بسم الله الرحمن الرحيم

ரமழான் 27 இரவை விஷேடமாகச் சிறப்பித்தலும் பித்அத்தாகும்

Refer this Page to your friends

ரமழான் 27 இரவை விஷேடமாகச் சிறப்பித்தலும் பித்அத்தாகும்
ரமழானில் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள். அவர்கள் இறுதிப் பத்தில் வணக்க வழிபாடுகளில் அதிக ஈடுபாடு செலுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். 'எவர் ரமழானில் நம்பிக்கையோடும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குவாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும், இன்னும் எவர் லைலதுல் கத்ர் இரவில் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குவாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்'. என்பது நபி மொழியாகும். (புஹாரி, முஸ்லிம்).

இது லைலதுல் கத்ர் இரவிலும், ரமழானின் ஏனைய நாட்களிலும் நடந்து கொள்வதற்கான நபியுடைய வழிமுறையாகும். 27ம் இரவை லைலதுல் கத்ராக நினைத்துக் கொண்டாடுவது நபியுடைய வழிமுறைக்கு மாற்றமானதாகும், அதைக் கொண்டாடுவது வழிகெட்ட பித்அத்தாகும். லைலதுல் கத்ர் இரவு 27ம் இரவிலும் ஏனைய இரவுகளிலும் வர வாய்ப்பிருக்கின்றது.

மிஃராஜுடைய இரவைக் கொண்டாடுவதும் பித்அத்தே
இதுவும் வழிகெட்ட பித்அத்களில் உள்ளதாகும். சந்தேகத்திற்குக்கிடமில்லாமல் மிஃராஜ் பயணம் நபியுடைய தூதுத்துவத்தை உண்மைப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகும். மிஃராஜ் பயணம் தொடர்பாக அல் குர்ஆனிலும், ஸுன்னாவிலும் வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. எனினும் அந்த பயணம் மேற்கொள்ளப்பட்ட இரவு ஆதாரப்பூர்வமான எந்த ஒரு ஹதீpஸிலும் ரஜபா அல்லது வேறு மாதத்திலா எனத் தெரிவிக்கப்படவில்லை. சரி அப்படியே ஹதீஸ்களில் இடம்பெற்றிருந்தாலும் அதற்கென விஷேச வணக்க வழிபாடுகள் கொண்டாட்டங்கள் என நடத்துவது தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் நபிகளார் (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ அந்த நாளை இபாதத்துகள் புரிவது கொண்டு விஷேசப்படுத்தவோ விழாக்களை எடுக்கவோ இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதுத்துவத்தை முழுமையாக எத்திவைத்து விட்டார்கள். அவர்களது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றினார்கள். இந்த இரவு சிறப்பானதாகவும் விழாக்கள் எடுக்கப்படவேண்டிய இரவாகவும் இருந்திருந்தால் அதை நமக்குத் தெளிவுபடுத்திச் சென்றிருப்பார்கள்.

ஷஃபானின் 15 வது இரவை சிறப்பிப்பதும் பித்அத்தே
ஷஃபானின் 15வது இரவை விஷேசப்படுத்துவதும் அந்நாளில் நோன்பு நோற்பதும் வழிகெட்ட பித்அத்களில் உள்ளதாகும். ஷஃபான் இரவைப் புனிதப்படுத்துவதற்கோ, அந்த நாளில் நோன்பு நோற்பதற்கோ எந்த ஒரு வலுவான ஆதாரமும் இல்லை. இமாம் இப்னு ரஜப் (ரஹ்) உணர்த்தியது போல இது தொடர்பாக வந்திருக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதாகும். அவைகளை செயல்ப்படுத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த நாளில் விஷேச தொழுகைகள் இருப்பது சம்பந்தமாக வந்த அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டதாகும்.
ஸைது இப்னு அஸ்லமிடமிருந்து வழ்ழாஹ் அறிவிக்கும் செய்தியில், 'நாம் கண்ட எந்த ஒரு அறிஞரும் ஷஃபானுடைய 15ஆவது நாளைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை'.

இஸ்லாத்தைப் பாழாக்குபவை
ஒரு முஸ்லிமை மார்க்கத்தில் இருந்து வெளியேற்றக்கூடிய பல விஷயங்களை அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். அவனது சகோதர முஸ்லிமுடைய சொத்துகளை, செல்வங்களை, இரத்தத்தை அனுமதிப்பது இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றும் செயல்களில் நின்றும் உள்ளதாகும். இவைகளில் அபாயகரமான - அதிகமாக நிகழக்கூடிய 10 வெளியேற்றும் விஷயங்களை இங்கு தெளிவு படுத்துகின்றேன்.

1.வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துதல் முன்னர் தெளிவுபடுத்தப்பட்டது போல....

2. அல்லாஹ்வுக்கும் நமக்கும் மத்தியில் இடைத்தரகர்களை ஏற்படுத்துதல். அவர்களிடம் பிரார்த்தித்தல், அவர்களிடத்தில் பரிந்துரைக்க வேண்டுதல், அவர்களிடத்தில் காரியங்களை ஒப்படைத்தல் அனைத்துமே ஏகோபித்த கருத்துப்படி குப்ர் -இறை நிராகரிப்பாகும்.

3. இணைவைப்பாளர்களை காபிராக நினைக்காமல் இருத்தல், அல்லது அவர்கள் காபிர்கள் என்பதில் சந்தேகம் கொள்ளுதல், அல்லது அவர்கள் பின்பற்றும் கொள்கையைச் சரிகாணுதல் இவைகள் அனைத்தும் குப்ராகும். இஸ்லாத்தைத் தவிர வேறுமார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர் காபிராவார். அவர் யூதனாக இருக்கலாம் அல்லது கிறிஸ்துவனாக இருக்கலாம் அல்லது பௌத்த மதத்தைச் சார்நதவனாக இருக்கலாம். அல்லது வேறு எந்தக் கொள்கையை ஏற்றவனாகவும் இருக்கலாம். அவர் உறவினராகவோ அன்னியராகவோ எப்படி இருப்பினும் அவர் காபிரே.

4.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியை விட ஒரு சிறந்த பரிபூரண வேறு வழி இருப்பதாக நினைத்தல். அவர்கள் வழங்கிய தீர்ப்புகளை விட வேறு தீர்ப்புகளை சிறந்ததாகக் கருதுதல்

வேறு வேறு அசத்தியவான்களின் தீர்வுகளை சிறந்ததாக கருதுவானானால் அவன் காபிராவான். மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்கள், யாப்புகளை இஸ்லாமிய சட்ட திட்டங்களை விடச் சிறந்ததாகவோ அல்லது அதற்கு சமமாகவோ கருதுபவனும்;, அல்லது அவைகளை வைத்துத் தீர்ப்பு வழங்குவதை அனுமதிப்பவனும்; (அவன் மார்க்க சட்ட திட்டங்களை சிறப்பாக கருதினாலும் சரி, காபிராகவே கருதப்படுவான் .

21ம்-நூற்றாண்டுக்கு இஸ்லாமிய சட்ட திட்டங்கள் பொறுத்தமற்றதாக, நடைமுறைப்படுத்த முடியாததாக கருதுபவன் அல்லது முஸ்லிம்களின் பின்னடைவுக்கு இவைகள் தான் காரணம் என நினைப்பவன், அல்லது ஒரு மனிதனுக்கு தனது இறைவனுடனான தொடர்பை வாழ்க்கையில் ஏனைய பகுதிகளுக்கு நுழையாதவாறு குறிப்பிட்ட வட்டத்திற்குள் கட்டுப்படுத்துபவன், அல்லாஹ்வின் சட்டங்களை நிறைவேற்றுவதை இந்நவீன நூற்றாண்டில் பொறுத்தமற்றதாகக் கருதுபவன், திருடியவனின் கையை துண்டிப்பது, திருமணம் முடித்தவன் விபச்சாரம் செய்யும் போது கல்லெறிந்து கொள்ளுதல் போன்றவைகளை மறுப்பவனெல்லாம் காபிராகவே கருதப்படுவான்.

அவ்வாறே ஒருவன் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள், இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள், இஸ்லாம் அல்லாத சட்ட திட்டங்களைக் கொண்டு தீர்ப்பளிப்பதை அனுமதிப்பவன், அதை அவன் மார்க்க சட்ட திட்டங்களை விட சிறப்பாக கருதாவிட்டாலும் சரியே அனைவருமே காபிராவார்கள். ஏனெனில் அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி அல்லாஹ் தடுத்தவைகளை இவன் அனுமதிக்கிறான். ஒவ்வொருவரும் கட்டாயம் ஹராமென அறிந்திருக்க வேண்டிய விபச்சாரம், வட்டி, மது, ஏனைய மதங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் அனைத்துமே உலமாக்களின் ஏகோபித்த முடிவின் படி இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடியவையாகும்.

5. அல்லாஹ்வின் தூதர் கூறிய ஒன்றை ஒருவன் வெறுத்தால், அவன் அதை நடைமுறை படுத்தினாலும் சரி - காபிராகிவிட்டான்.
அல்லாஹ் தனது திருமறையில், '(ஏனெனில்) அல்லாஹ் இறக்கி வைத்ததை நிச்சயமாக அவர்கள் வெறுத்து விட்டார்கள் அதலால், அவர்களுடைய செயல்களையெல்லாம் (அல்லாஹ்வாகிய) அவன் அழித்துவிட்டான்'. (முஹம்மது 47:9)

6. அல்லாஹ்வின் தூதர் கொண்டு வந்த மார்க்கத்தில் ஒன்றை பரிகசித்தல். அது வழங்கப்படும் கூலியாகவோ அல்லது தண்டனையாகவோ இருக்கலாம் அவன் காபிராகி விட்டான். இதற்கு ஆதாரமாக பின்வரும் இறைவசனத்தில் அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது இறைத்தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்? என்று நீர் கேட்பீராக!. (நீங்கள் செய்யும் பரிகாசத்திற்கு வீண்) சாட்டு கூறவேண்டாம், உங்களின் விசுவாசத்திற்குப் பின்னர், திட்டமாக (அதனை) நீங்கள் நிராகரித்தே விட்டீர்கள்'. (தௌபா: 9: 66-65)

7.சூனியம் செய்தல். இதன் மூலம் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவை உண்டு பண்ணுதல், அல்லது ஒருவர் மற்றவரை வெறுக்குமாறு செய்தல். அல்லது அவர்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்த சூனியத்தைப் பயன்படுத்துதல். இதை எவன் செய்கிறானோ அல்லது செய்வதைச் சரி காண்கின்றானோ அவன் காபிராகி விட்டான். இதற்கு ஆதாரமாக:
அல்லாஹ் தனது திருமறையில், 'அவர்கள் இருவரும், நாம் இருவரும் சோதனையில் இருக்கிறோம் நீங்கள் (இச்சூனியத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம்) காபிராகி விடாதீர்கள் எனக்கூறியேயன்றி சூனியத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேயில்லை'. (அல்பகரா 2: 102)

8.முஸ்லிம்களுக்கு எதிராக இணைவைப்பாளர்களுக்கு உதவியாக, பக்க பலமாக இருத்தல். இதற்கு ஆதாரம்: அல்லாஹ் தனது திருமறையில், 'அவர்களை (காபிர்களை) உங்களில் எவர் நேசம் பாராட்டுகின்றார்களோ அவர்களும் அந்தக் (காபிர்)களில் உள்ளவர்களே ..'

9. மனிதர்களில் சிலர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். ஹில்ர் (அலை) எப்படி மூஸா நபி (அலை) யின் மார்க்கத்தை விட்டு வெளியேறினார்களோ அது போன்று சூபியாக்களில் சிலர் நமக்கு மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் அவசியம் இல்லை எனக் கருதுகின்றனர், இவர்கள் காபிர்கள். அல்லாஹ் தனது திருமறையில், 'எவர் இஸ்லாத்தை தவிர்த்து வேறு வழியை தனது மார்க்கமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாரோ அவர் மறுமை நாளில் பெரும் நஷ்டவாளர்களில் ஆகிவிடுவார்'. (ஆலு இம்ரான் 3: 51)

10.அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணித்தல். அதை கற்றுக்கொள்வதுமில்லை அதன்படி செயலாற்றுவதுமில்லை என்று இருப்பதும் இஸலாத்தை விட்டு வெளியேற்றும், இதற்கு ஆதாரமாக அல்லாஹ் தனது திருமறையில்: 'மேலும் தன்னுடைய இரட்சகனின் வசனங்களைக்கொண்டு நினைவுபடுத்தப்பட்டு, அதன் பின்னர் அவைகளைப் புறக்கணித்து விடுகிறவனை விட மிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக, நாம் (இத்தகைய) குற்றவாளிகளை (அவர்களின் முந்திய பாவத்திற்காக) தண்டிக்கக்கூடியவர்களாகவோம்'. (அஸ்ஸஜதா: 22)

நினைவூட்டல் ..

குற்றங்களிலேயே மிகபெரும் குற்றமும், பாரிய துரோகமும் தான் 'தொழுகையை விடுவதாகும'். தொழுகையை விடுபவர்கள் ஷைத்தானின் உதவியாளர்கள் அல்லாஹ்வின் எதிரிகள், முஃமின்களின் விரோதிகள், காபிர்களின் நண்பர்கள். அவர்கள் நாளை மறுமையில் 'பிர்அவ்ன், ஹாமான்' போன்ற கொடிய காபிர்களுடன் எழுப்பப்படுவார்கள். அவர்களுடன் நரகில் போட்டு புரட்டப்படுவார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஷகீக், அபூ ஹுரைரா (ரலி) போன்றோர் அறிவிக்கும் செய்தி: நபித்தோழர்கள் - அமல்களில் தொழுகையை விடுவதைத் தவிர வேறு எந்த ஒன்றையும் குப்ராகக் கருத வில்லை. (திர்மிதி, ஹாகிம்)

அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) கூறுகிறார்கள்... நாம் தொழுகையை விடுபவனைக் காபிரெனத் தீர்ப்பளித்தால் அவனுக்கு மதம் மாறியவனுடைய சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். அவனைத் திருமணம் முடித்துக் கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவனுக்குத் திருமண ஒப்பந்தம் நடந்தாலும் அவன் தொழவில்லையானால் அந்த நிகாஹ் செல்லுபடியற்றதாகும். திருமண ஒப்பந்தத்திற்குப்பின் அவன் தொழுகையைப் புறக்கணித்தாலும் அவனது நிக்காஹ் முறிந்து விடும். மனைவிக்கு அவனுடன் வாழ்வது ஹலாலாக மாட்டாது. அவன் கையால் அறுத்தால், அதனை சாப்பிடக்கூடாது அது ஹராம். அவன் மக்காவிற்குள் நுழைய முடியாது, அவனது உறவினர்களில் எவராவது மரணித்துவிட்டால் அவனுக்கு அச்சொத்துக்களில் எவ்வித பங்கும் இல்லை, அவன் மரணித்துவிட்டால் அவனை குளிப்பாட்டுவது கபனிடுவது அவனை தொழுவிப்பது முஸ்லிம்கள் அடக்கப்படும் இடங்களில் அடக்குவது அனைத்தும் தவிர்க்கப்படும். அவன் மறுமை நாளில் காபிர்களு(இறைநிராகரிப்பாளர்களு)டன் எழுப்பப்படுவான், அவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான், அவனது குடும்பத்தினருக்கு அவனுக்காக அருள் வேண்டி பாவமன்னிப்புக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க முடியாது. ஏனெனில் அவன் காபிர். தொழுகையை விட்டவனின் மரண வேளை மிகக் கேவலமானதும் பயங்கரமானதுமாகும்.

இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் பின்வரும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார்கள். ஒரு ஊரில் தொழுகையில் பொடு போக்கான, தினமும் பாவங்களில் ஈடுபட்டு வரும் ஒருவன் இருந்தான். இபாதத் விஷயங்களில் மிகவும் பராமுகமாக இருந்தான். அவனுக்கு மரணத்தின் இறுதி வேளை நெருங்கியது. உடனே உறவினர்கள் புடைசூழ அமர்ந்து கொண்டனர். அவனுக்குக் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தனர். அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தினர். 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று சொல் மகனே என்று வற்புறுத்தினர். இறுதியில் அவனது உயிர் பிரியும் வேளையில் அவன் கூறினான்...சரி நான் இக்கலிமாவைக் கூறுகின்றேன், ஆனால் இக்கலிமாவால் எனக்கு என்ன பிரயோசனம் ஏற்படப் போகின்றது? நான் வாழ்க்கையில் ஒரு முறை கூடத் தொழவில்லை. எவ்வித இபாதத்தும் செய்யவுமில்லை. இப்படியிருக்க இதனால் எனக்கு என்ன பலன் கிடைக்குமோ? என அங்கலாய்த்தான். பின்னர் அவனது உயிர் பிரிந்தது ..

ஆமிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த வேளை அவரது இறுதி மூச்சுக்களை எண்ணிக் கொண்டிருக்கும் வேளை... உயிர் தொண்டைக் குழிக்குள் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவரது குடும்பத்தினர் அவரை சூழ்ந்து கொண்டு அழுதனர். மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்த அவ்வேளையில் மஃரிப் தொழுகைக்கான அழைப்பு கேட்டது. அவரது உயிர் தொண்டைக்குழியை நெருங்கியது, ஸக்ராத் வேதனையோ மிக கடுமையாகியது. பாங்கோசையை கேட்டவுடன் தன்னைசூழ உள்ளவர்களுக்கு எனது கரத்தைப் பிடித்து அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவர்கள் எங்கே? எனக் கேட்டனர், மஸ்ஜிதுக்கு எனக்கூறினார். அவர்கள் நீங்கள் இந்த மோசமான நிலையில் இருக்கும் போதுமா? என வினவ அதற்கு அவர் ஆச்சரியத்துடன் அல்லாஹ் தூய்மையானவன் தொழுகையின் அழைப்பைக் கேட்டு நான் விடையளிக்காமல் இருப்பதா? எனது கையை பிடித்து அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவரைத் தூக்கி மஸ்ஜிதுக்கு அழைத்துச் சென்றனர் இமாமுடன் ஒரு ரக்அத்தை நிறைவேற்றினார் பின்பு ஸுஜுதில் இருக்கும் நிலையில் அவர் மரணித்துவிட்டார் ஆம் அவரது உயிர் ஸுஜுதில் இருக்கும் போது பிரிகிறது. இன்னா லில்லாஹ்...

அதாஉ இப்னுஸ் ஸாஈப் (ரஹ்) கூறுகிறார்கள், அபூ அப்துர் ரஹ்மான் என்பவர்கள் நோயுற்றிருந்தார்கள். அவரை நோய் விசாரிக்கச் சென்றோம் அவர் மஸ்ஜிதில் தான் தொழும் இடத்திலேயே இருந்தார் அவரது நோய் கடுமையாகியது அவரது உயிர் உடலை விட்டுப் பிரிய ஆரம்பித்தது. எனவே அவர் மீது பரிவு ஏற்படவே நாம் அவருக்கு ஒரு மென்மையான விரிப்பில் அமர்ந்து கொண்டால் நல்லதல்லவா? என்று சொன்னோம். அதற்கு அவர்கள்.. 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக, ஒருவர் எனக்கு சொன்னார், ஒருவர் தொழுகையை எதிர்பார்த்து தொழுமிடத்தில் இருப்பாரானால் அவர் தொழுகையிலே இருக்கிறார்' எனவே நான் இந்த நிலையில் இருக்கும் போது எனது உயிர் கைப்பற்றப்படுவதையே விரும்புகிறேன் என்று கூறினார்கள்.(அவ்வாறே அவரது உயிரும் கைப்பற்றப்பட்டது).

ஆம் எவர் தொழுகையை நிலைநாட்டி அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் பொறுமையுடன் இருப்பாரானால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தோடு அவரது முடிவு அமையும்.

ஸஃத் இப்னு முஆத் (ரலி) எனும் நபித்தோழர் நல்லடியாராகவும், அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவராகவும் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவராகவும், இரவு காலங்களில் ஸஹருடைய வேளையில் அழுது கண்ணீர் வடிப்பவராகவும், பகல் காலங்களில் இறைவனைத் தொழுவதும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவதுமாக இருந்து வந்தார்கள்.. 'பனூ குரைலா' எனும் யூதக் கோத்திரத்தாருடன் நடந்த யுத்தத்தில் அவருக்குப் பல காயங்கள் ஏற்பட்டன, தொடர்ந்து நோயினால் பீடிக்கப்பட்ட அவர் மரணத்தை தழுவிவிடும் இறுதித் தறுவாயில் இருந்து கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டபோது அன்னார் தனது தோழர்களுடன் அங்கு செல்ல ஆயத்தமானார்கள். ஜாபிர் (ரலி) சொல்கிறார், நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டவுடன் நாமும் அவர்களுடன் சென்றோம். எமது பாதணிகளின் வார்கள் அறுந்து விடுமளவுக்கு, நமது மேல் துண்டு வழுகிக் கீழே வீழ்ந்து விடுமளவுக்கு வேகமாக நபியவர்கள் நடந்ததைக் கண்டு நாம் ஆச்சரியப்பட்டோம். இது பற்றி நபியவர்களிடம் வினவியதும் அவர்கள் சொன்னார்கள், 'ஹன்லலாவைக் குளிப்பாட்டியது போல் வானவர்கள் இவரையும் குளிப்பாட்டும் விடயத்தில் நம்மை முந்திக் கொள்வார்களோ என அஞ்சுகிறேன்' என்று சொன்னார்கள். நாம் அவர்களது வீட்டை அடைந்தோம். அதற்கிடையில் அவரை மரணம் தழுவிக் கொண்டது. அவரது உடலைத் தோழர்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். அவரது தாய் அழுது கொண்டிருந்தார். நபியவர்கள் 'ஒவ்வொரு பெண்ணின் அழுகையும் போலியானதாகும் ஸஃதுடைய தாயின் அழுகையைத் தவிர'. என்று கூறினார்கள். நாங்கள் கப்ர் வரைக்கும் அவரது ஜனாஸாவைத் தூக்கிச் சென்றோம். நபியவர்கள் தாமே அவரைக் கப்றுக்குள் வைத்து நல்லடக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டார்கள். நாங்கள் அவரது ஜனாஸாவைச் சுமந்து செல்லும் போது அது மிகவும் பாரம் குறைந்ததாக இருப்பதை அவதானித்தோம். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடத்தில் 'அல்லாஹ்வின் தூதரே இது வரை இவ்வளவு இலகுவான ஒரு மய்யித்தை நாம் சுமக்கவில்லை' என்று அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் இறங்கிராத அளவுக்கு அதிகளவில் வானவர்கள் இவரது ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காக புடைசூழ முன்னெப்போதும் இல்லாதவாறு வந்து கொண்டிருக்கும் போது உங்களுக்கு எப்படி சுமப்பது இலகு இல்லாமல் இருக்கும்' எனக்கூறினார்கள் அவர்கள் உங்களுடன் அவரை சுமந்து வருகின்றனர். எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக ஸஃதுடைய உயிர் விடயத்தில் வானவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் அவரது மறுமையின் வருகைக்காக சுப சோபனம் கூறுகின்றனர். அல்லாஹ்வின் அர்ஷே இவரது மரணத்திற்காகத் தளம்பியது என்று கூறினார்கள்.

'நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையோர்களுக்கு ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதி அவர்களுக்கு விருந்தினர் தங்குமிடமாக ஆகிவிட்டது. அதில், அவர்கள் என்;றென்றும் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பார்கள், அதை விட்டு வேறிடம் செல்ல அவர்கள் விரும்ப மாட்டர்கள்'. (அல்கஹ்ப் 18: 108)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Refer this Page to your friends

மற்றப்பகுதிகள்

Refer this Page to your friends