بسم الله الرحمن الرحيم

"வெற்றிக் கப்பல்"

Refer this Page to your friends

அலை மோதும் கடல்


இன்றைய முஸ்லிம் உலகம் இணைவைப்பாளர்களால் நிறைந்து வழிகிறது. ஒருவன் சிலைகளை அழைக்கிறான், மற்றொருவன் தர்ஹாக்களைப் பூஜிக்கிறான், மூன்றாமவன் அவனைப் போன்ற மனிதனுக்கு சிரம் வணங்குகிறான், நான்காமவன் மரத்தைப் புனிதப்படுத்துகிறான். அன்றைய ஜாஹிலிய்யாக் காலத்தில் அரபுக்கள், 'அரபுக்கள் அல்லாதவர்கள்' என்ற பேதமின்றி அனைவரும் இம் மௌட்டீகத்தில் மூழ்கிக் கிடக்கும் அவலத்தை, அகிலத்தைப் படைத்தவனான அல்லாஹ் பார்க்கிறான், இப் பூமியில் அன்று ஏகத்துவ வாதிகளாகத் திகழ்ந்தவர்கள் ஒரு சில கிருஸ்தவப் பாதிரிகளே...

அந்த அரபிய பிற்போக்கு வாதிகளுக்கு மத்தியில் உள்ள பிரமுகர்களுக்குத் தலைவராக விளங்கியவர், அம்ருப்னுல் ஜமூஹ் ஆவார். அன்று 'மனாப்!' என்ற பெயரில் ஒரு சிலை இருந்தது. அதற்கு முன் தலை வணங்குவதும், அதனிடம் பிரார்திப்பதும் அவரின் அன்றாட வழக்கமாக இருந்தது. மனாப் எனும் சிலை, துன்பங்களின் போது உதவக் கூடியதும், தேவைகளை நிறைவேற்றக் கூடியதும் என அவர் ஆழமாக நம்பினார்!

அது மரப்பலகையால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிலையாகும். அதை அவர் தனது மனைவி, குழந்தைகள், சொத்து செல்வங்களை விடவும் அதிகமாக நேசித்தார். அவர் அச்சிலையை அழகுபடுத்துவதற்கு, புனிதப்படுத்துவதற்கு, வாசனைத் திரவியங்களால் மணங்கமழச் செய்வதற்கென அதிக பணத்தை விரயம் செய்தார். அவருக்கு உலகக் காரியங்களில் அது மிகவும் விருப்பமாக இருந்தது. இவ்வாறே அவரது வாழ்நாளில் அறுபது வருடங்கள் கடந்தோடி விட்டன.

நபிகளார் (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களை மதீனா வாசிகளுக்கு அழைப்புப் பணி செய்வதற்காக அனுப்பிவைத்தார்கள். அம்ரிப்னு ஜமூஹுக்கு தெரியாமல் அவரது மூன்று பிள்ளைகளும், அவர்களது தாயும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். தனது தந்தைக்கு மதீனா வந்திருக்கும் புதிய அழைப்பாளர் - போதகர் பற்றித் தெரிவிப்பதற்கு முடிவு செய்து அவருக்கு குர்ஆனையும் ஓதி காண்பித்தனர். தந்தையே! மக்கள் அவரைப் பின்பற்றுகின்றனர், அவர் கூறும் கருத்துக்கள் மிகவும் சிறந்தவையாக இருக்கின்றன. அவரைப் பின்பற்றும் விசயத்தில் உங்களது அபிப்பிராயம் என்ன? என்று வினவினர்.

அதற்கு அவர், எனது கடவுள் மனாபுடன் ஆலோசனை செய்து, அது என்ன சொல்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அதன் பின்பே நான் ஒரு முடிவெடுக்க இயலும் என்று கூறினார். அதன் பின் அம்ர் சிலையின் முன்னால் எழுந்து நின்றார். (அக்கால மக்கள் தமது தனிப்பட்ட விடயங்களில் தம் கடவுளிடம் ஆலோசனை செய்யும் போது அவர்களது சிலையின் பின்னால் ஓர் முதியவரை நிறுத்தி அவர்களின் தேவைகளுக்கு அவரை பதிலளிக்க வைக்கும் ஒரு மூடப்பழக்கத்தைக் கொண்டிருந்தனர்!)

அம்ரு பெரும் மதிப்பு வைத்திருக்கக் கூடிய மனாப் எனும் சிலையிடம் ஊன்று கோலின் உதவியுடன் வந்தார், அவரது இரு கால்களில் ஒன்று குட்டையாக (ஊனமுற்றதாக) இருந்தது, அவர் அடுத்த காலில் சாய்ந்தவராக மிக மதிப்புடன் கௌரவத்துடன் சிலையின் முன்னால் நின்றார். பின் சிலையைப் புகழ்ந்து, மனாபே! சந்தேகமின்றி எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை நீ அறிந்துவைத்திருக்கின்றாய். புதியதொரு மார்க்கத்தை கொண்டு வந்திருப்பதாக மக்கள் பேசிக் கொள்ளும் அந்த முஹம்மத் என்பவரை நீ அறிவாய். அவர் உனக்குத் தொல்லை தர வேண்டும் எனும் நோக்கில்தான் இவ்வாறு சொல்லித் திரிகின்றார் போலும். என்னைத் தவிர ஏனையவர்கள் உனக்குத் தீங்கு செய்யவே விரும்புகின்றனர். நான் உன்னை வணங்குவதை விட்டும் அவர்கள் என்னைத் தடுக்க முயற்சிக்கின்றனர். இந்த விசயத்தில் மனாபே! 'எனக்குத் தெளிவைத் தா! எனக்கு அறிவுரை கூறு' என்றார். அதற்கு அந்த சிலை எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது. மறுபடியும் கேட்கிறார் எந்த பதிலும் இல்லை. 'நீ கோபமாக இருக்கிறாய் போலும்! உனது கோபம் தணியும் வரை நான் சில நாட்களுக்கு அமைதியாக இருக்கிறேன் அதன் பின்பு சொல்' என்று கூறி அங்கிருந்து சென்று விடுகின்றார்.

இரவு இருளால் மூடிக் கொள்கிறது. அச்சமயத்தில் அவரது பிள்ளைகள் யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து அந்தச் சிலையைத் தூக்கிச் சென்று ஊரின் கோடியில் இருந்த ஒரு கழிவுப்பொருட்கள் மற்றும் குப்பை கூழங்கள் போடப்படும் ஒரு குழியில் போட்டு விடுகின்றனர். காலையில் பொழுது விடிந்ததும் சிலைக்குக் காணிக்கை செலுத்த அம்ரு செல்கிறார் ஆனால் அங்கு சிலை காணப்படவில்லை. உரத்தக் குரலில் 'யார் எனது சிலையைக் எடுத்துச் சென்றது? உங்களுக்கு கேடு உண்டாவதாக!' என்று கூக்குரலிடுகின்றார், புலம்புகின்றார், தலையில அடித்துக் கொண்டு கூப்பாடுபோடுகின்றார். அவரது பிள்ளைகள் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கின்றனர். உடனே பதட்டமடைந்தவராக சிலையைத் தேட ஆரம்பிக்கிறார். இறுதியில் குப்பையில் அச் சிலையை தலை கீழாகக் கிடக்கக் காண்கிறார். உடனே அங்கிருந்து அதை வெளியேற்றி வாசனைத் திரவியங்களால் மணங்கமழச் செய்து மறுபடியும் அதற்குரிய இடத்தில் வைக்கிறார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக மனாபே! உமக்கு இவ்வாறு செய்தவர்கள் யாரென நான் அறிந்தால் அவர்களை கடுமையாகத் தண்டித்திருப்பேன் என்று சூளுரைக்கின்றார்.

அதைத் தொடர்ந்து அடுத்த இரவிலும் அவரது பிள்ளைகள் சிலையை எடுத்துச் சென்று அதே குப்பைக் குழியில் எறிந்தனர். காலையானதும் சிலை அதற்குரிய இடத்தில் இல்லாததைக் கண்டு கொதிக்கிறார், கோபமடைகிறார். மறுபடியும் அதனைக் குப்பையில் இருந்து வெளியேற்றி சுத்தப்படுத்துகிறார், மணம் பூசுகிறார். அதன் முன் மண்டியிட்டுப் பூஜை நடத்துகின்றார்.

இந்த நிகழ்ச்சி இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு நாள் இரவு தூங்கச் செல்வதற்கு முன் சிலைக்கு முன்னால் சென்று மனாபே! உனக்கு கேடு உண்டாகட்டும். உனக்குத் தீங்கிழைக்க விளையும் உன் எதிரிகளை ஏன் நீ தண்டிக்காமல் இருக்கின்றாய்? என்று கேட்டு விட்டு, பின் சிலையின் தலையில் ஒரு வாளை தொங்கவிட்டு உனது எதிரியிடமிருந்து நீயே தற்காத்துக் கொள்! என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விடுகின்றார்.

இரவானதும் மறுபடியும் அவர்கள் வழமை போல் அச்சிலையை எடுத்துச் சென்று, இறந்து போன ஒரு நாயுடன் இணைத்துக் கட்டி குப்பை கூழங்கள், இறந்த சடலங்கள் போடப்படும் ஒரு கிணற்றில் போட்டனர். முதியவர் காலையானதும் தனது அபிமானத்திற்குரிய சிலையைக் காணாததால் தேட ஆரம்பிக்கிறார். இரவு வாளுடன் வீற்றிருந்த அவரது கடவுள் இப்போது செத்த நாயுடன் பிணைக்கப்பட்டு, மலக்குழியில் பரிதாபமாய்க் கிடக்கும் அவலத்தைக் காண்கின்றார் . போதாக்குறைக்கு அவ்விடத்தில் நின்ற நரிக்கூட்டம் அந்த சிலையின் தலை மீது சிறு நீர் கழித்து அசுத்தப் படுத்திக் கொண்டிருந்தது. இதனைக் கண்ணுற்ற அவரது மனதில் அச்சிலை மீது ஒருவித வெறுப்பும் நம்பிக்கையற்ற நிலையும் உருவாகியது. உடனே செத்த நாயுடன் கிணற்றில் வீசப்பட்டிருந்த தனது கடவுளை நோக்கி இப்படிப் பாடுகின்றார்.

أرب بال الثعلبان برأسه ؟ لقد ضل من بالت عليه الثعالب

தன் தலை மீது நரிக்கூட்டம் சிறு நீர் கழிப்பதையே பார்த்துக் கொண்டிருக்கும் இது எப்படிக் கடவுளாக முடியும். நரிக்கூட்டம் அசுத்தப் படுத்திய இச்சிலை நிச்சயமாக வழிகேட்டிலேயே இருக்கின்றது.

பின்பு அவர் அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தில் நுழைகின்றார். மார்க்கத்தில் சிறந்த நல்லடியார்களில் ஒருவராகிவிட்டார்.

நெகிழ்வூட்டும் இந்நிகழ்ச்சியைப் பாருங்கள், இதன் பின்பு பத்ர் யுத்தத்திற்காக களத்திற்கு முஸ்லிம்கள் வெளியேறிச் செல்ல நாடிய வேளையில், அம்ரிப்னு ஜமூஹ் (ரலி) முதியவராகவும், உடல் ஊனமுற்றவராகவும் இருந்த காரணத்தினால் அப்போருக்குச் செல்வதை அவரது பிள்ளைகள் விரும்பவில்லை. அவர் போருக்கு செல்வதில் உறுதியாக இருந்ததால்; அவரது பிள்ளைகள் நபியவர்களிடம் விசயத்தை எடுத்துக்கூறி நபியவர்களின் போதணையின்படி அவர் போருக்குச் செல்லாமல் மதீனாவில் தங்க ஏற்பாடு செய்தனர்.

உஹத் போர் நடக்கப் போகிறது என்பதை அறிந்த அம்ரு (ரலி) போருக்குச் செல்ல ஆயத்தமாகிறார். அப்பொழுதும் அவரது பிள்ளைகள் தடுக்கின்றனர். உடனே அவர் நபியிடத்தில் சென்று அல்லாஹ்வின் தூதரே! உங்களுடன் போருக்குச் செல்வதை எனது பிள்ளைகள் தடுக்க முயல்கின்றனர் என முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்(நீங்கள் அங்கவீனராக இருப்பதால்) அல்லாஹ் உங்களுக்கு போரில் கலந்து கொள்ளாமல் இருக்க சலுகை அளித்திருக்கிறான் எனக் கூறினார்கள்.
அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த ஊன்றுகோலுடன் சுவர்க்கத்தில் உலா வருவதை விரும்புகிறேன் என உணர்வுபூர்வமாகக் கூறினார்.

இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் போரில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி வழங்கினார்கள், உடனே அவர் ஆயுதத்தைத் தனது கையில் ஏந்திக் கொண்டு அல்லாஹ்விடம் யா அல்லாஹ்! எனக்கு ஷஹாதத் எனும் வீர மரணத்தை அளித்துவிடு! என்னை எனது குடும்பத்தார் வசம் மீண்டுவரச் செய்து விடாதே! என்று பிரார்த்திக்கின்றார். போர் களத்தை அடைந்த போது இரு படைகளும் சந்திக்கின்றன, போர் உக்கிரம் அடைகிறது, அம்புகள் எய்யப்படுகின்றன. அம்ர் (ரலி) எதிரிகளின் படைக்குள் நுழைந்து சிலை வணங்கிகளைத் தீர்த்துக் கட்டவேண்டும் என்ற உறுதியுடன் வாளை ஏந்தியவராக நுழைந்து போராடுகின்றார். எதிரிகளை சந்திக்கிறார் ஷஹாதத் எனும் உயரிய மரணம் அவரைத் தழுவிக்கொள்கிறது. அல்லாஹ்வின் அருளைப் பெற்ற உயர் ஷுஹதாக்களுடன் அவரும் அடக்கம் செய்யப்படுகிறார்.

இச்சம்பவம் நடைபெற்று 46 வருடங்களுக்குப் பிறகு, முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஷுஹதாக்கள் அடக்கப்பட்ட உஹத் மலைப் பகுதி, வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுகிறது. கப்றுகள் வெள்ளத்தால் முழுமையாக மூழ்கி விடுகின்றன. ஷுஹதாக்களின் கப்றுகளைத் தோண்டியெடுத்து வேறிடத்தில் நல்லடக்கம் செய்வதற்கு முஸ்லிம்கள் எத்தனிக்கின்றார்கள். அம்ரிப்னு ஜமூஹ் (ரலி) அவர்களின் கப்ரைத் தோண்டிய போது அன்னார் தூக்கத்தில் இருப்பவரைப் போன்று காட்சியளித்தார். உடல் முழுமையாக இருந்தது. பூமி அந்த உடலின் எந்தவொரு பகுதியையும் சாப்பிடாத நிலையில் அவ்வுடலில் எந்தக் காயங்களும் ஏற்படாதவண்ணம் முழுமையாக இருந்தது. சத்தியத்தை விளங்கி அதன் பக்கம் மீண்டு விட்டதனால் அல்லாஹ் எப்படி அவரது முடிவை சிறந்ததாக ஆக்கினான் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே!

'லா இலாஹ இல்லல்லாஹ்' வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை ஏற்று செயல்படுத்தியதால், அல்லாஹ் தனது ஆற்றலை மறுமைக்கு முன்பு இவ்வுலகிலேயே அவர் விசயத்தில் நிகழ்த்திக் காட்டினான்.

சிந்தித்துப் பாருங்கள். அந்தக்கலிமாவுக்காகவே வானம் பூமி ஆகியன இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் அக்கலிமாவினை ஏற்ற இதயத்துடனேயே அனைத்து ஜீவ ராசிகளையும் படைத்திருக்கிறான். இதுவே சுவர்க்கம் நுழைவதற்குக் காரணமாக இருக்கிறது, அதற்காகவே சுவர்க்கம்- நரகம் படைக்கப்பட்டிருக்கிறது. முஃமின்- காஃபிர் என்றும் நல்லவர்-தீயவர் என்றும் அக்கலிமாவே பிரித்துக்காட்டுகிறது.

அல்லாஹ்வின் முன்னிலையில் நீர் எதை வணங்குபவர்களாக இருந்தீர்? இறைத் தூதர்களுக்கு எவ்வாறு செவிசாய்த்தீர்கள்? என அவன் கேட்கும் இரு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அடியானின் பாதங்கள் நகராது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

முன்னுரை

வெற்றிக் கப்பல a

Refer this Page to your friends