بسم الله الرحمن الرحيم

தர்ஹாக்களில் என்ன நடைபெறுகிறது?

Refer this Page to your friends

அங்கு என்ன நடைபெறுகிறது?
சமாதி வழிப்பாட்டில் ஈடுபடக்கூடியவர்கள், அவர்களுடன் ஆடு, மாடு, கோழி, உப்பு, சீனி, தேயிலை என பல வகையான உணவுகள், பணம் போன்றவைகளை கொண்டு போய் அவருடைய நெருக்கத்தை பெறவேண்டும் என்பதற்காக அங்கு அடங்கப்பட்டிருப்பவருக்கு பூஜிக்கின்றனர். ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அடங்கப்பட்டிருப்பவர்களுக்காக அறுத்து அவர்களின் நெருக்கத்தைத் தேட முயல்கின்றனர். அக் கப்றுகளை வலம் வருகின்றனர், அந்த மண்ணில் விழுந்து புரளுகின்றனர், அதை தேய்த்துக் கொள்கின்றனர், அதை தங்களோடு எடுத்து வருகின்றனர், தங்களது தேவைகளை நிறைவேற்றித் தறுமாரும், துன்பங்களை நீக்குமாறும் வேண்டுகின்றனர்.


இன்னும் இப்படியான வழி தவறியவர்கள் 'மௌத்தாக்கள்' மீதும் அடக்கப்பட்டவர்கள் மீதும் சத்தியம் செய்வதையும் காணலாம். ஏதாவது ஒரு வியத்துக்காக சத்தியம் செய்யும் போது அல்லாஹ்வின பெயரில் சத்தியம் செய்யும் போது அதை ஏற்றுக்கொள்ளாத, உண்மைபடுத்தாத ஒரு நிலையும், அவர்களின் வலியின் பெயரில் அவ்லியாக்களின் பெயரில் செய்யும் போது அதை ஏற்றுக்கொள்வதையும் உண்மைப்படுத்துவதையும் காணலாம்.


சில இடங்களில் இவ்விஷயம் எல்லை மீறிச் சென்று அக்கப்ருகளில், தர்ஹாக்களை ஹஜ்ஜுச் செய்தல் எனும் ஒரு வணக்கத்தையும் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர், அதற்கென சில குறிப்பிட்ட வணக்க வழிபாடுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இன்னும் அதற்கென தனி நூல்களையும் இவ்வரம்பு மீறியவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வழிகேட்டின் புத்தகத்திற்கு 'தர்ஹாக்களை ஹஜ் செய்யும் வழி முறைகள்' என பெயரும் இட்டுள்ளனர். அக்கப்ருகளை புனித ஆலயமான கஃபாவுக்கு ஒப்பாக்கியுமுள்ளனர் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)


ஷிர்கிலும், நூதன வழிபாடுகளிலும் வரம்பு மீறிய இவர்கள் தர்ஹாக்களைத் தரிசிப்பதற்கு சில வழி முறைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள், தர்ஹாக்களை தரிசிக்கும் போது அங்கு அடங்கப்பட்டிருப்பவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாதணிகளைக் கழட்ட வேண்டும், வாயிற்காவலாளியின் அனுமதியைப் பெற்றே குப்பாவுக்குள் நுழைய வேண்டும்.

இவ்வாறான தர்ஹாகளில் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளார்கள், தர்ஹாவிற்கு வருகைதரும் முஸ்லிம்களை, மக்காவிலுள்ள 'புனித கஃபாவை வலம் வருவது போல' இவர்கள் இக் கப்ருகளை வலம் வருவதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்வார்கள். தரிசிக்கக்கூடிய பக்தர்கள் அந்த தர்ஹாவில் இருந்து பரக்கத் பெறுவதற்கு, பல வழிகளைக் கடைப்பிடிப்பர்கள். அவர்களிற் சிலர் கப்ரின் மண்ணை எடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் பரக்கத் தேடுவர். வேறு சிலர் கப்ரில் உள்ள 'வலீ'ய்யின் பெயர் பொறிக்கப்பட்ட உலோகத் தகட்டை முத்தமிட்டு கைகளால் தடவி அதனைத் தனது உடையிலும் உடலிலும் பூசிக் கொள்வர். தர்ஹாவுக்குள் நுழைந்த ஒருவருக்கு அந்த கப்ரிடம் பிரார்த்திப்பது மனஒருமையோடு அதனிடம் உதவி தேடுவது, மேலும் இதைப்போன்று அங்கு அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செலுத்தப்படக்கூடிய ஆச்சரியமான பல்வேறு விதமான வினோத வழிபாடுளையும் காணமுடியும்.


இதைவிட ஒரு படி மேலாக பெண்கள் தங்கள் குழந்தைகளை தூக்கி குலுக்கியவர்களாக கப்ரிலே போட்டு உறுட்டி ஷைகிடம் - குழந்தையின் பரக்கத்துக்காக பிரார்த்திப்பதையும் காணலாம். இதே போல் கப்ருகளை முன்னோக்கி சுஜுதில் விழுபவர்கள் எத்தனை எத்தனையோ.. இவைகளுக்காக வைக்கப்படக்கூடிய நேர்ச்சைகள் கணக்கில் அடங்கா! இன்னும் எத்தனையோ பேர் தங்களது நோய்கள் குணமடைவதற்கும், தேவைகள் நிறைவேறுவதற்கும் பல மாதங்களாக, நாட்களாக அங்கு தவம் இருக்கக்கூடிய பரிதாப காட்சிகள் எத்தனை எத்தனையோ. சில தர்ஹாக்களோடு இணைத்து யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியாக அறைகளையும் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்.


அங்கு தரிசிக்க வருவோர் தங்களின் உள்ளச்சத்தையும், அமைதியான போக்கையும் ஒரு விதமான மாற்றத்தையும் அழுகையின் மூலம் வெளிப்படுத்துவர். இவர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு சமாதிகளை, கடவுளாக்கி விட்டனர். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவனுடன் ஒரு நபியையோ, மலக்கையோ இணைத்து வணங்குவதையே பொருந்திக் கொள்ளாத, அதை மாபெரும் குற்றமாக கருதக்கூடிய நாயன், வேறு யாரையாவது இணையாக்கி வணங்கினால் எப்படிப் பொருந்திக் கொள்வான்? என்பதனை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தேங்காயை வழிபடும் கூட்டம்

மற்றப்பகுதிகள்

Refer this Page to your friends