بسم الله الرحمن الرحيم

சூபித்துவத் தரீக்காக்கள்... 
அன்றும் இன்றும்

ஏ.சீ முஹம்மது ஜலீல் ( மதனீ )

Refer this Page to your friends

தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)

மூன்றாவது அடிப்படை . இல்மு திக்ரு .

ஆரம்பத்தில் அல்லாஹூத்தஆலா துன்யா ஆகிராவுடைய வெற்றியை தீனில் வைத்திருக்கின்றான் . தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை, நபி  ஸல் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறை . இந்த வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமு தாயத்திடத்திலும் வருவதற்கான ஒரு உழைப்பே தப்லீக் செய்யும் வேலை எனும் கோஷமே தப்லீக்கில் மூலை முடுக்கெங்கும் பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்யப்படும் . ஆனால் அங்கே அல்லாஹ்வுடைய கட்டளையும் நபி (ஸல் ) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையும் தான் போதிக் கப்படுகின்றதா ? என்பதே கேள்விக்குறியாகும் .
இல்மின் சிறப்பு பற்றி தப்லீக்கில் ' இல்முடைய மஜ்லிஸில் ஒரு ஸாஅத்து நேரம் அமர்ந்திருப்பது இந்த உலகம் உலகிலுள்ள வஸ்த்துக்கள் அனைத்தை விடவும் சிறந்தது 'என்றும் திக்ரின் சிறப்புப் பற்றி'திக்ருடையவன் உயிருடையவன் திக்ரற்றவன் உயிரற்ற பிணம்' என்றும் ஒவ்வொருத்தராக ஜமாஅ த்தில் எழுந்து இந்த வசனத்தைச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் .

இல்ம் என்றால் மார்க்க அறிவு என்று அர்த்தம் . மார்க்க அறிவெனும் போது அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்தவைகளுக்கே மார்க்க அறிவு எனப்படும் . இது தவிர இவற்றை சரி வரக் கற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் கலைகளுக்கும் இல்ம் என்று சொல்லப்படும் .

ஆனால் மார்க்க அறிவு பற்றி எந்தளவு குறுகிய கண்ணோட்டத்துடன் இவர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் சற்று விரிவாக அறிய வேண்டியுள்ளது. சுருங்கக் கூறுவதாயின் இவர்களிடத்தில் இல்ம்-- மார்க்க அறிவு அவசியம் என்று சொல்லப்படும், பேசப்படும் விடயங்களில் 25 சத வீதமானவை பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவும் . 25 வீதமானவை நபியவர்கள் எச்சரித்துச் சென்ற பித்அத்தான மௌட்டீக விடயங்களாகவும் இன்னும் 25 வீதமானவை சிர்க்கை - இணை வைப்பை வளர்க்கும், ஆதரிக்கும் விடயங்களாகவும் இருப்பதை அறியமுடிகின்றது . ஆக கால்வாசி தூய மார்க்க அறிவும் கால்வாசி பித்அத்துக்களும் இன்னும் கால்வாசி ஷிர்க்குக்குத் துணைபோகும் விடயங்களும் மற்றும் கால்ப்பகுதி பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் வழிவந்த செய்திகளையும் கலந்த கலவையால் உருவானதே தப்லீக் அமைப்பு எனலாம் இனி இவை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம் .

பலவீனமான, புனையப்பட்ட ஹதீஸில் உருவான இல்மு திக்ர் போதனை ...
ஸஹீஹ் என்றால் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும். நபியவர்களிடமிருந்து தாம் பெற்றதாக நேர்மையான, நினைவாற்றல் மிக்கஅறிவிப்பாளர்கள் எவ்வித குளறுபடிகளோ,மாற்றமோ இன்றி அறிவிக்கும் ஹதீஸ்களே ஆதாரப்பூர்வமாக ஹதீஸ் எனக் கொள்ளப்படும் .

இதற்கு மாற்றமான ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்களாகும். பலவீனமான ஹதீஸ்களை ஆதாரத்துக்கு எடுக்க முடியாது என்பதே ஹதீஸ்க்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். ஆனால் தப்லீக் பெரியார்களைப் பொறுத்த வரைக்கும் இது விடயத்தில் எவ்விதக் கவனமும் இல்லாது அலட்சியமாக நடந்து கொள்வதே அவர்களின் வழக்கமாகும் .

இவர்கள் போற்றிப் புகழும் ஸூபித்துவப் பித்தர்களில் ஒருவனான இப்னு அறபி என்பவன் ஹதீஸ் பற்றி என்ன கூறுகின்றான் பாருங்கள் ...
'எத்தனையோ ஹதீஸ்களை துன்யாவுடைய உலமாக்கள் ஸஹீஹ் என்று நினைத்து அமல் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் நாங்கள் கஸ்புடைய ஞான நிலையில் நபிகளை நேரடியாகச் சந்தித்து இந்த ஹதீஸை நீங்கள் சொன்னீர்களா உங்களுடையதுதானா ? என வினவும்போது இல்லையே ! என்று மறுத்து விடுவார்கள் . எனவே நேரடியாக நபியிடமிருந்து கிடைத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நாங்கள் அந்த ஹதீஸின்படி அமல் செய்வதை விட்டு விடுகின்றோம் . அவ்வாறே பலவீனமான ஹதீஸை துன்யாவுடைய உலமாக்கள் புறக்கணிக்கின்றார்கள் .ஆனால் நாங்கள் நபியிடத்தில் நேரடியாக சந்தித்து இது பற்றிக் கேட்ட வேளை இல்லையே நான் தானே அதைச் சொன்னேன் என்பார்கள் . எனவேதான் துன்யாவுடைய குறுகிய அறிவுள்ள இந்த ஹதீஸ்கலை உலமாக்களின் 'இந்த ஹதீஸ் பலவீனமானது .அது இட்டுக்கட்டப்பட்டது' எனும் பேச்சையெல்லாம் நாம் பொருட்படுத்துவதில்லை என்று உளறுகின்றான் .

இது போன்று தான் தப்லீக் உலமாக்களின் ஹதீஸ் பற்றிய அணுகுமுறையும் உள்ளது . பாமர தப்லீக் சகோதரர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு நபிவழியைத்தான் பின்பற்ற வேண்டும் எனும் வைராக்கியம் இருந்தாலும் கூட அவர்களுக்குப் போதிக்கப்படும் தவறான விளக்கங்களால் அவர்களும் இவ்விடயத்தில் ஒரு வகை அறிவீனத்துடனேயே செயற்படும் அவல நிலையைக் காண முடிகின்றது .

உதாரணத்துக்கு சில நிகழ்வுகள் ....

1- நான் தப்லீக் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த காலத்தில் ஓரு முறை வக்தை முடித்து விட்டு வீடு திரும்ப இருந்த வேளை. வக்து முடித்துச் செல்பவர்களுக்கு வாப்பஸ் பயான் எனும் ஒரு பயான் நடை பெறுவது வழக்கம் . அதனை நிகழ்த்த ஒரு கார்க்கூன் வந்திருந்தார் . எனக்கு நன்கு தெரிந்தவர் இன்றும் உயி;ரோடு இருக்கின்றார் . பெயரைக் கூறாது விடயத் தைத் கூறுகின்றேன் . இவர் தனது பயானில் உயர் பீட தப்லீக் பெரியார்கள் சொன்னதாக எங்களுக்குச் சொன்னசெய்தி...

'நாம் நபியவர்கள் மீது எப்படி மஹப்பத் வைக்க வேண்டு மென்றால் நபியவர்கள் சொன்னதாக, செய்ததாக எந்தச் செய்தியை அறிந்தாலும் - அது முடியுமா முடியாதா ? சாத்தியமா ? என்றெல்லாம் எதுவும் யோசிக்காது அதைத் செய்யத் துணிந்து விட வேண்டும். மாறாக அது புகாரியில் உள்ளதா ,முஸ்லிமில் உள்ளதா? ,மிஷக்காத்தில் உள்ளதா ? ஸஹீஹா, ளயீபா ? என்றெல்லாம் ஆராயக் கூடாது . இவ்வாறு துருவி ஆராய்வது நபியை முஹப்பத் வைக்கும் பக்திமான்களின் செயலல்ல ' என்று விளக்கம் கூறினார் .
(இதனை நேரில் கேட்ட சாட்சிகள் இன்னும் பலர் உள்ளனர் .)

2-இதே போன்று கொழும்பு பெரிய மர்கஸூக்கு டில்லி மர்க்கஸில் இருந்து 2002ம் ஆண்டு சில முக்கிய பெரியார்கள் வந்திருந்தனர் . இவர்கள் ஸஹீஹ்-ளயீபான ஹதீஸூக்கு ஒரு அதிசய விளக்கத்தைக் கொடுத்தார்கள் ..
.
பயானில் அப்பொரியார் சொன்னார் ' ஸஹீஹான ஹதீஸ் என் பது பால்த்தேனீர் போன்றது ,ளயீபான ஹதீஸ் சாதாரண தேனீர் போன்றது . பால்த்தேனீர் கிடைக்கா விட்டால் நாம் சாதாரண தேனீரைப் பருகுவதில்லையா ? அது போன்று தான் ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கா விட்டால் பலவீனமான ஹதீஸின்படி அமல்ச் செய்வதில் எவ்விதத் தவறும் இல்லை ' என்று திருவாய் மலர்ந்தார் . இன்னுமோரிடத்தில் ' ளயீபான ஹதீஸ் என்றால் என்ன தெரியுமா ? பெரிதாக ஒன்றுமில்லை . அதை அறிவித்த அறிவிப்பாளர் எப்போதாவது காலில் செருப்புப் போடாமல் நடந்திருப்பார், எப்போதாவது நின்று கொண்டு தண்ணீர் குடித்திருப்பார் . அதனால் அவர் அறிவித்த ஹதீஸைப் புறந்தள்ளி விட்டார்கள். எனவே இவர் செய்த இந்தச் சிறிய தவறுக்காக நாம் அந்த ஹதீஸையே மறுத்து விட முடியுமா ? ' என்று வினாத் தொடுத்தார் . (இதனை நேரில் கேட்ட சாட்சிகள் பலர் இன்றும் உள்ளனர் .)

பலவீனமான ஹதீஸால் இல்மு திக்ர் போதனை...
இது போன்றே ஜக்கரிய்யா மௌலானா தனது அமல்களின் சிறப்பு எனும் நூலிலே ஏகப்பட்ட கதைகளையும் முகவரியற்ற கப்ஸாக்களையும் அள்ளி விதைத்து விட்டுப் பின்வருமாறு இயம்புகின்றார்கள் .

'(பளாயில்)சிறப்புகளைக் குறிப்பிடும் அறிவிப்புக்களைக் கூறுவதில் முஹத்திதீன்கள் மத்தியில் சற்றுத் தாராளமான நிலை இருக்கின்றது . எனவே சாதாரணமான பலவீனமான அறிவிப்புக்களும் இப்புத்தகத்தில்; கூறப்பட்டுள்ளன . சூபிய்யாக்களுடைய சம்பவங்கள் சரித்திர வகையைச் சார்ந்ததாகும் . அவை ஹதீஸின் அந்தஸ்த்தை விடக் குறைவானவை என்பதும் தெளிவான விடயமாகும் . எனவே இந்நூலிலுள்ள பலவீனமான ஹதீஸ்கள் சம்பவங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே'.. ( அமல்களின் சிறப்பு ப: 147 )

சிறப்புகள் பற்றி பேசும் ஹதீஸ்களில் மிக அதிகமான உலமாக்கள் பலவீனமானவற்றை அறிவிக்கவே கூடாது என்று ஒரேயடியாகத் தடை விதித்துவிட்டனர். ஒரு சில முஹத்திதீன்கள்; கடுமையான நிபந்தனைகளின் பின் பலவீனமான ஹதீஸ்களைக்குறிப்பிடுவது கூடும் என்கின்றனர். அவர்கள் விதித்த நிபந்தனைகளைப் பாருங்கள் .

1-ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களினால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயத்துக்கு வலுவூட்டும் வகையிலேயே ளயீபான ஹதீஸ் இருத்தல் வேண்டும் .
2-அகீதா -இறை நம்பிக்கை, மறைவானவை பற்றிய விடயமாகவோ, சட்டதிட்டங்கள் பற்றியதாகவோ இல்லாதிருத்தல் வேண்டும் .
3- ளயீபான ஹதீஸ் மூலம் செய்யும் அமலுக்குக் கூலி கிடைக்குமென்று உறுதி கொள்ளாதிருத்தல் வேண்டும் .

சிறப்பு பற்றிய ளயீபான ஹதீஸ்களில் இவ்வளவு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் ஜக்கரிய்யா மௌலானா இப்படிப் பொத்தம் பொதுவாக ' தாராளமாக ளயீபானவற்றை வைத்து அமல் செய்யலாம் என்று சொல்லியிருப்பது எப்படி நியாயமாகும் .

சூபியாக்களின் சம்பவங்கள் ஹதீஸை விடத் தரம் குறைந்தவை என்று சொல்லி விட்டு ' எனவே இதிலுள்ள ஹதீஸ்களும் சம்பவங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே 'என்று சொல்கின்றார் . ளயீபான ஹதீஸ்களை அறிவிக்க அறிஞர்களின் சலுகை இருக்கின்றது என நியாயம் கூறியவர் அதை விட தரம் குறைந்த சூபியாக்களின் சம்பவங்களை நியாயப்படுத்த எவ்வித காரணமும் கூறாது நழுவி ' சூபியாக்களின் சம்பவங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே'என்று மாத்திரம் கூறிமுடிக்கின்றார் .
 
இதிலிருந்து தெரிவது யாதெனில் தப்லீக் பெரியார்களானவர்கள் ஹதீஸ் கலை அறிஞர்கள் நபிமொழிகளை தரம்காணக் கடைப்பிடித்த வழி முறைகள் அனைத்தையுமே உதறித்தள்ளி விட்டு நமது கருத்தை, நோக்கத்தை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மாத்திரமல்ல இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடிய ஷிர்க்கான சம்பவங்களையும் தாராளமாகக் கூறத்தயங்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம் .

ஆனால் ஆச்சரியம் !!! இவையெல்லாம் இல்மு எனும் பெயரில் தப்லீக் சகோதரர்களால் பள்ளிவாயல்கள் தோறும் அரங்கேற்றப்படுகின்றன .

இது அமல்களில் சிறப்பில் இருக்கும் அந்தரங்கங்கள் அடுத்த தஃலீம் நூல்களான ஸதக்காவின் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு போன்றவற்றைப் பற்றி சொல்ல முடியாதளவுக்கு குப்பைகள் நிறைந்துள்ளன . அதிலுல்ல அனைத்து விடயங்களையும் ஒருவன் சரியென்று நம்பினால் அவனுடைய ஈமானே பறிபோய் விடும் என்று சொல்லும் அளவுக்கு இறைநம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் விடயங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆழமாகப் படித்தால் இவை அழகாகப் புலப்படும் . இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கிக் காட்டுவது முடியாத காரியமாதலால் முதலில் ஒவ்வொரு முஸ்லிமும் ஈமானுக்கு ஊறு விளைவிக்கும் ஷிர்க், பித்அத் பற்றி ஒரளவு அறிந்து வைத்திருந்தால் - ஈமான் எனும் டாச்லைட்டை உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு அதன் ஒளியில் இந்த இரு புத்தகங்களிலுமுள்ள விடயங்களை அலசினால் . பக்கத்துக்குப் பக்கம், பந்திக்குப் பந்தி ,வரிக்குவரி மார்க்க விரோதக் கருத்துக்களைத் தாங்கிய நச்சுக் கருத்துக்கள் வழி நெடுகிலும் இருப்பதை நீங்களாகவே ஏற்றுக் கொள்வீர்கள் .


இல்மு திக்ர் எனும் பெயரில் அரங்கேரும் பித்அத்துகள் ...

'பித்அத்து' என்றால் நபியவர்களிpன் வழிகாட்டலுக்கு மாற்றமாக மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படும் நூதன அனுஷ்ட்டானங்களைக் குறிக்கும்;. நபியவர்கள் எதை மார்க்க விடயமெனப் போதித்தார்களோ அவை மாத்திரமே தீன் ஆகும். நபியவர்கள் பித்அத் பற்றியும் அதன் தீய விளைவுகள் பற்றியும் மிக முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்குப் போதித்ததை நாம் அவதானிக்க முடிகின்றது . எந்த அளவுக்கென்றால் நபியவர்கள் ஏதாவது உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போது பித்அத் பற்றிய எச்சரிக்கையை விடுத்தவண்ணம் பின்வருமாறு தமது உரையைத் தொடங்குவார்கள்.

'புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே ..அவனைப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகின்றேன் . பேச்சில் சிறந்தது அல்லாஹ்வின் கலாமாகிய அல்குர்ஆனாகும் . வழிகாட்டல்களில் சிறந்தது நபி முஹம்மத் அவர்களின் வழிகாட்டலாகும் . அனைத்திலும் மிகக் கெட்ட விடயம் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பித்அத்துகள் - இஸ்லாத்தில் இல்லாத மௌட்டீகங்களாகும் . இவை அனைத்துமே பித்அத்தாகும் .பித்அத்துகள் அனைத்துமே வழிகேடாகும் . அனைத்து வழிகேடுகளும் நரகத்தின் பக்கமே கொண்டுபோய்ச் சேர்க்கும்' என்று கூறியே ஆரம்பிப்பார்கள் (அபூதாவூத் 1060 நஸாயி 3991) .

மேலும் நபியவர்கள் கூறினார்கள் ...
'எனது மார்க்கமான இஸ்லாத்தில் எவர் அதிலில்லாத ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றாறோ அது நிராகரிக்கப்பட்டதாகும்'; என்றும் 'எவர் நாங்கள் சொல்லாத ஒருகாரியத்தை மார்க்கத்தின் பெயரால் செய்கின்றாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்' எனவும் எச்சரித்துள்ளார்கள் . ( ஆதாரம் புகாரி முஸ்லிம் .)

எனவே பித்அத் எனப்படுவது சொல், செயல் எண்ணம் போன்ற மூன்றின் மூலமும் ஏற்பட முடியும். தப்லீக் அமைப்பினரிடம் அப்படி என்ன பித்அத்துக்கள் இருக்கின்றன. ???
தப்லீக் உஸூலின் பிரகாரம் இவர்கள் 3நாள் ,40 நாள் ,4மாதம் ஒருவருடம் என வெளிக்கிளம்பிச் செல்கின்றார்கள் . இந்த நாட்களை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்தீர்கள் என்று கேட்டால் துமாமா எனும் காபிரான உளவாளியை நபியவர்கள் 3 நாட்கள் கட்டிப்போட்டார்கள், மூஸா நபியை அல்லாஹ் தன்னுடன் உரையாட 40 நாட்கள் அழைத்தான், 4 மாதத்தில் கருவில் சிசுவுக்கு உயிர் கொடுக்கப்படுகின்றது என்று ஏதேதோ சம்பந்தமில்லாத காரணங்களையும் ஆதாரங்களையும் கூறி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். அப்படியென்றால் நபியவர்களின் தாய் அவர்களின் ஆறாவது வயதில் இறந்தார்கள். அதற்காக ஆறு வருடங்களும், நபியவர்கள் 40 வயதில் நபியானார்கள் என்பதற்காக 40 வருடங்களும் வெளிக்கிழம்பிச் செல்வார்களா ? எங்கள் தனிப்பட்ட நலனுக்காக நிர்ணயித்தோம் என்றால் விடயம் முடிகின்றது . ஆனால் அப்படிச் செய்ய மாட்டார்கள் . அதாவது சுற்றி வளைத்து தமது எண்ணம் தேவைக்கேற்ப நாட்களின் அளவை நிர்ணயித்து விட்டு அதற்கு மார்க்க சாயம் பூச முற்படுவதுதான் ஆச்சரியமான விடயம் . இனி விடயத்துக்கு வருவோம் ....

1- தப்லீக்கில் செல்ல தமது வசதிக்கேற்ப நாள் நிர்ணயிப்பதைத் தவறென்று சொல்ல முடியாது. அது அவரவர் வசதிக்கேற்ப நிர்ணயிக்கப்படும் விடயம் .ஆனால் இந்த தப்லீக் பெரியார்கள் மாதத்தில் ஒருவர் 3 நாள் வெளிக்கிழம்புவதே ஒரு மிகப்பெரிய வணக்கம் என்பது போன்ற பிரமையை உருவாக்கி 3 நாள் செல்லாவிட்டால் அவர் மாபெரியதொரு தெய்வக் குற்றத்தைச் செய்து விட்டார் என்பது போன்ற ஒரு போலி அச்சத்தை உருவாக்கி விடுகின்றனர் . 3நாள் செல்லா விட்டால் அல்லாஹ்வின் சாபம் வந்துவிடும், அவனது வேதனை நம்மைச் சும்மா விடாது . எதற்காகப் போகாது விட்டோமோ அந்தக் காரியமும் நிறைவேறாது என்பது போன்ற போலி பக்தியை, பயத்தை இவர்கள் பாமரர்களுக்குத் தோற்றுவிக்கின்றார்கள் .3 நாட்கள் சென்ற ஒருவர் அத்தியாவசிய வேலை நிமிர்த்தம் வீடு செல்ல ஏற்பட்டால் சில முக்கியஸ்த்தர்கள் ' அப்படிச் சென்றால் வக்து முறிந்து விடும் என்று கூறிப் பயமுறுத்துவதும் உண்டு. இதன் மூலம் இதுவும் தொழுகை நோன்பு போன்றதொரு வணக்கம் என்பது போன்று சித்தரிக்க முயல்கின்றனர் . இது ஒரு பித்அத் ஆகும் . வெறுமனே ஊரை விட்டு வெளிக்கிளம்புவது வணக்கமாகுமா? வெளிக்கிளம்பாமலிப்பது குற்றமாகுமா? இல்லையே!! அப்படியிருக்க ஏன் இவ்வாறு மார்க்கத்தின் பெயரால் இயக்கத்துக்கு ஆள் சேர்க்கின்றார்கள் ??
இன்று தப்லீக்கின் முக்கியஸ்த்தராக இருக்கும் காத்தான் குடியைச் சேர்ந்த எனது உஸ்தாது ஒருவர் அடிக்கடி இப்படிச் சொல்வார்..

' ஊரில் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும் அபாயம் ஏற்பட்டால் உடனே ஊரிலுள்ள ஜமாத் வெளியே நிற்கின்றதா ? அல்லது வெளி ஜமாஅத் ஊரில் வேலை செய்கின்றதா ? என்று பார்ப்பேன் . அப்படியிருந்தால் அல்ஹம்து லில்லாஹ் நிச்சயம் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது என்று எண்ணிக் கொள்வேன். ஏனென்றால் ஊரில் ஜமாத் நிற்கும் போது எவ்வித வேதனையையும் அல்லாஹ் அனுப்ப மாட்டான் என்று கூறுவார்கள்.

இதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொன்னார்கள் . இது பித்அத்தான பேச்சு இல்லையா? அப்படியானால் கொழும்பு தப்லீக் மர்க்கஸிலிருந்து தினமும் ஜமாத்கள் வெளிக்கிழம்பிக் கொண்டு தானே இருக்கின்றன . ஆனால் இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பிரச்சினைகள் குறைந்த பாடில்லையே . ஜமாஅத்கள் வெளிக் கிழம்பியிருந்த காலப்பகுதியிலேயே காத்தான்குடியில் பல பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளதே ... இன்னும் பல இடங்களில் இவ்வாறு இடம்பெற்றுள்ளதே...


தொடரும்...
 

உங்கள் கருத்துக்கள் - விமாசணங்களை எழுத

தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends