவி மார்களிடமெல்லாம் மார்க்கம் கற்கக் கூடாது.  பேணுதலான, இந்த ஹக்கான வேலையில் ஊறியவர்களிடத்திலேயே மார்க்கம் படிக்க வேண்டுமென்று' தத்துவம் பேசுவார்கள்.  அவர்களிடமாவது கேட்டுப்படிக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.

இன்றைக்கு ஒவ்வொரு ஊர் கிராமங்களிலும் கூட 4மாதங்கள் ஒருவருடம் வக்து முடித்தவர்கள் கூட உண்டு.  இவர்களிடம் எந்தளவு மார்க்க விடயங்களைத் தேடிப் படித்துள்ளீர்கள், தொழுகை துஆக்கள், அதன் சட்டங்கள், இன்னும் தொழுகை பற்றித் தெரிய வேண்டிய நூற்றுக் கணக்கான சட்டங்கள் உள்ளனவே!! இவற்றில் சிறிதளவாவது தெரியுமா?  என்று விசாரித்துப் பாருங்கள். அப்படி ஒரு சிலருக்குத் தெரிந்திருந்தாலும் அது அவரது தனிப்பட்ட முயற்சியால் - ஏனைய இஸ்லாமிய நூல்களைப் படித்ததால் கற்ற விடயங்களாகத்தான் இருக்கும்.  இதை நீங்கள் ஏற்கத் தயங்கினால் நீங்களே பத்து தப்லீக் கார்க்கூன்களை அழைத்து அவர்களிடத்தில் சில தொழுகையின் சட்டங்களைக் கேட்டுப்பாருங்கள் எத்தனை பேர் சரியான பதில் சொல்கின்றார்கள் என்று பாருங்கள். ??


தப்லீக் பெரியார்கள் மார்க்க சட்டதிட்டங்களைப் பற்றி தமது தப்லீக் கார்க்கூன்களுக்கு கற்றுக் கொடுக்கத் தயங்குவதிலும் ஒரு உண்மை மறைந்திருக்கின்றது.  அதாவது டில்லி பெரியார்கள் ஹதீஸின் அடிப்படையிலுள்ள சட்டங்களை ஏற்றுக் கொள்வதில்லை அவர்களது ஹனபி மத்ஹபு நூலிலுள்ள சட்டங்களே இஸ்லாம் என்றும் அதைத்தான் பின்பற்றுவது கடமையென்றும் கூறி நபிவழிச் சட்டங்களை மட்டுமன்றி, ஏனைய மத்ஹபுச் சட்டங்களையும் புறக்கணிப்பவர்கள்.  எனவே மார்க்க சட்டங்கள் கற்பிப்பதென்றால் ஹனபி மத்ஹபுப் படிதான் கற்பிக்க வேண்டுமென்பதில் இவர்களுக்கு வெறி ஆனால் ஏனைய மத்ஹபுகளைச் சார்ந்த கார்க்கூன்கள், தப்லீக் உலமாக்கள் இதனை ஜீரணிக்க மாட்டார்கள்.  ஆகவே இந்த மத்ஹபுச் சட்டப் பிரச்சினையால் தப்லீக்கின் இயக்க ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தடைப்படலாம் என்ற குறுகிய சுயநல எண்ணத்தாலேயே இவர்கள் ஆறு நம்பருக்கு அப்பால் போய் சட்டதிட்டங்கள் போதிக்கப்படுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். தமது இயக்கத்தை வளர்ப்பதற்காக இஸ்லாத்தின் ஆணிவேரான மார்க்க சட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேராமல் தடை வேலி போட்டிருக்கிக்கும் இவர்கள்தான் நபியவர்களை நேசிப்பவர்களா? நபிவழிப்படி வாழ்பவர்களா?  சிந்திப்பீர்களாக. .

முறைப்பாடு : -3
ஹதீஸ் போதனையா. . கப்ஸா போதனையா ??

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எம்மனைவருக்கும் ஈருலக வழிகாட்டியாக வந்தவர்கள்.  எமக்குத் தேவையான எவ்விடயத்தையும் அவர்கள் சொல்லித்தராமல் விட்டதில்லை. எனவே ஒரு முஸ்லிம் எப்படித்தொழ வேண்டும் என அறிந்து கொள்ள விரும்பினால் ஹதீஸின் ஒளியில் எவ்வித சந்தேகங்களும் மீதியிருக்காத அளவுக்குத் தெட்டத் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு தொழும் முறை, அதன் சிறப்பு, அதை முறிப்பவை, அதனை விட்டால் கிடைக்கும் தண்டணை இப்படி ஏராளமான நபி மொழிகள் இருக்கின்றன. 

ஆனால் தப்லீக் தஃலீம் தொகுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதில் தொழுகை பற்றிய பகுதியின் ஆரம்பத்தில் மாத்திரம் சில அல்குர்ஆன் வசனங்களும் சில நபி மொழிகளும் இடம் பெறும் அதற்கு அடுத்த கட்டமாக 'ஒரு ஹதீஸில் வருவதாவது.... ' ஒரு அறிவிப்பில் வருவதாவது... ' என்ற பெயரில் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் இடம்பெறும். 
ஜக்கரிய்யா மௌலானாவோ ஹதீஸ்கலை மேதையாகிற்றே. . 20-25 வருடங்கள் புகாரி – முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்கள் நடத்தியவர்களாயிற்றே. . புகாரி முஸ்லிமில் தொழுகை பற்றி ஹதீஸ்களே இல்லையா?  என்று உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். 

உண்மைதான் அதில் வரும் ஹதீஸ்களையெல்லாம் சொன்னால் மக்கள் நபிவழிப்படி தொழ ஆரம்பித்து விடுவார்களே ஹனபி -ஷாபி மத்ஹபின் ஹதீஸூக்கு மாற்றமான சட்டங்களை அலட்சியம் செய்து விடுவார்களே. . அதன் பின்பு எல்லோரும் நபிகளுக்குத்தான் மதிப்பளிப்பார்கள்.  பெரியார்களுக்கு மதிப்பளிக்க மாட்டார்களே!. நபிவழியைப் படித்துக் கொடுத்தால் இவர்களது திஸ்த் திய்யாத்தரிக்காவிடம் பைஅத் செய்ய எவன் வரப்போகின்றான். ?? எனவேதான் தமது நோக்கம் நிறைவேற வேண்டுமென்பதற்காகவே ஆதாரப்பூர்வமான சட்ட சம் பந்தப்பட்ட ஹதீஸ்களைக் கூறுவதைத் திட்டமிட்டுத் தவிர்த்துள்ளார்கள்.  இவர்களது நோக்கம் பாரரர்களை ஹனபி ஷாபி மத்ஹபுக்குள்ளேயே வைத்துக் கொண்டு - அதை விட்டு வெளி யேற விடாது, இபாதத் எனும் போர்வையிலேயே ஹதீஸ் எனும் பெயரிலேயே பெரியார்களின் வீர தீர சாகசக் கதைகளைக் கூறி பெரியார்கள் மீது குறுட்டுப் பக்தியை உண்டு பண்ணி பின்னர் திஸ்த்திய்யாத் தரீக்காவுக்குள் உள் வாங்கிக் கொள்வதுதான் இவர்களது அந்தரங்க உள் நோக்கம்.  இதை நீங்கள் இப் போது ஒப்புக்கொள்ளா விட்டாலும் போகக் போக ஏற்றுக் கொள்வீர்கள். . என்னைப் போன்று. ..

உதாரணத்துக்கு சில பலவீனமான ஹதீஸ்கள். ..

1-தொழுகையைப் பேணித் தொழுபவருக்கு 5வித உபகாரமும் விடுபவருக்கு 15 வகை தண்டனையும்.  ஹதீஸில் வருவதாக சிலர் சொல்கின்றார்கள் என்று இச்சம்பவம் ஆரம்பிக்கின்றது.  (அமல்களின் சிறப்பு பக்கம் 50) நன்மை தண்டணையெல்லாம் மறுமை பற்றிய விடயம்.  அதைக் குர்ஆன் ஹதீஸில் இருந்தால் மட்டுமே ஏற்க முடியும்.  அப்படியென்றால் இந்த 'சிலருக்கு'' இவற்றைச் சொல்லிக் கொடுத்தது யார்? 

2- ஒரு ஹதீஸில் வருவதாவது. ..தொழுகையைப் பேணுவதால் மஃரிபா எனும் இறை ஞான ஒளி உண்டாகின்றது.  58ம் பக்கம்
இந்த ஹதீஸ் எங்கிருக்கின்றது.  அதன்தரம் என்ன என்று எடுத்துக் காட்ட முடியுமா?

3 தொழுகையை விட்டவனைப் பார்த்து சொர்க்கம் உனக்காக நானில்லை எனக்காக நீயில்லையென்றும், நரகம் என்னிடம் வந்துவிடு உனக்காக நீ எனக்காக நான் என்றும் கூறும்.  ப: 63

4 நரகத்தில் 'லம்லம்' எனும் காடுண்டு அதில் ஒட்டகக் கழுத்துள்ள பாம்புண்டு அதன் நீளம் ஒரு மாதம் நடந்து செல்லுமளவுக்கு இருக்கும்.  தொழுகையை விட்டோர் அதில் போடப்படுவார்கள். 

5.நரகத்தில் ஜூப்புல் ஹூஜ்ன் எனும் மைதானம் இருக்கின்றது.  அதில் கோவேறு கழுதையின் அளவு பெரிய தேள் இருக்கின்றது.  தொழுகையை விட்டவர்களை அது வேதனை செய்கின்றது என ஒரு ஹதீஸில் வந்துள்ளது.  (பக்கம் 63 அதே அமல்களின் சிறப்பு)

இவையெல்லாம் மறைவான விடயங்களல்லவா?  இப்படியான செய்திகளைச் சொல்லும் போது அவற்றின் நம்பகத் தன்மையை உறுதி செய்வது அவசியமல்லவா?  மக்களைப் பயம்காட்ட வேண்டுமென்பதற்காக நினைத்ததையெல்லாம் சொல்லி விட முடியுமா? .
6-எவனொருவனின் முதல் வார்த்தையும் இறுதி வார்த்தையும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவாக இருக்கின்றதோ அவர் ஆயிரம் வருடங்கள்தான் வாழ்ந்த போதிலும் தான் செய்த எந்தப் பாவத்தைப் பற்றியும் விசாரணை செய்யப்பட மாட்டார். 
(தப்லீக் தஃலீம் தொகுப்பு ப: 596)

இதன் அறிவிப்பாளர் வரிசையில் பல குளறுபடிகள் இருந்தும் அவற்றையெல்லாம் வேண்டுமென்றே ஜக்கரிய்யா மொலானா கண்டு கொள்ளாமல்ப் புறக்கணித்திருக்கின்றார்.  இந்த ஹதீஸின் படி கலிமாச் சொன்ன ஒருவன் என்னதான் குற்றம் செய்தாலும் அதற்கு விசாரணையோ தண்டணையோ இல்லை யென விளங்குகின்றது.  இது தவறாகும்.  என்னதான் முஃமினாக இருந்தாலும் அவன் செய்த குற்றத்திற்காக விசாரிக்கபடாதவரை, அதற்காக தண்டனை பெறாத வரை அல்லது அதை அல்லாஹ் மன்னிக்காத வரை எவனும் சொர்க்கம் செல்ல முடியாதென்றும், கலிமாவை ஏற்றுக் கொண்ட லட்சக் கணக்கான பாவிகள் வேதனை செய்யப்பட்டதன் பின்னர் நரகை விட்டும் வெளியேற்றப்படுவதாகவும் பல்வேறு ஹதீஸ்களில் வந்துள்ளதே,

7- யார் வெள்ளிக்கிழமை தினத்தில் எண்பது தடவைகள் தொழுகின்றாறோ அவரது எண்பது வருடத்துப் பாவங்கள் மன்னிக்கப்படும்.  பக்கம் 721 இதுவும் மிகப்பலவீனமான ஹதீஸாகும். 

8- ஜூமைராத் இரவில் பள்ளியில் தங்குவதை ஆர்வ மூட்டுவதற்காக ' அல்லாஹ்வின் நாட்டத்தை விரும்பி யார் ஒருநாள் பள்ளியில் இஃதிகாப் இருக்கின்றாறோ அல்லாஹ் அவரை மூன்று கன்தக் தூரம் நரகை விட்டும் தூரமாக்குவான் ஒவ்வொரு கன்தக்குக்கும் இடைப்பட்ட தூரம் வானம் பூமிக்கு இடைப்பட்ட தூரத்தை விட அதிகமானதாகும் என்று ஹதீஸில் உள்ளது'.  என எழுதி வைத்திருக்கின்றார்.  (அமல்களின் சிறப்பு பக்கம் 466).

இதையும் பலவீனமானதென்று தெரிந்து கொண்டே மௌலானா அவர்கள் ஜூமைராத் நிகழ்ச்சியை திறம்பட நடத்துவதற்காக இடம்பெறச் செய்துள்ளார்கள்.

9-யார் தினமும் ஸூரத்துல் வாகிஆவை ஓதி வருகின்றாரோ அவ ருக்கு வறுமையே வராது.  இப்னு மஸ்ஊத் அவர்கள் தன் பெண் மக்களுக்கு இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருந்தார்கள்.  யார் யாஸீன் ஸூராவை ஓதுகின்றாரோ அவரது முன்னைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ப: 292, 293) இவையும் ஆதாரத்துக்கு எடுக்க முடியாத பலவீனமானவையாகும்.

10- உங்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்லுமளவுக்கு அல்லது முனாபிக் என்று மக்கள் சொல்லுமளவுக்கு நீங்கள்
(சத்தமிட்டு) திக்ர் செய்யுங்கள். என்ற ஹதீஸ் அமல்களின் சிறப்பு நூலில் உள்ளது.  'சத்தமிட்டு' எனும் சொல் ஹதீஸில் இல்லாதிருந்தும் மௌலானா தமது தரீக்காவின் கூட்டு திக்ரை நியாயப்படுத்த அதை அடைப்புக்குறிக்குள் இட்டுள்ளார்கள். இந்த ஹதீஸூம் கடும் பலவீனமான ஹதீஸாகும் பார்க்க: (சிலிசிலா 518)

11- எனது புறக்கணிக்கப்பட்ட ஸூன்னத்துக்களில் ஒன்றை உயிர்ப்பிப்பவருக்கு நூறு ஷஹீத்களுடைய நன்மை கிடைக்குமென நபியவர்கள் கூறினார்கள்.  (126) இதுவும் தப்லீக்கில் அடிக்கடி கூறப்படும் ஹதீஸ் ஆனால் இது பலவீனமானது.  இதன் அறிவிப்பாளர் வரிசையில் இனந்தெரியாத சிலர் உள்ளனர்.  (மஜ்மஉஸ்ஸவாயித் 1-172)

12- யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என ஒரு தடவை சொன்னால் அவரது 50 வருட பாவங்கள் மன்னிக்கப்படுமென நபியவர்கள் கூறிய போது அவரிடம் 50வருட பாவங்கள் இல்லாதிருப்பின் ?? என தோழர்கள் கேட்க அவரது பெற்றோர் உறவினர்களுடைய 50 வருட பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள்.  (தப்லீக் தஃலீம் 596)

இந்த ஹதீஸ்படி ஒரு குடும்பத்தில் ஒருவன் மாத்திரம் இதை ஒரு தடவை சொல்லி விட்டு ஏனைய அனைவரும் அவர்களது ஆயுள் வரைக்கும் நினைத்த அனைத்துப் பாவங்களையும் செய்யலாம்?  இறுதியில் அனைவருக்கும் சொர்க்கம்தான்?  அப்படியானால் தொழுகை எதற்கு நோன்பு எதற்கு? ஹராம் ஹலால் எதற்கு?  இன்று கிருஷதவர்களின் கொள்கையும் இதுதான்.

சிந்தித்துப் பாருங்கள் ஒரு பலவீனமான ஹதீஸால் ஏற்படும் விளைவு என்னவென்று?  இதன்படி ஒருவர் ஒரு தடவை கலிமா சொல்லி விட்டு 50 வருடம் பாவம் செய்தால் மறுமையில் அல்லாஹ் அவரை நரகுக்கு அனுப்பும் போது ஜக்கரிய்யா மௌலானாவால் அவரைக் காப்பாற்ற முடியுமா?

இது போன்ற நூற்றுக்கணக்கான பலவீனமான ஹதீஸ்கள் இதில் இடம் பெறுகின்றன.  இவற்றுக்குப் பதில் புகாரி முஸ்லிமில் உள்ள ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களை இடம்பெறச் செய்திருக்கலாம் தானே. 

இப்படிக்கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் பலவீனமான ஹதீஸ்களையும் மக்களுக்கு ஆர்வமூட்டும் நோக்கில் சொன்னால் என்ன?: நல்லதுதானே எத்தனையோ அறபு நூல்களில் பலவீனமான ஹதீஸ்கள் இடம்பெறவில்லையா?  என பதிலளிப்பர்.  அறபு நூல்களில் பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பதை இவர்கள் ஆதாரமாகக்; கூற முடியாது.  ஏனெனில் அவை சில நூற்களில் இடம்பெற்றிருப்பினும் அவை மூல நூல்கள்.  பெரும் ஏடுகள்.  அறிஞர்களுக்கென எழுதப்பட்டவை இவற்றைப் படிப்பவர்களும் பெரிய பெரிய ஹதீஸ் பற்றி அறிந்த அறிஞர்களே. அவர்கள் அதில் இருப்பதை யெல்லாம் அப்படியே ஏற்கப்போவதில்லை.  தேடி ஆராய்ந்ததன்பின் பலவீனமானவற்றைப் புறந்தள்ளிவிடுவர்.  ஆனால் பாமரர்களுக்காக வேறு எத்தனையோ நூல்கள் உள்ளன.  பாமர அப்பாவி மக்களுக்குச் சொல்லும் விடயங்கள் உண்மைதானா? ஆதாரப்பூர்வமானவைதானா எனப் பார்த்துச் சொல்வது உலமாக்களின் கடமையல்லவா?  அவர்கள் - உலமாக்கள் இஸ்லாத்தையே சொல்கின்றனர் என்று எண்ணி ஆலிம்களை நாடி வரும் போது பலவீனமான, பொய்யான செய்திகளை இஸ்லாம் எனும் பெயரில் சொல்வது அவர்களுக்குச் செய்யும் நம்பிக்கைத் துரொகமல்லவா?  மோசடியல்லவா?.


இது மட்டுமின்றி தப்லீக் தஃலீம் தொகுப்பில் பலவீனமான பல ஹதீஸ்களைக் கூறிய மௌலானா அவர்கள் அந்த ஹதீஸின் நூலாசிரியரே அதன் கீழ் இந்த ஹதீஸ் பலவீனமானது, அறிவிப்பாளர் வரிசை சீரற்றது என்று கூறியிருந்தும் -- அதனை அறபியில் மாத்திரம் இடம்பெறச் செய்து விட்டு மொழி பெயர்ப்பின்போது அது பெயர்க்கபடாமல் இருட்டிப்புச் செய்யப் பட்டுள்ளது.  இதுவும் பாமர மக்களுக்குச் செய்த மற்றுமொரு நம்பிக்கைத் துரோகமாகும்.

ஆர்வமூட்டுவதற்காக பலவீனமானவற்றை மக்களுக்குக் சொல்லலாமென்ற கருத்தை ஒரு சிலரைத் தவிர ஏனைய அறிஞர்கள் ஏற்கவில்லை.  சில அறிஞர்கள் அவ்வாறு சொல்லியிருப்பினும் பல நிபந்தனைகளுடன்தான் சொல்லியிருக்கின்றனர். அதில் முதல் நிபந்தனை அகதா -இறை நம்பிக்கை பற்றிய, மறைவான விடயங்கள் பற்றிய தகவல்கள் கூறும் பலவீனமான ஹதீஸ்களை ஆர்வமூட்டும் நோக்கில் கூட கூற முடியாது என்ற ஒருமித்த முடிவில் உள்ளனர். எனவே இங்கு தொழுகையின் சிறப்பு பகுதியில் கூறப்பட்டிருக்கும் பலவீனமான ஹதீஸ்கள் மறைவான விடயங்கள் பற்றிப் பேசுபவையாகவே உள்ளன,.  சுவர்க்கத்தில் நடப்பவை, நரகத்தில் நடப்பவை, கப்ரில் நடப்பவை பற்றியெல்லாம் சொல்லும் ஹதீஸ் பலவீனமாயிருந்தால் அதை புறந்தள்ள வேண்டியது தான்.  ஒருபோதும் ஆதாரத்துக்கு எடுக்க முடியாது. . இது அனைத்து இஸ்லாமிய அறிஞர்களினதும் ஒருமித்த கருத்தாகும்.  தப்லீக் பெரியார்கள் இவ்விடயத்தில் மாறுசெய்கின்றார்கள்.

சரி இதைத்தான் விட்டு விடுவோம்.  இத்தோடு ஜக்கரிய்யா மௌலானா நிறுத்தித் கொண்டார்களா?  இவற்றுக்கு அடுத்த படியாக விளக்கவுரை எனும் பெயரில் ஆரம்பமாகும் கப்ஸாப்பகுதியில் ஆயிரக்கணக்கான முகவரியில்லாத சம்பவங்கள். .. ஒரு பெரியார்; சொன்னது, ஆரிபீன்கள் சொன்னது, சூபியாக்கள் சொன்னது, நல்லடியார்கள் வாழ்வில் நடை பெற்றது, உண்மைச் சம்பவம் எனும் பெயர்களிலெல்லாம் நவரசக் கதைகள், பெரியார்களின் சாத்தியமற்ற சாதனைகள், தூள் கிளப்புகின்றன.  அல்குர்ஆனையும் ஹதீஸையும் படிக்க வேண்டும் அதன் வழிநடக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் தமது உடல் பொருள் தொழில் போன்றவற்றைத் தியாகம் செய்து வரும் அப்பாவி மக்களின் நேரங்களை இப்படி முகவரியற்ற கப்ஸாக்களை வாசித்துப் பாழ்படுத்துவது தகுமா? அல்லாஹ்வுக்குப் பொருந்துமா?. 

இது ஒரு புறமிருக்க இந்தக் கதைகளும் கப்ஸாக்களும் நேரத்தைக் கடத்துவதற்காக அல்லது மக்களின் தூக்கத்தைக் கலைத்து விழிப்பையும் புத்துணர்ச்சியையும் தருவதற்காக என்று கூடச் சொல்லி சில வேளை நியாயப்படுத்தி விடலாம்.  ஆனால் இக்கதைகள் கொண்டுள்ள அபத்தங்கள், மார்க்க முரண்பாடுகள், நபிகளாருக்கும் உத்தம சஹாபாக்களுக்கும் இழுக்கை அவமானத்தை ஈட்டித்தரும் அவர்களை மறைமுகமாகக் கொச்சைப் படுத்தும் நிகழ்வுகள், இஸ்லாமிய அகீதா - இறை நம்பிக்கைக்கு மாற்றமான விடயங்கள் எல்லாம் இக்கதைகளில் மறைமுகமாகப் போதிக்கப்படுவதால் தான் இவற்றை காரசாரமாக விமர்சிக்க வேண்டியுள்ளது சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.


இதில் வரும் கப்ஸாக்களை இருபெரும் பிரிவுகளாக வகைப் படுத்தலாம்

1- பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நடைமுறைச் சாத்தியமற்றவை...

2-இஸ்லாத்திற்கு – அதன் ஓரிரைக் கொள்கைக்கு வேட்டு வைக்கக் கூடியவை. ....
புரிந்து கொள்வதற்காக சில உதாரணங்கள். ..

பகுத்தறிவு ஏற்காத சாத்தியமற்றவை சில....

தொழுகையில் உள்ளச்சம் இருக்க வேண்டியது உண்மைதான்; முஃமின்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருப்பார்கள் என்று அல்லாஹ் பிரஸ்த்தாபிக்கின்றான். நபி(ஸல்) அவர்களும் தொழுகையை உள்ளச்சத்துடன் தொழ வேண்டும் என்று போதித்திருக்கின்றார்கள்.  அவர்களை விட அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை.  அவர்களை விட பய பக்தியுடன் தொழுதவர்களும் எவருமில்லை.  இருப்பினும் நபியவர்கள் பயபக்தியுடன் தொழுவித்த போதே பின்னால் உள்ள மஃமூம்களின் செயற்பாடுகளையும் அவதானித்திருக்கின்றார்கள்.  நபியவர்கள் தொழும் போது பாதணியில் நஜீஸ் இருந்ததால் பாதணியைக்கழட்ட பின்னால் நின்றவர்களும் கழட்ட அதைக் கண்டு நபியவர்கள் தொழுகையின் பின் விசாரித்திருக்கின்றார்கள் (புகாரி 376)

அதே போல் நபியவர்கள் தொழுவிக்கும் போது பின்னால் உள்ளவர்கள் ஓதிய ஓதல்களைச் செவியுற்று தொழுது முடிந்ததும் அது பற்றி விசாரித்து விட்டு ஸூரத்துல் பாத்திஹாவைத் தவிர வேறு எதையும் தனக்குப்பின்னால் நின்று கொண்டு ஓத வேண்டாம் என்று போதித்துள்ளார்கள்.  (அபூதாவூத் 701, )

இதற்கு மாற்றமாக தஃலீம் தொகுப்பில் தொழுகையில் பெரியார்களின் பயபக்தி எனும் தலைப்பில் பல அர்த்தமற்ற சாத்தியமற்ற இன்னும்சொன்னால் முகவரியேயற்ற சம்பவங்கள் ஏராளம் ஏராளம்....

ஒரு சிலவற்றை மாத்திரம் தொட்டுக் காட்டுகின்றேன்.

1-ஹஜ்ரத் அலி (றழி)யின் சம்பவம் பிரபலமானதாகும் அவர்கள் உடம்பில் அம்பு தைத்து விட்டது.  அதை அவர்கள் தொழும் போது எடுத்து விடலாம் என்றெண்ணி அவ்வாறே செய்தனர் தொழுது முடிந்ததும் அம்பை எடுக்கவா வந்தீர்கள்?  என அலி (றழி) கேட்க நாங்கள் எடுத்து விட்டோமே என்றனர்.  (தொழுகையின் சிறப்பு 143)
இந்தப் பிரபல சம்பவம் எங்கிருந்து கிடைத்ததோ??? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

2-ஒரு பெரியாரின் உடலுறுப்பு பழுதடைந்து விட்டது.  அதை வெட்டியெடுக்க வேண்டியேற்பட்டது.  அவர் தொழ தக்பீர் கட்டியதும் அதை வெட்டியெடுத்து விட்டனர்.  அவருக்கு எதுவுமே தெரியவில்லை.  (தொழுகையின் சிறப்பு 144)

இந்தச் சம்பவங்களெல்லாம் முகவரியற்றவை, பிரமிப்பூட்டு வதற்காகச் சொல்லப்படுபவை என்பதில் சந்தேகமில்லை.
இப்படியெல்லாம் அம்பைஉடலிலிருந்து உருவியெடுப்பதையே அறிய முடியாதளவுக்கு தொழுகையில் லயித்தல் என்பது மனித சுபாவத்திற்கே அப்பற்பட்டது.  நபியவர்களுக்கே இப்படி யெல்லாம் ஏற்பட வில்லையே! ; இவற்றைப் பகுத்தறிவு கூட ஏற்க மறுக்கின்றதே...எப்படி? நபியவர்களுக்கே தொழுகையில் இப்படியானதொரு பக்தி ஏற்படவில்லை.  நான்தான் உங்கள் அனைவரையும் விட பக்தி மிக்கவன் எனவும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். அப்படியென்றால் ?....

நபியவர்களுக்கே ஏற்படாத பக்தி அலியவர்களுக்குஏற்பட்டதா ?
இப்பவடியொரு நிகழ்வு அலி(றழி)க்கு இடம்பெற்றதாக எவ்வித ஆதாரப்பூர்வமான தகவலும் இல்லை. 
இப்படியான சம்பவங்களை இவர்கள் புனைந்து சொல்வதற்கு மற்றுமொரு உள்நோக்கமும் உண்டு அதாவது வலிமார்கள், ஷேக்மார்களின் தொழுகை, வணக்கங்கள் நம்போன்ற பாமரர்களின் தொழுகை போன்றதல்ல.  அவை உயிரோட்டமுள்ளவை எனும் போலி பிரமையை பாமரருக்கு ஏற்படுத்தி அதன் மூலம் குருபக்தியை அதிகரிப்பதே இதன் உள்நோக்கம்.

தொடரும்...
 

உங்கள் கருத்துக்கள் - விமாசணங்களை எழுத

தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends